3 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது சீனா

சீனாவில் உருவாக்கப்பட்ட 3 செயற்கைக் கோள்களை அந்த நாட்டின் லாங் மார்ச்-4பி ரொக்கெட் வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து சீன அரசுச் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ள செய்தியில், ஷாங்க்ஸி மாகாணத்திலுள்ள தையுவான் ஏவுதளததிலிருந்து 3 செயற்கைக் கோள்களுடன் லாங் மார்ச்-4பி ரொக்கெட் வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.

அந்த 3 செயற்கைக் கோள்களில் ஒன்றான இஸட்ஒய்-1 02டி, சீன விண்வெளி தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். பிற செயற்கைக் கோள்களுடன் தகவல் இணைப்பை ஏற்படுத்தி, பூமியிலுள்ள வள ஆதாரங்களைக் குறித்த துல்லியமான தகவல்களை இஸட் ஒய்-1 02டி செயற்கைக்கோள் பெற்றுத் தரும்.

பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நகர்ப்புற கட்டமைப்பு, போக்குவரத்து ஆகிய துறைகளுக்குத் தேவையான பல்வேறு தகவல்களைப் பெறுவதற்கு இந்த செயற்கைக்கோள் உதவிகரமாக இருக்கும். அதனுடன் மேலும் இரு சிறியவகை செயற்கைக் கோள்களை லாங் மார்ச்-4பி ரொக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.