2019: அரசியலில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்த ஆண்டு; ஒரு பார்வை

அகிலன்

அரசியலில் அதிரடியான பல திருப்பங்களை ஏற்படுத்திய 2019 ஆம் ஆண்டு விடைபெற்றுச் செல்லப்போகின்றது. தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுத் தராத மற்றொரு ஆண்டாக இது அமைந்திருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல், ஆட்சி மாற்றம் என்பன இவ்வருடத்தின் முக்கிய நிகழ்வுகள். உயிர்த ஞாயிறு தாக்குதல் ஆட்சி மாற்றத்துக்கு வலுவான ஒரு காரணமாக அமைந்துவிட்டிருந்தமையையும் மறுதலித்துவிட முடியாது. கடந்து செல்லப்போகும் வருடத்தைப் பற்றிய தெளிவான ஒரு மதிப்பீடே புதிய வருடத்தில் எமக்கான உபாயங்களை வகுத்துக்கொள்ள உதவும்.

2019 பிறந்த போது அரசியலில் ஒரு குழப்பநிலை காணப்பட்டது. 2018 அக்டோபர் 26 இல் இடம்பெற்ற அரசியல் சதிப்புரட்சி அப்போதுதான் முடிவுக்கு வந்திருந்தது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி என்ற முறையில், ரணிலைப் பதவி நீக்கம் செய்து, மகிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக்கியிருந்தார். கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் 52 நாட்கள் அதிகாரத்திலிருந்த மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம், நீதிமன்றத் தீர்ப்பால் நீக்கப்பட்டு மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்ற நிலையில்தான் கடந்த வருடம் பிறந்திருந்தது.

அதாவது, அரசியலமைப்புக்கு விரோதமாக அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் என்ற முறையில், மக்கள் மத்தியில் ராஜபக்‌ஷக்களுக்கான ஆதரவுத் தளம் வீழ்ச்சியடைந்திருந்தது. மறுபுறத்தில் 52 நாள் சதிப் புரட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தவர் என்ற முறையில், ரணில் குறித்த ‘இமேஜ்’ உயர்ந்திருந்தது. ரணிலின் செல்வாக்கும் அதிகரித்திருந்தது. அவர் மீதான அனுதாபம் ஒன்றும் காணப்பட்டது. இது சிங்கள மக்களிடம் காணப்பட்ட ஒரு உணர்வு. இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்குச் சென்றால், கடும் போட்டியொன்றைக் கொடுக்கக்கூடிய ஒருவராக ரணில் இருந்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல்

ஏப்ரல் 21 (2019) தாக்குதல் இந்த நிலையை முற்றாக மாற்றியது. ஐஎஸ் நடத்திய தாக்குதலில் 250 க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட அதேவேளையில் பெருமளவு ஆயுதங்கள், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. ஆனால், இந்தத் தாக்குதலுக்கும் ஐஎஸ் அமைப்புக்கும் இடையில் நேரடித் தொடர்பு எதுவும் இருக்கவில்லை. ‘தேசிய தௌஹீத் ஜமா-அத்’ என்ற உள்ளூர் அமைப்பே இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தது. ‘தேசிய தௌஹீத் ஜமா-அத்’ அமைப்பினால் இந்தியாவில் பயிற்றப்பட்டவர்களே இத்தாக்குதலை திட்டமிட்டு நடத்தியிருந்தார்கள். இவ்வாறான தாக்குதல் ஒன்று நடைபெறப்போகின்றது என்பதையிட்டு இந்தியப் புலனாய்வு நிறுவனங்கள் கொழும்பை முன்கூட்டியே எச்சரித்திருந்தன. ஆனால், இந்த எச்சரிக்கை ஏன் கவனத்திற்கொள்ளப்படவில்லை என்பதற்கான பதில் இன்று வரை இல்லை.

‘தேசிய தௌஹீத் ஜமா-அத்’ அமைப்பினர் கேட்டுக்கொண்டதையடுத்தே மூன்று நாட்களுக்குப் பின்னர் ஐஎஸ் அமைப்பு இச்சம்பவத்துக்கு உரிமை கோரியது. சில மாதகாலமாகவே சோர்ந்து போயிருந்த ஐஎஸ் அமைப்பு இத்தாக்குதலுக்கு உரிமை கோருவதன் மூலம் தம்மைப் பிரபலப்படுத்திக்கொள்ள முற்பட்டது. இச்சம்பவம் இலங்கையில் – குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது. ஐஎஸ் மிகவும் இரகசியமான வலை அமைப்புக்களைக் கொண்டதாகவும், அதி நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் திறனைக் கொண்டதாகவும் இருப்பதும், அதில் இணைந்திருப்பவர்கள் உயிரைத் தியாகம் செய்வதற்குத் தயாராக இருப்பதாகச் சொல்லப்பட்டதும் ஆபத்தான ஒரு நிலையில் நாடு உள்ளது என்ற உணர்வு சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டது.

இராணுவ ஆய்வாளர்களும் இதற்கு ஏற்றவகையான கருத்துக்களையே முன்வைத்தார்கள். அதாவது, ஐஎஸ் அமைப்பை முறியடிக்க பல வருடங்கள் செல்லலாம். ஏனெனில் அவ்வமைப்பு ஆழமாக வேரூன்றியிருக்கின்றது என்ற கருத்து அவர்களால் முன்வைக்கப்பட்டது. பலமான ஒரு அரசியல் தலைமையும், இராணுவக் கட்டமைப்பும் இருந்தால் மட்டுமே இதனை முறியடிக்க முடியும் என்பதுதான் அவர்களுடைய கருத்தாக வெளியிடப்பட்டது. ஐஎஸ் பயங்கரவாதத்தை முறியடிக்கக்கூடியவர் கோத்தாபயதான் என்ற கருத்து சிங்களவர்கள் மத்தியில் இதன்மூலம் விதைக்கப்பட்டது.

கோத்தாவின் வியூகம்

கோத்தாபய ராஜபக்‌ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோதுதான் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் முதலில் தூண்டிவிடப்பட்டன. கோத்தாவால் உருவாக்கப்பட்ட பொது பல சேனா போன்ற அமைப்புக்கள் முஸ்லிம்களின் வர்த்தக, அரசியல் மேலாதிக்க நிலையைத் தகர்ப்பதை இலக்காகக் கொண்டுதான் செயற்பட்டன. இதன்மூலம் முஸ்லிம்களின் அரசியல் – வர்த்தக மேலாதிக்கத்தை இல்லாதொழிக்கக்கூடிய ஒருவர் என்ற ‘பிம்பம்’ கோத்தா தொடர்பில் உருவாகியிருந்தது. முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் அனைத்தும், அவர்களுடைய வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள், உணவகங்களை இலக்காகக் கொண்டவையாகவே இருந்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

gota 2019: அரசியலில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்த ஆண்டு; ஒரு பார்வைஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதை இலக்காகக்கொண்டு இரண்டு அமைப்புக்களை 2015 ஆம் ஆண்டிலேயே கோத்தாபய உருவாக்கியிருந்தார். எலிய, வியத்மக என்பனவே அந்த இரண்டு அமைப்புக்கள். இரண்டுமே பெருமளவுக்கு சிங்கள புத்திஜீவிகளை உறுப்பினர்களாகக் கொண்டது. தற்போது பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கமால் குணரட்ண கூட வியத்மக அமைப்பின் முக்கியமான ஒரு உறுப்பினர். கோத்தாவின் வெற்றிக்காக உழைத்தமைக்காகத்தான் அந்தப் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. இந்த இரண்டு அமைப்புக்களும் கூட பௌத்த – சிங்கள பேரினவாதத்தை முன்னெடுப்பதை இலக்காகக் கொண்டவையாகவே இருந்தன. முஸ்லிம்களின் மேலாதிக்கத்துக்கு எதிரான நிலைப்பாடும் அதில் உள்ளடக்கம். குறிப்பாக முஸ்லிம்களின் சனத்தொகை வேகமாக அதிகரிப்பது சிங்கள மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் என்ற கருத்து அவர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கான பரப்புரைகள் மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டன.

ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என்பது கோத்தாபய தரப்பினர் வகுத்துக்கொண்ட வியூகங்களில் முக்கியமானது. அதனால்தான், ஏப்ரல் 21 தாக்குதல் நடைபெற்ற உடனடியாகவே இதனை எதிர்கொள்ளக் கூடியவர் கோத்தா மட்டும்தான் என்ற கருத்து சிங்களவர்களுக்கு ஏற்பட்டது. கோத்தாவும் அதற்கு ஏற்றவகையிலேயே கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஐஎஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான தன்னுடைய உபாயங்களை அவர் வெளிப்படுத்திய போது அவருக்கான சிங்களவர்களின் ஆதரவு அதிகரித்தது.

செல்லப்போகும் பாதை

சிங்கள மக்களின் வாக்குளால்தான் தன்னால் ஜனாதிபதியாக வரமுடிந்தது என்பதை தனது பதவியேற்பின்போது பகிரங்கமாக அறிவித்த கோத்தாபய, ஆனால், அனைத்து இன மக்களின் ஜனாதிபதியாக தான் செயற்படப் போவதாக அறிவித்தார். அது வெறும் போலியான அறிவிப்பு என்பதை தன்னுடைய வாயினாலேயே அவர் அறிவித்தார். “சமஷ்டியையோ அதிகாரப் பரவலாக்கலையே தரமுடியாது” என்பதை உறுதியாகக் கூறிய அவர், பெரும்பான்மையினரான சிங்கள மக்கள் அதனை விரும்பவில்லை. சிங்கள மக்கள் விரும்பாத எதனையும் தன்னால் செய்ய முடியாது எனத் தெரிவித்தார். அதனால், 13 ஆவது திருத்தத்தைக் கூட தன்னால் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்றார் அவர்.

ஆக, கோத்தாபயவின் காலத்தில் அரசியல் தீர்வு என்று யாரும் பேசிக்கொண்டிருக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். அவரைப் பொறுத்தவரையில் அபிவிருத்தி மட்டும்தான் இனப்பிரச்சினைக்கான தீர்வு. ஆனால், அந்த அபிவிருத்தியைச் செய்வதற்கான அதிகாரம் மத்தியிலேயே இருக்கவேண்டும் என்பது அவரது நிலைப்பாடு.

மறுபுறத்தில் ஜெனீவா தீர்மானங்களைத் தன்னால் ஏற்கமுடியாது என்பதையும் அவர் கூறிவிட்டார். அதாவது, போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறப்போவதில்லை என்பது அவரது உறுதியான நிலைப்பாடு. போர்க் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டவர்களை அமைச்சுக்களின் செயலாளர்களாகவும், திணைக்களத் தலைவர்களாகவும் நியமிக்கும் அவர், ஜெனீவா தீர்மானங்களை ஏற்றுக்கொள்வார் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. ஆக, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, காணிப்பிரச்சினை, இராணுவ ஆக்கிரமிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை போன்ற எதற்கும் தீர்வு கிடைக்கப்போவதில்லை.

இந்த நிலையில்தான் 2020 க்குள் நம் பிரவேசிக்கிறோம். 2020 இல் தமிழ் மக்கள் எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்ன? அவர்களுக்கான வாய்ப்புக்கள் என்ன? அவை குறித்து அடுத்த வாரம் பார்ப்போம்.