மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 03)- ந.மாலதி

பேராசிரியர் ரோபேர்ட் சப்லோஸ்கியுடன் மனித நடத்தையை புரிந்து கொள்வோம்

மூளை பற்றிய ஆய்வுகள் அண்மைய தாசாப்தங்களில் மிகப்பெரிய முன்னேற்றங்களை கண்டுள்ளது.மூளையை ஆய்வு செய்பவர்களில் ஒருவரான பேராசியர் ரோபேர்ட் சப்லோஸ்கி மூளை பற்றிய புதிய கண்டுபிடிப்புக்களை பொதுமக்களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்வதில் பிரபலமானவர்.

பொதுமக்களுக்காக அதிக நூல்களும் எழுதியிருக்கிறார்.2010இல் பல்கலைக்கழக மாணவர்களுக்காக இவர் கொடுத்த 25 விரிவுரைகள் இணையத்தில் உள்ளன. இவையும் பிரபலமானவை. 60 வயதான பேராசிரியர் அண்மையில் எழுதிய நூல் Behave. இதுபற்றி அவர் கொடுத்த ஒரு உரையிலிருந்து எடுத்த விடயங்களை தொகுத்து தருகிறது இக்கட்டுரை.அதாவது வாய்மொழியில் இருந்து உரைநடையாக்கமும் மொழியாக்கமும் செய்யப்பட்டது.

பேராசியர் தன்னுடைய உரையில் ஒரு உதாரணத்தை வைத்து பல விடயங்களை விளக்குகிறார்.இதோ அவர் கையாளும் உதாரணம்.நீங்கள் வன்முறை வெடித்துள்ள ஒரு பெரிய கூட்டத்தை பார்க்கிறீர்கள். உங்கள் கையில் ஒரு துப்பாக்கி இருக்கிறது. கூட்டத்திலிருந்து ஒருவர் உங்களை நோக்கி ஓடிவருகிறார். அவருடைய கையில் எதையோ வைத்திருக்கிறார். உங்களுக்கு அவருடைய முகபாவனை தெரியவில்லை. அவர் கையில் வைத்திருப்பது துப்பாக்கி என்று நீங்கள் முடிவு செய்கிறீர்கள். நீங்கள் அவரை சுடுகிறீர்கள். அவர் கையில் இருந்தது துப்பாக்கி அல்ல என்றும் அது ஒரு கைப்பேசி என்றும் பின்னர் தெரிகிறது. உங்களுடைய நடத்தையை எவ்வாறு விளக்கலாம்?

மனிதநடத்தையை மூளை சார்ந்த விஞ்ஞான முறையில் புரிந்துகொள்வது மிகவும் சிக்கலானது. ஒரு நடத்தையை விளக்குவதற்கு ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட விளக்கம் கிடையாது. ஒரு செகண்டிலும், ஒரு சில நிமிடங்களிலும், ஒரு சில மணித்தியாலங்களிலும், சில ஆண்டுகளுக்கு முன்னரும், பல மில்லியன் ஆண்டுகளின் முன்னரும் நடந்தவை எல்லாம் ஒருவரின் நடத்தையை தீர்மானிக்கிறது.

உங்களை சுடப்பண்ணுவதற்கு ஒரு செகண்டுக்கு முன்னர் உங்கள் மூளையில் நடந்தது என்ன? மனிதர்களுக்கு வன்முறை பற்றிய ஒரு குழப்பம் உண்டு. நாம் வன்முறையை விரும்பவில்லை. ஆனாலும் விரும்புகிறோம். ”சரியான” வன்முறை என்று நாங்கள் கணிப்பவற்றை விரும்புகிறோம், அதற்கு கைதட்டுகிறோம்.  சரியான வன்முறை என்று நாம் கருதுவதற்கு உதாரணமாக, வன்முறைகள் உள்ள வீடியோ காட்சிகளையும், வீரர்களின் வன்முறையையும் சொல்லலாம். 36130b5e2eecb6f6daeea4c3d65bb6ea0f8bb95a மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 03)- ந.மாலதி

அமிக்டலா எனப்படும் மூளையின் ஒரு பகுதியே வன்முறைக்கான பகுதி என்பது பொதுவாக அறிப்பட்டது. அமிக்டலா உண்மையில்  பயத்திற்கான பகுதி என்று மூளை ஆய்வு செய்பவர்களுக்கு தெரியும். வன்முறையின் போது மூளையில் நடப்பவற்றை தெரிந்து கொள்வதன் முன்னர், பயத்தின் போது மூளையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஆக அமிக்டலா பயத்திற்கான பகுதி. மூளையின் வேறெந்த பகுதிகள் அமிக்டலாவுடன் பேசுகின்னறன? இன்சூலர்கோட்டேக்ஸ் என்னும் ஒரு பகுதியும் அமிக்டலாவுடன் பேசுகிறது.

கெட்டுப்போன உணவை வாயில் போட்டவுடன் வயிற்றை குமட்டி ஓங்காளிக்க செய்யும் மூளையின் பகுதி தான் இந்த இன்சூலர்-கோட்டக்ஸ். ஏனைய மிருகங்களிடமும் இது உண்டு. எது நஞ்சான உணவு என்று அறிவதற்கு இது உதவுகிறது. ஏனைய மிருகங்களிடம் அதைவிட இன்சூலர்-கோட்டக்ஸ் வேறெந்த வேலையும் செய்வதில்லை.

மனிதர்களை பொறுத்த மட்டில் விரும்பத்தகாத உணவை நினைக்கும் போதும் குமட்டும் உணர்வை இந்த இன்சூலர்-கோட்டக்ஸ் வரச்செய்யும். அதுமட்டுமல்ல. மனித இனத்தின் பரிணாமத்தின் போது மூளை வேறோரு உணர்வையும் சேர்த்துக்கொண்டது. அதுதான் ”தர்மீக வெறுப்பு” (moral disgust).  இதற்கும் மூளையில் ஒரு பகுதியை உருவாக்க வேண்டுமல்லவா? ஆனால் அப்படி செய்யாமல், இதற்கான பகுதியாகவும் இன்சூலர்-கோட்டக்ஸை மூளை உபயோகித்தது.

ஆக மனிதர்களின் இன்சசூலர்-கோட்டக்ஸ் உணவு சார்ந்த குமட்டலுக்கும் தர்மீக குமட்டல் என்ற உணர்வுக்குமான இடமாக இருக்கிறது. இதனால் மனிதர்களிடம் இந்த இரண்டு உணர்வுகளையும், உணவு குமட்டல், தர்மீக குமட்டல் ஆகிய இரண்டையும், சேர்த்து குழம்பும் ஒரு தன்மை உள்ளது. இந்த இன்சூலர்-கோட்டக்ஸ் அமிக்டலாவுடன் பேசிவிட்டால் பயமும் தர்மீக குமட்டலும் சேர்ந்தே வரும்.Areas of the brain implicated in major depressive disorder MDD and pain disorders மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 03)- ந.மாலதி

ஒருவர் எது சரி எது பிழை என்று தீர்மானிப்பதற்கும் தர்மீக குமட்டல் துணை போகும். பிரச்சனை என்னவென்றால், தர்மீக குமட்டல் ஒருவருக்கொருவர் மாறுபடும். இன்சூலர்-கோட்டக்ஸ் தர்மீக குமட்டல் மாறக்கூடியது என்று பிரித்து அறியாது. வேறோரு மக்கள் கூட்டத்தை அருவருக்கத்தக்க பூச்சிகளாக மாற்றி, அவர்கள் மீது தர்மீக குமட்டல் உண்டானதாலேயே எத்தனையோ இனவழிப்புகள் நடந்திருக்கின்றன.

மூளையின் இன்னுமொரு பகுதி, முன்-கோட்டக்ஸ் எனப்படும். இது அண்மையில் பரிணாமம் அடைந்த ஒரு பகுதி. மனிதர்களிடம் ஏனைய மிருகங்களைவிட இது பெரிதாக உள்ளது. சரியானதை ஆனால் கடினமானதை செய்ய முன்-கோட்டக்ஸ் தேவை. இதுவே அமிக்டலாவுக்கு எச்சரிக்கை கொடுக்கும். ஓடிவருபவரின் கையில் உள்ளது துப்பாக்கிதானா என்று உறுதி செய்யும்படி தூண்டும். முன்-கோட்டக்ஸ் தான் ஒருவரை பொறுமையான இருந்து படிக்கவும் இன்னுமொருவருக்கு உதவுவதற்காக ஆபத்தான செயலை செய்யவும் தூண்டும்.

ஒரு செகண்டுக்கு முன், சுடுவது என்று முடிவு செய்யும் முன், இதுதான் நடந்திருக்கும். இப்போ ஒரு சில நிமிடங்கள் பின்தள்ளி பார்க்கலாம். ஒருசில நிமிடங்களின் முன்னர் சூழலில் நடந்தவை முக்கியமானவையே. இவற்றையும்விட துரிதமாக மூளையில் வேறும் சில விடயங்கள் இடம்பெறும். உங்களை நோக்கி ஓடிவருபவர் ஆணா, உருவத்தில் பெரியவரா, உங்களைவிட வேறு இனத்தை சேர்ந்தவரா என்பன போன்ற முடிவுகள் எடுக்கப்படும்.

நீங்கள் பொறுமையில்லாமல் முடிவு எடுப்பதற்கு இவையும் காரணமாக இருக்கும். இந்த தரவை உங்கள் மூளை ஒரு செகண்டுக்கும் மிகவும் குறைந்த நேரத்தில் எடுத்துக்கொள்ளும். கண் வழியாக இத்தரவு போய் மூளையில் பதிவதற்கு முன்னரே வேறு ஒரு குறுக்கு வழியாக இது அமிக்டலாவை சேர்ந்துவிடும்.

ஓடிவருபவரின் கையிலிருப்பது துப்பாக்கிதான் என்ற உணர்ச்சியான தரவை உங்கள் வழமையான பார்வையை தவிர்த்து அமிக்டலா அறிந்து கொள்கிறது. உங்கள் அந்நேர மனநிலையும் அமிக்டலா அத்தரவை பெறுவதில் தாக்கம் செலுத்தும். நீங்கள் களைப்புற்று இருந்தால் அல்லது பசியாக இருந்தால் இவை தாக்கம் செலுத்தும்.

இப்போ இன்னும் கொஞ்சம் பின்னோக்கி போகலாம். சில மணித்தியாலங்கள் பின்னோக்கி போகலாம். இப்போ சுரப்பிநீர்களின் தாக்கங்களை பார்க்க வேண்டும். ரெஸ்ரோஸ்ரறோன் (testosterone). அதிகமானோர் இச்சுரப்பிநீர் எல்லா கலாச்சாரங்களிலும் ஆண்களை வன்முறைக்கு தூண்டுகிறது என்று நினைக்கிறார்கள். இது பிழை. ஒரு நிலைமை பயமுறுத்தலானதா இல்லயைா என்ற தெளிவற்ற நிலையில் அதை பயமுறுத்தலாக புரிந்து கொள்வதற்கு ரெஸ்ரோஸ்ரறோன் ஒருவரை தூண்டுகிறது.

அதாவது ரெஸ்ரோஸ்ரறோன் நிலைமையை பெரிதாக்கி காட்டுகிறது. ஆனால் வன்முறையை தூண்டவில்லை. உண்மையில் ரெஸ்ரோஸ்ரறோன் இனது வேலை, எது ஒருவரின் சமூக அந்தஸ்தை உயர்த்துகிறதோ அதை செய்ய தூண்டுவதே. ஒரு சமூகத்தில் அன்பு காட்டுவதே ஒருவரின் சமூக அந்தஸ்தை உயர்த்தும் என இருந்தால், அச்சமூகத்தில் ரெஸ்ரோஸ்ரறோன் ஒருவரை மேலும் மேலும் அன்பாக நடக்க தூண்டும். இன்று பல சமூகங்களில் வன்முறை சமூக அந்தஸ்தை உயர்த்துவதாலேயே ரெஸ்ரோஸ்ரறோன் வன்முறையை தூண்டுவது போல தோற்றமளிக்கிறது. அதுதான் பிரச்சனை. (தமிழ் சினிமாக்களில் எது ஒருவரின் அந்தஸ்தை உயர்த்துகிறது என்று பார்த்தால் அது தெளிவாகவே புரியும்.)

இன்னுமொரு சுரப்பிநீரைப் பற்றியும் சொல்ல வேண்டும். ஒக்சிரோசின். தாயையும் குழந்தையையும் பிணைப்பதும், ஒற்றை துணையுடன் இருக்கும் இருவரை பிணைப்பதும் ஒக்சிரோசின் சுரப்பிநீர். இது சமூச்சார்பான நடத்தையை ஊக்குவிக்கும்.image 20160825 6609 2p309l மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 03)- ந.மாலதி

ஆனால் இவ்வாறு இது ஊக்குவிக்கும் சமூகசார்பு நடத்தை நம்மவர் என்று ஒருவர் கருதுபவர்களுக்கு மட்டுமே. மற்றவர் என்று கருதப்படுபவர் மேல் இதே ஒக்சிரோசின் எதிரான நடத்தையை, வன்முறையை, ஊக்குவிக்கும். அதாவது ஒக்சிரோசின் அதிகமாக இருந்தால் அது அந்நியர் மேல் வெறுப்பை வளர்க்கும். நம்மவர்-மற்றவர் என்ற பிரிவை பெரிது படுத்தும்.

இப்போ, இன்னும் கொஞ்சம் பின்தள்ளி போகலாம். சில மாதங்கள் பின் தள்ளி போகலாம். உங்களது அனுபவங்களும் நீங்கள் சுடுவீர்களா இல்லையா என்பதை தீர்மானிக்கும். இப்போ சில வருடங்கள் பின்னுக்கு போகலாம். நீங்கள் பதின்பருவத்தில் இருக்கிறீர்கள். இதுவும் ஒருவரின் வளர்ச்சியின் முக்கியமான காலம். முன்-கோட்டேக்ஸ் இனது வளர்ச்சி 25 வயதிலேயே முழுமையடைகிறது. ஆகையால் முன்-கோட்டேக்ஸ் வளர்ச்சி ஒருவரின் மரபணுவை விட அவருடைய சூழலிலும் அனுபவங்களிலுமே தங்கியிருக்கிறது.

இன்னும் கொஞ்சம் பின்னுக்கு போகலாம். குழந்தைப்பருவம். தாயின் வயிற்றில் இருக்கும் போது தாய்க்கு வரும் அழுத்தங்கள் அதற்கான சுரப்பிநீரை இரத்தத்தில் சுரக்கிறது. இது குழந்தையின் மரபணுவையே நிரந்தரமாக மாற்றும். சமூகசார்பு இல்லாத நடத்தையை ஊக்குவிக்கும் ஒரு மரபணு இருக்கிறது. ஆனால் ஒருவர் சிறுபிராயத்தில் துஸ்பிரயோகம் செய்யப்ட்டிருந்தால் மட்டுமே அது சமூகசார்பு இல்லாத நடத்தையை தூண்டும். அதாவது மரபணுவும் சூழலும் சேர்ந்தே இதை தீர்மானிக்கிறது. ஒரே மரபணு வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு விதமாக இயக்குகிறது.

இன்னும் பின்னோக்கி போகலாம். எமது மூதாதையர் என்ன செய்தார்கள். திறந்த வெளிகளில் கால்நடைகளை மேய்த்து வாழ்ந்தவர்களிடம் மானம் என்ற கருத்தும் போர்க்குணமும் அதிகம் இருக்கும். கால்நடைகளை கவருவதும் மீண்டும் போய் தாக்குவதும் இவர்களின் பழைய கலாச்சாரத்தில் இருக்கும். அக்கலாசாரத்தின் தாக்கம் இச்சமூகத்தில் பிள்ளை வளர்ப்பிலும் தாக்கம் செலுத்தும். கலாச்சார வித்தியாசங்கள் எவ்வாறு உருவானது.

சூழலே கலாச்சாரங்கள் வெவ்வேறு விதமாக உருவானதற்கு காரணம். இதற்கு சிறந்த உதாரணமாக சமயங்களை சொல்லலாம். பாலைவனங்களிலும் திறந்த வெளிகளிலும் வாழ்ந்தவர்களின் சமயங்கள் ஒரு கடவுள் சமயமாக இருந்துள்ளன. மாழைக்காடுகளில் வாழ்ந்தவர்கள் பல கடவுளரைக் கொண்ட சமயங்களை உருவாக்கினார்கள்.

நெற்பயிர் செய்கை கூட்டாக செய்யபட வேண்டுமாதாலால் கிழக்காசியாவில் நெற்பயிர் செய்தவர்கள் கூட்டு-வாழ்க்கையை பெரிதாக கருதினர். மலைப்பகுதிகளில் கோதுமை பயிர் செய்தவர்கள் குடும்பமாக செய்தார்கள். அதனால் தனியார் உரிமைகளை பெரிதுபடுத்தினார்கள்.

இப்போது பல மில்லியன் ஆண்டுகள் பின்னோக்கி போகலாம். மரபணுக்களின் பரிணாமத்தை பார்க்கலாம். பரிணாமம் வெவ்வேறு குரங்கின வகைகளுக்கு வெவ்வேறு அளவான வன்முறை குணத்தை கொடுத்திருக்கிறது. சில குரங்கினங்கள் வன்முறையே இல்லாமல் இருக்கின்றன. சில மிக அதிகமான வன்முறை குணத்தை கொண்டிருக்கின்றன. மனிதரின் வன்முறைக் குணம் நடுவில்  இருக்கிறது. மனிதர்களிடம் அதீதமான இரக்க குணமும் இருக்கிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.

இப்போ நீங்கள் ஏன் ஓடிவருபவரை சுட்டீர்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு, ஒரு செகண்டுக்கு முன்னர் என்ன நடந்தது என்பதிலிருந்து பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் என்ன நடந்தது என்பது வரை கணக்கிலெடுக்க வேண்டும். மனிதநடத்தையை பற்றி முடிவுகள் எடுப்பதில் மிகவும் கவனம் அவசியம். முக்கியமாக ஒரு நடத்தைக்கு மோசமான கருத்தை கொடுப்பதற்கு கூடிய கவனம் தேவை. நடத்தைக்கு தவறான கருத்தை கொடுத்ததால் நினைக்கவே பயங்கரமான பல செய்கைகளை மனிதர்கள் செய்திருக்கிறார்கள்.

யாவுமே மாறக் கூடியவை என்பதையும் மறந்து விடலாகாது. சூழல் மாறும். இன்று பாலைவனமாக இருக்கும் சகாரா ஒரு காலத்தில் வளமாக பிரதேசமாக இருந்தது. கலாச்சாரங்கள் மாறும். 17ம் நூற்றாண்டில் வைக்கிங் என்று அறியப்பட்ட சுவீடன் நாட்டினர் ஐரோப்பா முழுவதும் அழிவுகள் செய்தார்கள். கடந்த 200 ஆண்டுகளாக இவர்கள் எந்தவொரு போரிலும் ஈடுபடவில்லை. அவர்களின் கலாச்சாரம் மாறிவிட்டது. இவைற்றைவிட முக்கியமாக மூளை மாற்றமடையும். மனிதர்கள் மாறுவார்கள்.

         முற்றும்