வை.கோ சிறை செல்ல வேண்டியிருப்பதால், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. கடந்த 2009இல் சென்னையில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதால், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயற்பட்டார் என குற்றஞ்சாட்டப்பட்டு சென்னை பொலிஸ் நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னை அமர்வு நீதிமன்றில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, பின்னர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றிற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெ.சாந்தி முன்பாக விசாரிக்கப்பட்டு, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஒரு வருட சிறைத் தண்டனையையும், 10 ஆயிரம் ரூபா அபராதமும் தீர்ப்பாக வழங்கப்பட்டது. அபராத தொகையை உடனே செலுத்திய வைகோ மேல்முறையீடு செய்வதற்கு 1மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.

எதிர்வரும் 18ஆம் திகதி நடக்கவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக தரப்பில் மதிமுகவிற்கு ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் வைகோ போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

மக்களவை சட்டத்தின்படி ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டவர் தண்டனைக்காலம் முடிந்து மேலும் 6ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே வைகோ போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.