வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது மஹிந்த தேசப்பிரிய

தேர்தல்கள் ஆணைகுழு அதிகாரிகளுக்கும் சுகாதார துறை அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (16) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் இந்த சந்திப்பின் போது முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றைய தினத்தில் இடம்பெறாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இன்றைய தினத்தை (16) அரச, வங்கி, வர்த்தக விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டே வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை அதேபோல் கட்டுப் பணத்தை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை என்பன இன்றைய தினம் இடம்பெறாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் நாளை (17) மற்றும் நாளை மறுதினம் (18) ஆகிய நாட்களில் காரியாலய நேரத்தில் இந்த செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 8.30 முதல் மதியம் 12 மணிவரை வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியும் எனவும் கட்டுப் பணத்தை செலுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மார்ச் 19 ஆம் திகதியுடன் வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கை அதேபோல் ஆட்சேபனைகளை தெரிவிக்கும் செயற்பாடு என்பன நிறைவடைந்தன் பின்னர் அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளும் அனுப்பி வைக்கும் தரவுகளுக்கு அமைய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வாக்கெடுப்பு இடம்பெறும் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றையும் விடுத்துள்ளார்.

அதாவது சட்டரீதியாக அங்கிகரிக்கப்பட்ட ஒருவரை மாத்திரம் வேட்புமனு தாக்கல் செய்யும் மண்டபத்திற்குள் அழைத்துச் செல்ல முடியும் என அவர் அறியுறுத்தியுள்ளார்.

அதேபோல் வேட்புமனு தாக்கல் செய்யும் மண்டபத்திற்குள் வெளியில் ஆதரவாளர்கள் ஒன்று கூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு பொது மக்கள் கூட்டங்களை நடத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசியல் கட்சி உறுப்பினர்களை கேட்டுள்ளார்.