வீட்டுத்திட்டத்திற்கான நிதி வழங்கபடுமா பொதுமக்கள் விசனம்!2935 வீடுகள் அரைகுறையில்!!

வீட்டுத்திட்டத்திற்கான நிதி வழங்கபடுமா பொதுமக்கள் விசனம்!2935 வீடுகள் அரைகுறையில்!!

கடந்த ஆட்சிக்காலத்தில் வீடமைப்பு நீர்மாண அமைச்சராகவிருந்த சஜித் பிரேமதாசவால் அனைவருக்கும் வீடு எனும் தொணிப்
பொருளில் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட மாதிரி வீட்டுத்திட்டங்களிற்கான மிகுதி பணம் வழங்கப்படாமையால் வீடுகளை பூர்த்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வவுனியாவின் நான்கு பிரதேச்செயலகங்களை உள்ளடக்கிய வகையில் கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையூடாக 126 மாதிரி கிராமங்களிற்காக 2935 பயனாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

2018 ஆம் ஆண்டு 68 மாதிரி கிராமங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன் 2019 ஆம் ஆண்டு 58 மாதிரி கிராமங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான நிதி வழங்கல் நடவடிக்கைகள் படிமுறைகளாக வழங்கப்பட்டு வீடமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அதற்கான நிதி வழங்கல்கள் இடை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் வீட்டுத்திட்டங்களை பூர்த்திசெய்வதற்கான மிகுதி பணம் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் வீடுகள் கட்டிமுடிக்கப்படாமல் அரைகுறையான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.நீண்டகாலமாக வீடுகள் இல்லாமல் தற்காலிகவீடுகளில் வசித்துவந்த நிலையிலேயே குறித்த வீடுகள் எமக்கு வழங்கப்பட்டது. தற்போது அது இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அரசின் பணம் வீணாகிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.எனவே எமது நிலையை கருத்தில் கொண்டு முன்னைய அரசால் உருவாக்கபட்ட குறித்த திட்டத்தினை பூர்த்தி செய்வதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் முன்வைக்கின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர்.வவுனியாவில் இதுவரை பூர்த்திசெய்யப்படாத குறித்த மாதிரிகிராமங்களுக்கு அண்ணளவாக 1246 மில்லியன் ரூபாய் பணம் இன்னும் தேவைப்படுகிறது. இது தொடர்பாக தலைமை அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், அவர்களால் நிதி வழங்கப்படும் பட்சத்தில் குறித்த திட்டம் தொடர்ந்து செயற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இதேவேளை வவுனியா மணிபுரம் பகுதியில் பூர்த்திசெய்யப்பட்ட மூன்று மாதிரி கிராமங்கள் திறக்கப்படாதநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.