விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி தனியார் நிறுவனம் சாதனை

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் விண்வெளி ஓடம் பயன்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக அமெரிக்க மண்ணிலிருந்து அந்த நாட்டை சேர்ந்த வீரர்கள் சனிக்கிழமையன்று வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்றனர்.

டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் ஆகியோர் முதல் முறையாக காப்சூல் வடிவில் வடிவமைக்கப்பட்ட விண்கலத்தில் பயணித்தது மட்டுமின்றி, அவர்கள் நாசாவுக்கான புதிய வணிக மாதிரியையும் தொடங்கி வைத்துள்ளனர்.

தனியார் விண்வெளி நிறுவனத்துக்கு சொந்தமான விண்வெளி ஓடத்தில் மனிதர்கள் விண்வெளிக்கு பயணிப்பது இதுவே முதல் முறையாகும்.

இனி நாசா தனது விண்வெளி வீரர்களை சொந்த விண்கலத்தில், விண்வெளி ஓடத்தில் அனுப்பாது; மாறாக, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் ‘டாக்சி’ சேவையை பயன்படுத்திக்கொள்ளும்.

இந்த வெற்றியின் மூலம், பில்லியனரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை போன்று பல்வேறு தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பு விண்வெளித்துறையில் அதிகரிக்கும் என்று நாசா நம்பிக்கை தெரிவிக்கிறது.

தனது நிறுவனத்தின் ஏவூர்தி விண்வெளி வீரர்களை சுற்றுப்பாதைக்கு கொண்டுசெல்வதை பார்த்து தான் உணர்ச்சிவசப்பட்டதாக எலான் மஸ்க் கூறினார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம், நாசா தனது விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவதற்கு ரஷ்யாவை சார்ந்திருப்பதை முடிவுக்கு கொண்டுவரும் என்று கருதப்படுகிறது.

மிகவும் ஆவலோடு எதிர்நோக்கப்பட்ட இந்த விண்வெளி ஓடம் பூமியிலிருந்து விண்வெளியை நோக்கி சீறிப்பாய்வதை பார்ப்பதற்காக ஃ புளோரிடாவுக்கு வந்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “இதற்கு முன்னர் இருந்த அமெரிக்க அதிபர்கள் நமது விண்வெளி வீரர்களை சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்புவதற்கு வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி இருந்தார்கள். ஆனால், அது இனி நடக்காது. இன்று மிகச் சிறந்த விண்வெளி ஓடத்தின் மூலம் அமெரிக்க மண்ணில் இருந்து அமெரிக்கர்களை பெருமையுடன் விண்வெளிக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்று அவர் கூறினார்.