விடுதலை புலிகளின் வெற்றிக்காக ஒன்றிணைந்துள்ளோம்.!! வீடியோ இணைப்பு

விடுதலை புலிகளின் ஜனநாயக வெற்றிக்காக அனைத்து போராளிகளும் இன்று முதல் ஒன்றிணைந்து செயற்படவுள்ளோம். என ஜனநாயாக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி தெரிவித்தார்.

முன்னாள் போராளிகளை கொண்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளிற்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியா தனியார் விடுதியில் இன்று இடம்பெற்றது. இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து போராடி புணர்வாழ்வு பெற்ற போராளிகள் போருக்கு பின்னர் பல்வேறு தளங்களிலே செயற்பட்டிருந்தனர்.விடுதலை புலிகளின் ஜனநாயக வெற்றிக்காக பல்வேறு தளங்களில் செயற்பட்டுக்கொண்டிருந்த அனைத்து போராளிகளும்,சில கட்டமைப்புகளும் இன்று முதல் ஒன்றிணைந்து செயற்படவுள்ளோம்.

இந்த போராளிகட்டமைப்புகள் தமிழர்களது இனப்பிரச்சினைக்கு சாத்தியமான விடயங்கள் தொடர்பாக ஆராய்வது, அரசியல்கைதிகளின் விடுதலை, வேலைவாய்ப்பிலே போராளிகளை முன்னிலை படுத்துவது போன்ற விடயங்களை பிரதானமாக ஆராய்கின்றது.எங்களுடன் இருந்து,பயணித்த பல நண்பர்கள் இன்று காணாமல் போக செய்யப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பங்களின் வலிகளை உண்மையாக உணர்ந்தவர்கள் நாங்களே, அந்த வகையில் அவர்களது விடயம் தொடர்பாகவும் சாத்தியமான முறையில் நாம் ஆராய்வோம்.

தமிழர்களிற்கான இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்த சட்டத்தை ஒரு அடிப்படையான தீர்வாக கொண்டு எதிர்காலத்தில் செயலாற்றுவது சிறந்தது என நாம் கருதுகிறோம். நாங்கள் ஒன்றிணைந்திருப்பது தனியாக போராளிகளின் நலன்களை கருதி மாத்திரம் அல்ல. மாவீரர்குடும்பங்கள், போரில் அழிவடைந்த குடும்பங்கள்,போராட்டத்தை நம்பி பயணித்த வடகிழக்கு மக்கள் என அனைவருக்காகவுமே நாம் ஒன்றிணைந்துள்ளோம். இனிவரும் காலங்களில் இந்த கட்டமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரேயணியாக செயற்படும்.

அத்துடன் தமிழ்மக்களது அபிலாசைகள் தொடர்பாக இலங்கை அரசின் அனைத்து தரப்புகளுடனும் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்.இன்றய சூழலில் 75, 80 வயதுக்கு பின்னரும் புதிய கட்சிகளை ஆரம்பித்து தேர்தலை நோக்கி பலர் பயணிக்கிறார்கள்.இந்நிலையில் இள வயதிலே இந்த மக்களுக்காக அவயங்களை இழந்த போராளிகள் ஜனநாயாக வெற்றிக்காக ஒன்றிணைந்துள்ளார்கள். எனவே தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தலில் நிற்பது தொடர்பாக நாம் சிந்திபோம்.

இரண்டாம் உலக யுத்தித்திற்கு பிறகு தேசங்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய அமைப்புகள் அத்தனையும் குறிப்பிட்ட காலப்பகுதிகள் ஆயுதம் போராட்டத்தினை முடிவிற்குகொண்டுவந்து பாராளுமன்ற அரசியலிற்கூடாக தமது நோக்கங்களினை நிறைவேற்ற பயணித்திருக்கிறார்கள். அதில் இறுதியாக ஜனநாயக அரசியலை நோக்கி திரும்பியிருப்பது விடுதலை புலிகள் அமைப்பு. எனவே அந்தவகையில் எமது பிரச்சனைகளை முடிவிற்குகொண்டுவரமுடியுமா என்பதற்காக நாம் முனைப்புடன் செயல்படுகிறோம்.

மக்களுக்கு தேவையான அரசியலை இங்கே இருக்கும் கட்சிகளால் ஆற்றப்பட்ட பணிகளில் ஏற்பட்ட இடர்பாடுகள் காரணமாகவே போராளிகள் மீளவும் அரசியல் களத்திற்கு வந்திருக்கின்றார்கள். போராளிகளை கொண்டமைந்துள்ள இந்த அமைப்பு இலங்கையின் இறையாண்மைக்கும் நாட்டின் சட்டதிட்டங்களிற்கும் எதிராக எப்போதும் செயற்பாடாது. என்றார்.

குறித்த கலந்துரையாடலில் ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழர் தாயகக் கட்சி, தமிழர் தேசியக் கட்சி, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழர் விடுதலைப் புலிகள் மற்றும், சில கட்டமைப்புக்களும் ஒன்றிணைந்து செயற்பட முடிவு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.