விடுதலைப் புலிகளுடன் தொடர்பானவர்கள் என மலேசியாவில் கைதாவோர்

மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளைப் பேணி வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் மலேசியாவின் மாகாண எம்.எல்.ஏக்களான சாமிநாதன், குணசேகரன் உட்பட 7பேர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். பினாங்கு துணை முதல்வர் ராமசாமி உள்ளிட்ட மேலும் சிலர் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டது.

மலேசியா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை 2014ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தது.

தான் தலைமறைவாகவும் இல்லை. தன்னை கைது செய்தால், அதை எதிர்கொள்வதற்கு தான் தயார் எனவும் இராமசாமி தெரிவித்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பினாங்கு சிலாங்கூரில் மொத்தம் 3பேர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆசிரியர் ஒருவரும், மாநில அரசின் தகவல் தொடர்பு நிறுவன தலைமை செயலதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து மலேசியாவில் விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 12ஆக உள்ளது.

இதேவேளை திடீர் கைதுகள் குறித்து மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது.

இந்த சந்திப்பில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தமிழ் சினிமா பிரபல்யம் ஒருவருக்கு தொடர்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது என அந்நாட்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவின் அதிகாரி அயூப்கான் மைதீன் பிச்சையிடம்   கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு அயூப் பதிலளிக்கையில், குறித்த சினிமா பிரபல்யத்திற்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்படுமாயின், அவர் மலேசியாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் எனக் கூறினார்.

ம.இ.காவின் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், இலங்கையில் பல இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் மீது அனுதாபம் காட்டுவது எந்த வகையில் தவறாகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே அமைச்சர் குலசேகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர் ஒருவருடன் இருக்கும் படம் சமூகவலைத்தளங்களில் நேற்று(12) வைரலானது. இதையடுத்து குலசேகரன் கைது செய்யப்படலாம் என தகவல்கள் பரவின.

ஆனால் கோலாலம்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அயூப்கான் மைதீன் பிச்சை, இந்த ஒரேயொரு காரணத்திற்காக அமைச்சரை கைது செய்ய முடியாது எனக் கூறினார்.

அத்துடன் இலங்கையின் சிறுபான்மைத் தமிழ்ச் சமூகம் மீதான இரக்கத்தையும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரிப்பதையும் குழப்பிக் கொள்ளக்கூடாது என்றும் கூறினார்.

இதேவேளை, சட்டத்தின் அடிப்படையில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதே தவிர யாரையும் பலவீனப்படுத்த அல்ல என மலேசியப் பிரதமர் மகாதீர் விளக்கம் அளித்திருக்கின்றார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கவும், நிதி திரட்டவும் ஆதரவு தெரிவித்த 12 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் இச்செயல் மலேசியாவில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கின்றது.

இந்த நடவடிக்கை குறித்து பிரதமர் மகாதீர் கூறுகையில், இக்கைது நடவடிக்கையானது முழுவதும் பொலிசாரால் மட்டும் மேற்கொள்ளப்பட்டது. சட்டத்தின் அடிப்படையில்தான் நடைபெற்றது. இதில் அரசு எந்த விதத்திலும் தலையிடவில்லை. எந்தவொரு தரப்பையும் பலவீனப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கம் எதுவும் இல்லை என்றார்.

முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டிருக்கின்றது. அதில் 2 அமைச்சர்கள் பொலிசாரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்திருக்கின்றனர்.

இந்தக் கைது நடவடிக்கை குறித்து அமைச்சர் வேதமூர்த்தி கூறுகையில், இப்பிரச்சினையில் உண்மை என்ன என்பது நீதிமன்றில் தெரியவரும் என்றார்.