விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தினாராம்: சிறீதரன் இன்று விசாணைக்கு அழைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் ஆகிய இருவரையும் இன்று விசாரணைக்கு முன்னிலையாகுமாறு கிளிநொச்சிப் பொலிஸார் அறிவித்தல் அனுப்பியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள் என அவர்கள் மீது பொலிஸாரால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினமான கடந்த மார்ச் 8 ஆம் திகதியன்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள் பசுமைப்பூங்கா வளாகத்தில் நடத்தப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வில் விடுதலைப் புலிகளின் முதற்பெண் கடற்கரும்புலி அங்கயற்கன்னியின் உருவப்படமும், விடுதலைப் புலிகளின் சீருடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்ததாகக் கொக்காவில் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ அதிகாரி, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனடிப்படையில், கடந்த மார்ச் 13ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.

இந்த விசாரணை நடைபெற்று இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அதே விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைக்காக இன்று பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்குமறிக்குமாறு இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.