வாக்குறுதியை எழுத்துமூலம் உறுதிப்படுத்தினால் சஜித்துக்கு ஆதரவு வழங்கத் தயார் -கணேசன்

நான் ஜனாதிபதியாக வந்ததும் இரு மாதங்களுக்குள் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்குவேன் என வேட்ப்பாளர் சஜித் பிரேமதாச கூறியிருப்பினும் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதுபற்றி எந்தவொரு விடயமும் குறிப்பிடப்படவில்லை.

பட்டதாரிகள் விடயத்தில் அவர் கவனம் செலுத்தி இவ்வாறானதொரு வாக்குறுதியொன்றினை கூறியிருப்பது மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும், கடந்தகால அரசியல் தலைவர்களின் வாக்குறுதிகளை படிப்பினையாகக் கொண்டு அதனை எழுத்து மூலம் கோருகிறோம் என மட்டு.பட்டதாரிகள் சங்கத் தலைவர் கணேசன் அனிரன் தெரிவித்தார்.

மட்டு. ஊடக மையத்தில் முதன்முறையாக இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டில் பட்டதாரிகள் என்பவர்கள் பாரியதொரு கல்விச் சமூகம் எம்மை புறக்கணித்து இத்தேர்தலில் களமிறங்கும் எந்தவொரு வேட்பாளர்களையும் நாம் ஆதரிக்கப் போவதில்லை. எமது அபிலாசைகளை புரிந்துகொண்டு எந்தவொரு வேட்பாளர்களும் கூறாத பட்சத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எமக்கு வாக்குறுதியொன்றினை வழங்கியிருக்கிறார் .

கடந்தகால அரசியல் தலைவர்கள் தேர்தல் காலங்களில் குறிப்பிட்ட விடயம்போல் அல்லாது எதிர்வருகின்ற 09ஆம் திகதி மட்டக்களப்பிற்கு வருகின்ற வேட்பாளர் சஜித் பிரேமதாச வாக்குறுதி வழங்கியது போல் எழுத்துமூலம் அதனை உறுதிப்படுத்துவாராயின் அவருக்கான எமது ஆதரவினை நாம் வழங்கத் தயாராகவுள்ளோம்.

ஏமாற்று நடவடிக்கைகளை படிப்பினையாகக் கொண்டே இதனை நாம் கோருகின்றோம். ஆக்கபூர்வமான செயற்பாடுகளை அவரிடமிருந்து எதிர்பார்க்கும் அதேசமயம் எமக்கு ஏதுவாக எழுத்துமூல உத்தரவாதத்தினை அவர் வழங்காவிடின் இத்தேர்தலை நாம் புறக்கணிக்கவும் தயங்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.