வவுனியா விமானப்படை தள அபிவிருத்தியில் ரஷ்யாவின் அக்கறை

வவுனியா விமானப்படைத் தளத்தில், உலங்கு வானூர்திகளை பழுது பார்க்கும் பிரிவு ஒன்றை உருவாக்குவதில் ரஷ்ய அரசுத்துறை நிறுவனமாக ‘Rosoborone’ , பாதுகாப்பு அமைச்சிடம் ஆலோசனை கோரியுள்ளது.

உள்நாட்டு பிரதிநிதி ஊடாக இந்த அனுமதியை பாதுகாப்பு அமைச்சிடம் கோரியதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பிரிவிற்கு 19 மில்லியன் டொலர் முதலீடு செய்ய ரஷ்யா முடிவு செய்துள்ளது. 40 மில்லியன் டொலர் செலவில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்தது.

இந்தத் திட்டம் பயனற்றதொன்று என்றும், இதனால் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது என்றும் முன்னாள் விமானப்படைத் தளபதி கூறியிருந்தார்.

பெரிய தொகையினை செலவு செய்து இந்த முயற்சியை மேற்கொண்டாலும், ஏனைய நாடுகள் தங்கள் உலங்கு வானூர்திகளை இங்கு அனுப்புவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுபோன்ற மையங்கள் தற்போது இந்தியாவிலும், வியட்நாமிலும் இயங்குகின்றன.