வவுனியாவில் வரட்சி குடிதண்ணீர் இல்லை முன்னாள் அமைச்சருக்கு வாக்களித்து ஏமாற்றம் அடைந்துவிட்டோம்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தலின்போது எங்களிடம் வந்த அரசியல் வாதிகள் உங்கள் கிராமத்திற்கு வீதிகள், கிணறுகள், வசதிகள் வீட்டுத்திட்டங்கள் உட்பட அனைத்தும் செய்து தருகின்றோம் எமக்கு வாக்களியுங்கள் எங்களை நம்புங்கள் என்னை பார்த்து வைத்துக்கொள்ளுங்கள் நான் உங்களிடம் வராவிட்டால் எமது அலுவலகத்தின் கதவு உங்களுக்காக எப்போதும் திறந்துள்ளது. வந்து தட்டுங்கள் உங்களுக்கு சேவையாற்ற நாங்கள் காத்திருக்கின்றோம் என்று தெரிவித்த முன்னாள் வன்னி மாவட்ட அமைச்சரை நம்பி நாங்கள் வாக்களித்து விட்டு அவர்களினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் இன்றுவரையிலும் நிறைவேற்றப்படவில்லை இன்று நாங்கள் குடிதண்ணீர் இன்றி அவதியுற்று வருகின்றோம்.

இவ்வாறு பன்றிக்கெய்தகுளம் பகுதியில் வன்னி மக்கள் காப்பகத்தினால் இன்று
ஏற்பாடு செய்யப்பட்ட சுயதொழில் வழிகாட்டல் கலந்துரையாடலில் கலந்துகொண்ட பெண் தலைமைக்குடும்பப் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் தெரிவிக்கும்போது,
வன்னி மாவட்ட முன்னாள் அமைச்சர் உட்பட இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலங்களில் எம்மிடம் வந்து பல்வேறு வாக்குறுதிகள் அளித்திருந்தனர். எங்களுக்கு வாக்களியுங்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

அவர்களினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நம்பி நாங்கள் வாக்களித்துவிட்டு அவர்களினால் ஏமாற்றம் அடைந்துள்ளதுடன் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட பொதுக்கிணறு இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளது. எமது மக்களின் முயற்சியினால் கைவிடப்பட்ட பொதுக்கிணறு மீண்டும் புனரமைத்து தற்போது வரட்சியுடனான காலநிலையால் குடிதண்ணீர் இன்றி அங்கு வசிக்கும் 15 முதல் 20குடும்பங்கள் அவதியுறுகின்றோம்.

இவ்வாறு ஒவ்வொரு தடவையும் இடம்பெறும் தேர்தலினால் எமது கிராமத்திற்கு வரும் அரசியல் கட்சிகள் பலர் பல்வேறு வாக்குறுதிகளையும் பொய்யான உறுதி மொழிகளையும் வழங்கிவருகின்றனர். தேர்தல் முடிவுற்றதும் அவர்களினால் வழங்கப்படும் வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறந்து செல்கின்றது. வாக்களித்த மக்களின் வாழ்வாதாரம் நிறைவேற்றப்படவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியுடனான கால நிலையினால் குடிதண்ணீர் இன்றி வசித்து வருகின்றோம் பல தூரங்கள் சென்று குடிநீர் பெற்று வருகின்றோம்.

எமது சொந்தக்காணியில் கிணறு இல்லை பொதுக்கிணற்றில் தண்ணீர் இல்லை இவ்வாறு பல்வேறு அத்தியாவசியமான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. நிறைவேற்றித்தருவதாக உறுதி மொழி வழங்கியவர்கள் திரும்பி வரவில்லை எமது தேவைகள் தீர்க்கப்படவில்லை. நாளுக்கு நாள் எமது தேவைகள் நீண்டு செல்கின்றது. இன்றுவரையிலும் வறுமையில் வாடிவருகின்றோம்.

எம்மக்களுக்கு சரியான தலைமைகள் இன்றி வாழ்க்கையுடன் போராடி வருகின்றோம். கடந்த பல காலங்களாக நாங்கள் அரசியல் கட்சிகளால் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இவ்வாறான பொய் வாக்குறுதியளிக்கும் அரசியல் கட்சிகளால் எமது மனங்கள் வெறுப்படைந்து விட்டது எமது அடிப்படை வசதிகள் செய்து தரப்படவேண்டும் எமது வாழ்வாதரத்தைக் கட்டியெழுப்பும் பிரதிநிதிகளுக்கு ஆதரவு வழங்குவோம் எமது தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும். அத்தியாவசியமான குடிதண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும். இவ்வாறான பல்வேறு தேவைகள் எமது பகுதிக்குச் செய்யப்படவேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
DSCN6755 1 வவுனியாவில் வரட்சி குடிதண்ணீர் இல்லை முன்னாள் அமைச்சருக்கு வாக்களித்து ஏமாற்றம் அடைந்துவிட்டோம்.