வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைக்கு ஐ.நா உதவும் – கனா சிங்கர்

வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்வதுடன், அதற்கான நீதியையும் வழங்க வேண்டும் அதுவே எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்கள் நிகழாது தடுக்கும் என சிறீலங்காவுக்கான ஐ.நா இணைப்பு அதிகாரி கனா சிங்கர் நேற்று (30) வெளியிட்டுள்ள தனது அறிக்கையின் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக வலிந்து காணாமல்போனவர்கள் நாளான நேற்று வெளியிட்ட தனது அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பலவந்தமாக காணாமல் போவோர் தொடர்பில் சிறீலங்கா அரசு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. பல தேசிய ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டதும், ஐ.நா அறிக்கையும் அதற்கான ஆதாரங்கள்.

2010 ஆம் ஆண்டே ஐ.நா வலிந்து காணாமல்போனோர் தினத்தை அறிவித்தது. வலிந்து காணாமலாக்கப்படுவது மிகப்பெரும் குற்றமாகும். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அவர்களை தேடுவோருக்கும் தனது ஆதரவை தெரிவிப்பதற்காகவே ஐ.நா இந்த நாளை அறிமுகம் செய்தது.

ஆனால் சிறீலங்காவில் தற்போதும் பெருமளவான மக்கள் தமது உறவுகளையும், அதற்கான நீதியையும் தேடி வருகின்றனர்.

எனவே சிறீலங்கா அரசு அனைத்துலக நீதியை மதித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டு அது முழுமையாக செயற்பட வேண்டும்.

சிறீலங்கா அரசு வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதுடன், அதற்கான நீதியையும் வழங்க வேண்டும் அதுவே எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்கள் நிகழாது தடுக்கும். அதற்கான உதவிகளை ஐ.நா வழங்கத் தயாராக உள்ளது என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.