வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க முடியாது – ஜே.வி.பி

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் எமக்கு ஆதரவு அளிப்பதற்கான நிபந்தனைகளாக முனைவைக்கப்பட்ட பல நிபந்தனைகளை நாம் ஏற்றுக்கொண்டுள்ள போதும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பை நாம் மேற்கொள்ள மாட்டோம் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதன் கொள்கைபரப்புச் செயலாளர் விஜிதா கெரத் நேற்று (21) ஊடகவியலாளர்களிடம் பேசும்போது மேலும் தெரிவித்துள்ளதாவது:

பல அரசியல் கட்சிகள் நிபந்தனைகளை முன்வைத்துள்ளன. அவற்றில் பலவற்றை நடைமுறைப்படுத்த நாம் இணங்கியுள்ளோம். பயங்கரவாதச் தடைச்சட்டத்தை அகற்றுதல், படையினர் நிலைகொண்டுள்ள நிலங்களை விடுவித்தல் ஆகியவை அவற்றில் அடங்கும்.

ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பை மேற்கொள்வதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம். அதன் மூலம் தமிழ் மக்கள் தாம் இந்த மாகாணங்களில் பெரும்பான்மையாக வாழ்வதாக அனைத்துலக சமூகத்திற்கு காண்பித்து தனியாட்சிக்கான கோரிக்கைகளை முன்வைப்பார்கள்.

எனவே வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர முடியாது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு தொடர்பான நிபந்தனைகளை தமிழ்க் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலின் போதும் முன்வைக்கின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்திய இராணுவத்தின் வருகையின் மூலம் தமிழ் மக்களுக்கு ஏதேனும் சிறிய நன்மையாவது கிடைத்துவிடலாம் என்று எண்ணி அதற்கு எதிராக சிங்கள மக்களை திரட்டி 1989 களில் தீவிரமாக போராட்டங்களை மேற்கொண்ட அமைப்பே ஜே.வி.பி.

அதன் பின்னரும் வடக்கு கிழக்கு இணைப்பை இல்லாது செய்வதற்கு தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் ஜே.வி.பி மேற்கொண்டதும் நாம் அறிந்தவையே.