வடக்கு கிழக்கில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும்: மனோ பதிலடி

வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் தேர்தலில் போட்டியிடும் முனைப்புக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கியிருக்கும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கிறார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்.

வடக்கு – கிழக்குக்குள் வேட்பாளர்களைக் களமிறக்குவது குறித்து தமது கட்சி ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் –

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே போட்டியிடும் சாத்தியம் பற்றி, தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை எம்.பி. கூறியிருக்கிறார். இது பற்றி ஊடகவியலாளர்கள் என்னிடம் திரும்ப, திரும்பக் கேட்கிறார்கள்.

இன்று நேற்றல்ல, பல மாதங்களுக்கு முன்னமேயே, நான் இதுபற்றி கூட்டமைப்பு இங்கே வந்து தாராளமாக போட்டியிடட்டும். அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது எனக் கூறியுள்ளேன். இதை மாவை எம்.பியிடம் நேரடி யாகவே கூறியும் உள்ளேன்.

ஒருவேளை நம்முடன் இணைந்து போட்டியிட வேண்டுமென அவர்கள் விரும்புவார்களாயின், இது பற்றி அதிகாரபூர்வமாக எமக்குக் கூட்டமைப்பு எழுதுமானால், நாம் அது தொடர்பில் எமது அரசியல் குழுவில் கலந்துரையாடி எமது நிலைப்பாட்டை அறிவிக்கலாம்.

அதேபோல், வடக்கு – கிழக்குக்கு வெளியே போட்டியிடும் சாத்தியம் கூட்டமைப்புக்கு இருப்பதைப்போல, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடும் சாத்தியம், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இருக்கிறது. இது பற்றியும் நாம் ஆராய்கிறோம். எதிர்வரும் நாடாளுமன்றத்தில் எப்படி தமிழ் எம்.பிக்களின் தொகையை அதிகரிக்கலாம் என்பது பற்றி, கூட்டமைப்புடன் மட்டுமல்ல, அனைத்து அணி தமிழ்க் கட்சிகளுடனும் நாம் பேசவிரும்புகிறோம். இதுபற்றி ஜனவரி முதல் வாரத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி அரசியல் குழு கூடி முடிவெடுக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது