வடக்கில் வெள்ள அபாயம்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!!

ஸ்ரீலங்காவின் வடக்கு கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்வதற்காக சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, உள்ளிட்ட அனுராதபுரம் மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீலங்காவில் கடந்த சில வாரங்களாக நிலவிவரும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய மழையுடனான கூடிய காலநிலை காரணமாக 46 ஆயிரத்து 959 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 420 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வடமாகாணத்தில் 42 ஆயிரத்து 782 பேரும், கிழக்கு மாகாணத்தில் 99 ஆயிரத்து 918 பேரும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் மீண்டும் கடும் மழை பெய்யத்தொடங்கியுள்ளதால் பல தாழ் நில கிராமங்கள் வெள்ளப்பாதிப்பை எதிர் கொண்டுள்ளதுடன் கதிர் விளைந்த நிலையில் நெற்செய்கைகளும் பதிப்படைந்துள்ளது

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் மழை பெய்யாத நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் முதல் மீண்டும் கடும் மழை பெய்யத்தொடங்கியுள்ளது.

மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள தாழ் நில கிராமங்கள் நீரில் மூழ்கும் ஆபத்தை எதிர் கொண்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெள்ளம் காரணமாக தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்கள் சில நாட்களுக்கு முன்பாக வீடுகளுக்கு சென்ற நிலையில் மீண்டு கடும் மழை பெய்துள்ளது.

இதனால் குறித்த மக்கள் மீண்டும் இடம் பெயரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் நெற்செய்கையில் தற்போது கதிர்கள் உருவாகும் காலப்பகுதி என்பதால் உருவாகியுள்ள கதிர்கள் மழை காரணமாக உதிரும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்

கடந்த வாரம் பெய்த மழை காரணமாக 6000 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்செய்கை அழிவடைந்தமை குறிப்பிடதக்கது

இந்நிலையில் ஊவா மாகாணத்தில் 3 ஆயிரத்து 840 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 266 பேரும், மத்திய மாகாணத்தில் ஆயிரத்து 185 பேரும்வடமத்திய மாகாணத்தில் 10 ஆயிரத்து 775 பேரும், வடமேல் மாகாணத்தில் 2 ஆயிரத்து 465 பேரும், தென் மாகாணத்தில் 189 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50-75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.