வடகிழக்கு மாகாணங்கள் இன்று பிரிந்து நிற்பதற்கான காரணம் தமிழ் அரசியல் தலைவர்களே – தாயக இளைய சமூகத்தின் ஒருங்கிணைப்பாளர்

வடகிழக்கு மாகாணங்கள் இன்று பிரிந்து நிற்பதற்கான காரணம் தமிழ் அரசியல் தலைவர்களேயன்றி அங்குள்ள மக்கள் அல்ல என தாயக இளைய சமூகத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழன் ராகவாயது தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து அவர்,

தாயக இளையோர் சமூகத்தினால் தியாக தீபம் திலீபனின் 33வது நினைவு தினத்தினையொட்டி நடைபெறவுள்ள நடைபவனிக்கு தலைமையேற்கின்றேன்.எமது இந்த நடைபயணமானது தாயகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து தமிழ் தேசியத்தினை தாங்கி நிற்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து மக்கள் மத்தியில் ஒரு புரட்சியை உண்டாக்குவது.

இந்த நடைபயணத்தின் நோக்கமானது ஐந்து அம்சங்களைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.வரும் 21ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இருந்து ஆரம்பமாகி 26ஆம் திகதி நல்லூரில் உள்ள திலீபனின் நினைவுத்தூபியை சென்றடையும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் எந்தவித நிபந்தனைகளும் இன்றி விடுதலைசெய்யுங்கள், அபிவிருத்தி என்னும் பெயரில் தமிழர்களின் தாயகப்பகுதிகளில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயப்படுத்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும், தமிழர் தாயப்பகுதிகளில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை மாற்றியமைக்க முன்னெடுக்கப்படும் சகல நடவடிக்கைகளும் நிறுத்தப்படவேண்டும், போரினை காரணம் காட்டி இராணுவ மயப்படுத்தப்பட்டு திறந்தவெளி சிறைச்சாலைகளாகவுள்ள தமிழர் தாயகப்பகுதியில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வழியேற்படுத்தவேண்டும்.

இதுவரை காலமும் வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட எமது உறவுகளின் நிலைகுறித்து விபரங்களை வெளியிடுவதுடன் அவர்களை விடுதலைசெய்து அவர்களின் குடும்பங்களுடன் இணைய வழியேற்படுத்தவேண்டும்.

உள்ளுர் பொறிமுறையின் கீழ் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியாது என சர்வதேசம் உணர்ந்துள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் வரையிலும் அதன் பின்னரும் நடைபெற்றுவரும் தமிழர்கள் மீதான இனவழிப்பினை சர்வதேச பொறிமுறை ஊடாகவோ சர்வதேச விசேட தீர்ப்பாயத்தின் ஊடாகவோ விசாரணை செய்து நீதி வழங்குவதுடன் இதன்வழியில் தமிழர்கள் ஓர் தேசிய இனம்சுயநிர்ணயம்த தன்னாட்சி அடிப்படையில் அரசியல் தீர்வு நிறுவப்படவேண்டும்.

அந்தவகையில் வருகின்ற 21ஆம் திகதி எடுக்கின்ற இந்த முயற்சிக்கு தாயகத்தில் உள்ள அனைத்து இளையோர்களும் தமிழ் தேசியத்தின் கீழ் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்கள் மதத்தலைவர்கள்,பொது அமைப்புகள் என அனைவரும் எமக்கு ஆதரவளிக்கவேண்டும்.

இளைஞர்களை பொறுத்தவரையில் தாயகம் என்றால் அது இணைந்த வடகிழக்குதான்.நாங்கள் என்றும் அதனை பிரித்துப்பார்க்கவில்லை. இன்றைய காலகட்டத்தில் எந்த வேலைத் திட்டத்தினை செய்யும்போது கிழக்கில் உள்ளவர்களுடன் இணைந்தே மேற்கொள்கின்றோம்.

வடகிழக்கு இன்று பிரிந்த நிலையில் இருப்பதற்கான பிரதான காரணமாக இருப்பது எமது தமிழ் அரசியல் தலைவர்கள்தான் காரணமாகும்.இளைஞர்களோ மக்களோ அல்ல. அதற்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையிலேயே வடகிழக்கினை இணைத்து தமிழ் தேசிய நடைபயணத்தினை செய்யவேண்டும் என்பதற்காகவே ஆரம்பித்துள்ளோம்.யாரும் பிரிந்துசெயற்படக்கூடாது என்பதே எமது பிரதான இலக்காகும்.

இன்று நாங்கள் சகல தமிழ் தேசிய கட்சிகளிலும் உள்ள சகல இளைஞர்களையும் இணைத்துதான் தாயக இளையோர் அமைப்பு என்பதை செய்கின்றோம்.தீலிபன் அண்ணாவின் நிகழ்வு நிறைவுபெற்றதும் அத்துடன் எமது நடவடிக்கைகள் நிறுத்தப்போவதில்லை தமிழ்தேசியம் சார்ந்த பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

2009 யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழர் தரப்புக்கு தமிழ் மக்கள் இரண்டு தடவைகள் பூரண வெற்றிவாய்ப்பினை வழங்கியிருந்தனர்.ஆனால் பின்னர் தமிழர் தரப்புகள் பல பிரிவுகளாக பிரிந்து பல்வேறு திசையில் ஒவ்வொருவரையும் சாடிக்கொண்டு இருந்த காரணத்தினால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட விரக்தியே மாற்று அணிக்கு வாக்களிக்கும் நிலையேற்பட்டதே தவிர தமிழ்தேசியம் தோற்கவில்லை. அவர்களுக்கு ஒரு இடைவெளி வழங்கப்பட்டுள்ளது.இத்தோடு திருந்துங்கள் இல்லாதுவிட்டால் இதனைவிட பெரிய விளைவுகளை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படும்.

அதற்காகவே தமிழ்தேசியத்தினை தாங்கி நிற்கும் அனைவரையும் ஒன்றாக இணைத்து முதலாவதாக திலீபன் அண்ணாவின் நடைபயணத்தினை ஆரம்பித்திருக்கின்றோம்.அதன் பின்னர் அனைவரையும் ஒன்றிணைக்கும் பாரியளவிலான முயற்சிகளை மேற்கொள்வோம்.

இந்த ஊடக சந்திப்பல் இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் கி.சேயோன்,திருமலை தமிழ் மக்கள் ஒன்றியத்தினை ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.ராஜு ஆகியோர் கருத்துகள் தெரிவித்தனர்.