வடகிழக்கில் யுத்த கால உணர்வை ஏற்படுத்தும் இராணுவ கெடுபிடிகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் இராணுவ கெடுபிடிகள் அதிகரித்துள்ளது.

இன்று மாவீரர் நிகழ்வுகளை செய்தி சேகரிக்க சென்று திரும்பிய ஊடகவியலாளர்களை நான்கு வீதிச் சோதனைச் சாவடிகளில் இடை மறித்த இராணுவத்தினர் அவர்களுடன் மிகக்கடுமையாக நடந்துள்ளனர்.

கேமரா உட்பட ஊடகக்கருவிகளை தோலில் சுமந்து சென்று தாங்கள் ஊடகவியலாளர்கள் என்று கூறி தகவல் திணைக்கள அடையாள அட்டையை காட்டிய போது அந்த அடையா அட்டை வேண்டாம் .
தேசிய அடையாள அட்டையை தருமாறு கூறி சோதனையை மேலும் கடுமையாக மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

வழமைக்கு மாறாக பல இடங்களில் இராணுவ சோதனைச் சாவடிகள் உருவாக்கப்பட்டு வாகனங்கள் உட்பட பயணப் போதிகள் மோட்டார் சைக்கிள் உள் பெட்டிகள் என அனைத்தும் சோதனை இடப்பட்டு போகும் இடம் இருக்கும் இடம் தேசிய அடையாள அட்டையை கேட்டு துருவி துருவி
விசாரணை செய்து வருகின்றனர்.

பொலீஸ் சோதனைச் சாவடி என்று பெயர்ப் பலகை உள்ள இடங்கள் அனைத்திலும் இராணுவத்தினரே குவிக்கப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர்கள் முதல் கொண்டு அனைவரையும் ஒரே விதமாகவே இராணுவம் விசாரணை செய்கிறது.

ஊடக அடையாள அட்டையை காட்டிய போது அதனை இராணுவ அதிகாரிகள் பார்க்க மறுத்துவிட்டனர். தேசிய அடையாள அட்டையை காட்டுமாறு கூறியதுடன் ஊடகவியலாளர்கள் என்று கூறிய போது வகனத்தில் இருந்து இறங்குமாறு கூறி மிகக்கடுமையாக சோதனை இடப்படுகிறது.

இராணுவத்தின் இந்த செயற்பாடுகள் காரணம் இன்றி ஒரு செயற்கையான அச்சத்தை தோற்றுவிப்பதாக அமைந்துள்ளது.

வடகிழக்கு பகுதிகளில் தற்போது திடீர் திடீரென முளைக்கும் இராணுவ சோதனைச் சாவடிகள் யுத்த கால உணர்வை மீண்டும் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.