வங்காலைப் படுகொலை நினைவு

மன்னார்- வங்காலை பகுதியில் 1985 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் மற்றும் அவருடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட சிறுவர்கள் மற்றும் பொது மக்களின் நினைவுநாள்அனுஷ்டிக்கப்பட்டது.

நேற்று (திங்கட்கிழமை) காலை 7 மணியளவில் வங்காலை புனித ஆனாள் தேவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அமரர் மேரி பஸ்ரியன் அடிகளாரின் சிலைக்கு முன்பாக குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உட்பட அருட்தந்தையர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

அருட்பணி பஸ்ரியன் அடிகளாரின் சிலைக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அவரோடு மரணித்த பொது மக்களுக்காகவும் பொது வழிபாடு இடம்பெற்றதுடன் அவருடைய நினைவாக மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.

தள்ளாடி பகுதியை சேர்ந்த இராணுவத்தினர் 1985 ஆண்டு தை மாதம் 6 ஆம் திகதி வங்காலை தூய ஆனாள் பங்கு பணி செயளாலராக சேவையாற்றிய அருட்பணி மேரி பஸ்டியன் அடிகளார் மற்றும் அவருடன் தங்கியிருந்த அப்பாவி சிறுவர்கள் உட்பட பொது மக்கள் 10 பேரை சுட்டு படுகொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.