ராஜபக்ச அணியின் பழைய கஞ்சி வியாபாரம் ஆரம்பம் – மனோ கணேசன்

“இருநாட்களுக்கு முன், சம்பந்தனை சந்தித்த ஐதேக தலைவர் ஒருவர் சம்பந்தனுக்கு, பெடரல் (சமஷ்டி) தர உடன்பட்டு விட்டார். சிங்கள பெளத்த மக்களுக்கு தெரியாமல் இரகசியமாக இந்த வேலை நடக்கிறது” என கனக ஹேரத் என்ற பொதுபெரமுன எம்பி சொல்கிறார்.

இது ராஜபக்ச அணியின் பழைய கஞ்சி இனவாத பிரசார ஆரம்பத்தை காட்டுகிறது.

தமிழ் மக்களுடன், தமிழ் கட்சிகளுடன் பேச வேண்டும், வடகிழக்குக்கு வர வேண்டும், மலையகத்துக்கு வரவேண்டும் என கூறும் கோட்டாபய ரராஜபக்சவுக்கு தெரிந்துதான் இது நடக்கிறதா? அல்லது இது, தமிழ் மக்களின் முழுமையான வெறுப்பை சம்பாதித்து அவரை தோற்கடிக்க செய்யும் உள்வீட்டு சதியா? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான அமைச்சர் மனோ கணேசன் கேட்கிறார்.

அமைச்சர் மனோ மேலும் கூறியதாவது,

இரண்டு நாள் முன் அமைச்சர் மங்கள சமரவீர வீட்டில் அமைச்சர் சஜித் பிரேமதாச, கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் குழுவினரை சந்தித்தார்.

இது ஒரு இரகசிய சந்திப்பல்ல. இதுபற்றி கடந்த வாரமே அமைச்சர் மங்கள சமரவீர என்னிடம் தெரிவித்தார். நல்ல விஷயம். மனம் விட்டு பேசுங்கள் என நானும் சொன்னேன்.

அமைச்சர் சஜித்துடன் பேசிய சாதாரண பொது விஷயங்கள் பற்றி நேற்று அலரி மாளிகை நிகழ்வில் சந்தித்தபோது தமிழரசு தலைவர் மாவை சேனாதிராசா எம்பி என்னிடம் சொன்னார். எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் சொன்னார்.

இரா. சம்பந்தன் ஒரு கட்சி தலைவர். சஜித் பிரேமதாச வேட்பாளராக தயாராகின்ற ஒரு பிரபல அமைச்சர். இந்நிலையில் இவர்கள் இருவரும் சந்தித்து தாராளமாக பேசலாம். இதற்கு யாரும் குறுக்கே நிற்க முடியாது.

இந்நிலையில் இதற்குள் இந்த ஸ்ரீலங்கா பொதுபெரமுனகாரர்கள் இனவாத பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார்கள். இதைதான் பழைய கஞ்சி என்று நான் நேற்று ஒரு தொலைகாட்சி நிகழ்வில் சொன்னேன்.

இந்த பழம் கஞ்சி இனவாத வியாபாரம், இனி சிங்கள மக்களிடமும் விலை போகாது.

இவர்கள் இப்படி பேசத்தொடங்கினால் சிங்கள வாக்கும் இல்லாமல், தமிழ் வாக்கும் இல்லாமல் கடைசியில் அழிவைதான் தேடப்போகிறார்கள்.