ரவி கருணாநாயக்கவை தேடும் குற்றப் புலனாய்வுப் பிரிவு

மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் விவகாரத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்தும் அவரைத் தேடி வருகின்றனர்.

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் உட்பட 10 சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம்(06) மாலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி மற்றும் மார்ச் 31ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கோட்டை நீதவான் நீதிமன்றில் புதிய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்றைய தினம் ரவி கருணாநாயக்கவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுத்திருந்தனர். அதற்கமைவாக ரவி கருணாநாயக்கவை கைது செய்ய அவரின் பத்தரமுல்ல பகுதியிலுள்ள அவரின் வீட்டிற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் 45 நிமிடங்கள் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இருந்த போதும் அவர் வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவரை கைது செய்ய நியமிக்கப்பட்டுள்ள இரு குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.