ரணில் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்த மாவை தற்போது தமிழ் அரசியல் கைதிகளுக்காக குரல் கொடுக்கிறார்

ஞானசார தேரரை விடுதலை செய்த அரசிற்கு பலவருடங்கள் சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களை கண்ணிற்குத் தெரியவில்லையா? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தின் போது பாராளுமன்றில் கேள்வியெழுப்பினார்.

அவசரகாலச் சட்டத்தால் தமிழ் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள், தென்னிலங்கையை விட மிகவும் கடுமையான நடவடிக்கைகள் வடக்கில் மேற்கொள்ளப்பட்டன.

மாணவர்களின்பாடப்புத்தகப் பைகளை சோதனையிடும் போது அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்

இன்று ஞானசார தேரரை உங்களால் விடுதலை செய்ய முடியுமாயின் ஏன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்களை விடுவிக்க முடியாது? இவர்களின் விடுதலைக்காக சட்டத்தரணிகளை வைத்து வாதாட முடியாத நிலையில் பலர் உள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும். இனப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகள் பின்தள்ளி வைக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தற்போதைய ரணில் அரசைக் காப்பாற்றுவதற்காக நிபந்தனையற்ற ஆதரவுகளை வழங்கிய தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தற்போது அரசியல் கைதிகள் தொடர்பில் அரசை குற்றம் சுமத்துவது வேடிக்கையானது என கொழும்பைத் தளமாகக் கொண்ட அரசியல் அவதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை கூட அவர்களால் ஏன் நிபந்தனையாக வைக்க முடியவில்லை என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.