ரணிலை பாதுகாப்பதை நிறுத்த வேண்டும் கூட்டமைப்பு; சுரேஷ் பிறேமச்சந்திரன்

அரசைப் பாதுகாத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சனாதிபதி மைத்திரி மட்டுமே தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டார், பிரதமர் ரணில் விக்கிர மசிங்க தமிழ் மக்களை ஏமாற்றவில்லை என்ற தோற்றப்பாட்டை உடனடியாக நிறுத்தவேண்டும் என ஈ.பி.ஆர். எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

“தற்போதைய அரசைத் தாங்கள் தான் கொண்டு வந்தோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறி வந்தனர்.இப்போது மைத்திரி எம்மை ஏமாற்றி விட்டார் என விமர்சிக்கின்றனர் கண்டிக்கின்றனர். அவ்வாறு கண்டிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.

ஆனால் மைத்திரி மட்டும் ஏமாற்றவில்லை. ரணிலும் தான் மக்களை ஏமாற்றியுள்ளார். போர்க் குற்றச்சாட்டுக்களில் முக்கிய இராணுவ அதிகாரியாக குறிப்பிடப்பட்டு வரும் சவேந்திர சில்வாவுக்கு இராணுவத் தளபதி பதவியை சனாதிபதி வழங்கியுள்ளார்.இதற்குச் சர்வதேச மட்டத்தில் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் இராணுவத் தளபதியின் நியமனம் நாட்டின் சுயாதீனமான விடயம், இதில் சர்வதேசநாடுகள் தலையிடக்கூடாது என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.

ரணில் நியமித்த வெளிவிவகார அமைச்சர் இவ்வாறான கருத்தை வெளியிட்டு ள்ளார் என்றால், இராணுவத் தளபதியின் நியமனத்தில் ரணிலும் மைத்திரியும் இணைந்தே நியமித்துள்ளனர். ஆனால் கூட்டமைப்பினர் இதே ரணிலுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றனர். இராணுவத் தளபதியின்நியமனம் வடக்கு கிழக்கில் வாழும் மக்களைத் தொடர்ந்தும் அச்ச நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே வழங்கப்பட்டிருக்கலாம்.

இந்தஅரசு மக்கள் மீது குறிப்பாகச் சிறுபான்மை இனம் மீது அக்கறை இல்லாது செயற்படுகின்றது என்பதையே வெளிக்காட்டுகின்றது. தற்போது நாட்டில் சனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயம்பேசு பொருளாக உள்ளது.சில கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் பொதுஜன பெரமுன கட்சிகள் சார்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் தமிழ் மக்களின் வாக்குகள் என்றைக்குமே கோட்டாவுக்குக் கிடைக்காது. ஏனெனில் அவர் போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளகியிருப்பவர். அதற்கும் மேலதிகமாக அவர் சட்டங்களை மதிக்கும் நபர் இல்லை. இராணுவத்தினர் வசம் உள்ள காணிகளை விடுவிப்பதில் சாதகத்தன்மை அற்றவர். இவ்வாறான ஒருவரை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்பமாட்டார்கள்” என்றார்.