ரணிலின் அதிரடி நகர்வுகள் சஜித்தின் வாயை மூடுமா? – பூமிகன்

சனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இரண்டு பிரதான முகாம்களிலும் உருவாகியிருக்கும் உள்ளகப் பிரச்சினைகள்தான் இந்த வாரமும் கொழும்பு அரசியலில் பிரதான செய்தியாகியிருக்கின்றது. நவம்பர் இறுதியில் அல்லது – டிசெம்பர் முதல் வாரத்தில் சனாதிபதித் தேர்தல் நடைபெறும். அதனால் அக்டோபரில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்பதால், பிரதான கட்சிகள் அதற்குத் தயாராக உள்கட்சி மோதல்களும் தீவிரமடைந்திருக்கின்றது. அவை குறித்து இந்த வாரமும் பார்ப்போம்.

வேட்பாளரை தெரிவு செய்வதில் ஐ.தே.க.வில் முரண்பாடுகள் தொடரும் நிலையில் 3 அதிரடியான நகர்வுகளை ரணில் மேற்கொண்டிருக்கிறார்.

முதலாவது – சனாதிபதி வேட்பாளர் யார் என்பது அந்த தேர்தல் தொடர்பில் தேர்தல் திணைக்களம் அறிவித்த பின்னரே முடிவு செய்யப்படும் என அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கட்சியின் யாப்பில் இவ்வாறுதான் குறிப்பிடப் பட்டிருக்கின்றதாம். அதாவது, சனாதிபதித் தேர்தல் குறித்த அறிவித்தல் வெளிவந்த பின்னர் செயற்குழு அதனை ஆராய்ந்து – வேட்பாளர் நியமனக்குழு ஒன்றை அமைத்து அதன் மூலமாகவே தெரிவு இடம்பெறும் என்பதுதான் கட்சியின் யாப்பு விதி என்கின்றார்கள் இவர்கள். இதனால், சஜித் தரப்பு இப்போது வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும் என்பது இவர்களுடைய நிலைப்பாடு.

இதனைவிட சஜித்துக்கு ஆதரவாக செயற்பட்ட கட்சியின் எம்.பி.க்ர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரின் பெர்னான்டோவை அழைத்த ரணில் இது குறித்து நேரடியாகவே எச்சரித்திருக்கின்றார். சஜித்துக்கு ஆதரவாக பதுளையில் இடம்பெற்ற முதலாவது கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் இவர்தான். இந்த இரு நகர்வுகள் மூலமாக சஜித்துக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரங்களை முடிவிற்கு கொண்டு வந்துவிட முடியும் என ரணில் தரப்பு கருதுகிறது.

தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான பின்னரே தமது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என ரணில் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்ற போதிலும், அதற்கு முரணான கருத்து ஒன்றும் அந்தத் தரப்பிலிருந்தே முன்வைக்கப்பட்டிருக்கின்றது. வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலரை கடந்த வாரம் சந்தித்த ரணில், தன்னுடைய மாலைதீவுப் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த பின்னர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கப் போவதாகவும் கூறியிருக்கின்றார். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலைதீவு புறப்படும் அவர் வியாழன் கொழும்பு திரும்புவார்.

கட்சியின் சனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் உருவாகியிருக்கும் நெருக்கடிகளை தவிர்க்கும் நோக்கத்துடனேயே இவ்வாறு அவர் அறிவித்திருக்கிறார். இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் சில ஸ்கேண்டினவியன் நாடுகளின் தூதுவர்களை இராப்போசன விருந்துபசாரம் ஒன்றுக்கு அழைத்த ரணில், தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் சனாதிபதித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பது குறித்தும் பேசினார். சஜித் தான்தான் சனாதிபதி வேட்பாளர் என கூறிக் கொண்டிருக்கும் நிலைமையில் வெளிநாட்டு ராஜதந்திரிகளை பிரதமர் எதற்காக சந்தித்தார் என்ற கேள்வி பல்வேறு மட்டங்களிலும் எழுகிறது.

சஜித்தை விட சர்வதேச ஆதரவு தனக்குத் தான் அதிக அளவில் இருக்கிறது என்பதை காட்டிக்கொள்வது இந்த சந்திப்பின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கலாம். சர்வதேச விவகாரங்களைக் கையாளக்கூடிய ஒருவராக சஜித் இல்லை என ரணில் தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தனது நம்பிக்கைக்குரிய ஆதரவாளராக ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில், உத்தியோகப்பற்றற்ற ஒரு சந்திப்பாகவே வெளிநாட்டுத் தூதுவர்களுடனான இந்த சந்திப்பை ரணில் நடத்தினார்.

இருந்தபோதிலும் ரணிலின் இந்த நகர்வுகள் சஜித்தின் போக்கைத் தடுத்து நிறுத்தி விடுமா என்பது கேள்விக் குறியாகத்தான் இருக்கின்றது. சஜித்துக்கு ஆதரவு தேடி முன்னெடுக்கப்பட்டுவரும் பேரணிகள் தொடரில் மூன்றாவது குருநாகலில் செப்டம்பர் ஆறாம் திகதி நடைபெறவுள்ளது. இந்தப் பேரணிகள் ரணில் தரப்புக்கு பெரும் சங்கடத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனைவிட சஜித்தை பிரபலப்படுத்துவதற்கான செயற்பாடுகள் பல்வேறு மட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது. ஒழுக்க நடவடிக்கை மூலமாகவோ அல்லது, கட்சியின் யாப்பைக் காட்டியோ இதனைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்ற நிலையில்தான் நேரடிப் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு சஜித்தை அழைத்திருந்தார் ரணில்.

இது சஜித்தைக் கட்டுப்படுத்துவதற்காக ரணில் எடுத்த மூன்றாவது நகர்வு. அலரி மாளிகையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இந்த நேரடிப் பேச்சுக்கள் மிகவும் சுமுகமாக இடம் பெற்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுக்களின் போது, கட்சியின் சனாதிபதி வேட்பாளர் யார் என்பது பற்றி முக்கியமாக விவாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எம்பிலிப்பிட்டியவில் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருந்த சஜித், அலரி மாளிகையில் இருந்து கிடைத்த அழைப்பை அடுத்து உடனடியாகவே தனது நிகழ்வை இடைநிறுத்திக்கொண்டு கொழும்பு புறப்பட்டார். இரவு 9.30 மணி அளவில் அலரி மாளிகையை வந்தடைந்த அவர், ரணிலுடன் 11.00 மணி வரையில் பேசியுள்ளார். .

ராஜித சேனாரட்னவும், ஹர்ஷ டி சில்வாவும் இந்தப் பேச்சுக்களில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சனாதிபதி வேட்பாளரை எவ்வாறு தெரிவு செய்வது என்பது குறித்து இதன்போது விரிவாக ஆராய்ந்ததாக ஹர்ஷா தெரிவிக்கின்றார்.  இருவருக்குமிடையில் முரண்பாடுகள் மேலோங்கியிருக்கும் நிலைமையில் இடம்பெற்றுள்ள இந்தச் சந்திப்பு சுமூகமான நிலைமை ஒன்றை கட்சியில் ஏற்படுத்துவதற்கு எந்த அளவுக்கு உதவும் என்பதுதான் இன்றுள்ள கேள்வி. ரணில் தன்னுடைய மாலைதீவு விஜயத்தை முடித்துக்கொண்டு வரும்வரை வந்தபின்னர் இந்த நெருக்கடி மீண்டும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால், பத்து நாட்களுக்கு முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்கும், தாக்குதல்களை நிறுத்துவதற்கும் இருவரும் இணங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.தே.க. நிலைமை இவ்வாறிருக்க பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையிலான தேர்தல் குறித்து இதுவரையில் இணக்கப்பாடு முழுமை அடையவில்லை எனத் தெரிகிறது. சுதந்திரக் கட்சியை பொறுத்தவரையில் பொது ஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு அது தயாராக இல்லை என்பதுதான் முக்கிய பிரச்சினை. சுதந்திரக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் மொட்டுவில் தஞ்சமடைந்து இருக்கின்ற போதிலும் ஒரே அடியாக மொட்டு அணியுடன் இணைந்து கொள்வது சுதந்திரக் கட்சியை அழித்துவிடும் என்பதால் அவ்விடயத்தில் மைத்திரி கொஞ்சம் அவதானமாகவே இருப்பதாக தெரிகின்றது.

கட்சியை அழித்துவிட்ட பெயர் தனக்கு கிடைக்கக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருக்கின்றார். அதனால்தான் பொதுவான முன்னணி ஒன்றை அமைத்து அதில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவளிக்கத் தயார் என்பதுதான் சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலை. பொது ஜன பெரமுனையும் இதற்குத் தயாராகத்தான் இருக்கிறது. சுதந்திரக் கட்சியின் சார்பில் தெரிவான உறுப்பினர்கள் பெரும்பாலும் மொட்டுவில் இணைந்துவிட்டனர். தயாசிறி போன்ற ஒரு சிலர்தான் இன்னும் மைத்திரியுடன் இருக்கின்றார்கள். சந்திரிகா குமாரதுங்கவும் சுதந்திரக் கட்சியைக் கைப்பற்ற முனைந்துகொண்டிருக்கின்றார். சுதந்திரக் கட்சி பலமாக இருந்தால்தான் மகிந்தவுடனோ, ரணிலுடனோ தன்னால் பேரம்பேச முடியும் என மைத்திரி நினைக்கின்றார். அதனால்தான் கட்சி தாவும் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை என தயாசிறி அறிவித்திருக்கின்றார்.

அதேவேளையில் மொட்டுவுடன் இணைந்து கூட்டணி அமைப்பது குறித்து இப்போது பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பேராளர் மாநாடு செப்டம்பர் மூன்றாம் தேதி நடைபெற இருப்பதால் அதற்கு முன்னர் இந்த பிரச்சனைக்கு முடிவு காணப்பட்டுவிடும் என சுதந்திரக் கட்சித் தலைவர்கள் நம்புகின்றார்கள். பேச்சுவார்த்தைகள் இரவு – பகலாக நடைபெறுகின்றன. இரு தரப்பிலும் காணப்படும் நெருக்கடிகளுக்கு அடுத்த வாரத்துக்குள் தீர்வு கிடைத்துவிடும் என அரசியல் வட்டாரங்கள் சொல்கின்றன.