யாழ் போதனா வைத்தியசாலை ஸ்கேனர் இயந்திரம்; குழப்பங்களுக்கு விளக்கம்

அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எம். ஆர். ஐ ஸ்கேனர் (MRI – Magnetic Resonance Imaging) மற்றும் சி.ரி ஸ்கேனர் (CT – Computerized Tomography) வாங்கப்படுவதாக வெளிவந்த செய்தி பற்றி பொதுமக்களுக்குத்  தெளிவுபடுத்த வேண்டியுள்ளதாக யாழ், போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ், போதனா வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வட பகுதியில் வசிக்கும் 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட  மக்களது பிரதான வைத்திய சேவையைப் பூர்த்தி செய்யும் ஒரே ஒரு  மூன்றாம் நிலை வைத்தியசாலையான யாழ். போதனா வைத்தியசாலைக்கு எம். ஆர். ஐ ஸ்கானரைப் பெற்றுக் கொள்வது என்பது நீண்டகாலக் கனவாகவே இருந்து வந்தது.

ஜப்பானிய அரசு யாழ் போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களுடன் வழங்கிய 3 தளங்களைக் கொண்ட மத்திய செயற்பாட்டுக்கான கட்டடத் தொகுதி – நவீன சத்திர சிகிச்சைக் கூடம், ஆய்வு கூடம், அதிதீவிர சிகிச்சைப் பிரிவு , எக்ஸ் கதிரியக்க பரிசோதனை முதலான பல நிழற்பட வசதிகளுடன் (Imaging facilities) 2012 முதல் இயங்கி வருகின்றது.

நாட்டில் யுத்தம் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி நிலவிய 2005 காலப்பகுதியில் இத்திட்டம் (ஜய்க்கா – JICA)  முன்மொழியப்பட்டது.  எனினும் நாட்டில் மீண்டும் ஏற்பட்ட யுத்தம் நிறைவுக்கு வந்தபின்னர் இத்திட்டம் மீண்டும் முன்னெடுக்கப்பட்டது. 2010 இல் யப்பான் நாட்டு அமைச்சரவை இத்திட்டத்தை அங்கீகரித்தது. 2010 டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்ட கட்டுமானம் 2012 யூனில் நிறைவு பெற்றது. யப்பான் நாட்டு மக்களது நன்கொடையில் (இலங்கை ரூபா 2900 மில்லியன்) கிடைத்த இத்திட்டம் வடபகுதி மக்களுக்கு ஒரு வரப் பிரசாதமே. இலங்கையில்  உள்ள மிகச் சிறந்த ஆய்வு கூடங்களில் (Laboratory ) ஒன்று இக்கட்டடத் தொகுதியில் 24 மணிநேரமும் இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இக்கட்டடத் தொகுதியானது நவீன ஆய்வுகூட உபகரணங்கள், சத்திரசிகிச்சைக் கூட உபகரணங்கள் , அதிதீவிர சிகிச்சைக் கூட உபகரணங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டது. இத்திட்டத்தில் எம். ஆர். ஐ ஸ்கானரை வழங்குவது உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

நான் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்பாளராக 2015 ஒக்ரோபரில் நியமனம் பெற்றேன். அனைவருடனும் இணைந்து வைத்தியசாலையின் அத்தியாவசியமான தேவைகளை நிறைவேற்றுவது குறித்து பல்வேறு திட்டங்களை முன்னேடுத்து வருகின்றேன்.

மத்திய அரசாங்கம் யாழ். போதனா வைத்தியசாலையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளதுடன் பல திட்டங்களை முன்னெடுத்தும் வருகின்றது.

6 தளங்களைக் கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் முதல் 2 தளங்களும் பூர்த்திய செய்யப்பட்டு – 590 மில்லியன் ரூபா பெறுமதியான விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு இந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டு – உயர்தரமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.  மிகுதி 4 தளங்களுக்குரிய ரூபா 1300 மில்லியன் நிதி, அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டு கட்டட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

குவைத் நாட்டின் மக்களது நன்கொடையில் – ரூபா 530 மில்லியன் திட்டப் பெறுமதியில் – அமைக்கப்பட்ட 3 தளங்களைக் கொண்ட மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் (Rehabilitation Centre) கடந்த 25.07.2019 அன்று யாழ். போதனா வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டது. 11 மாதங்களில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது. தற்போது இலங்கையில் வேறு எந்த வைத்தியசாலையிலும் காணப்படாத வசதிகள் – முதுமை , மற்றும் விபத்துக்களால் உடல் அவயவங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைக்குரிய வசதிகள், உபகரணங்கள் மற்றும் செயற்கை அவயவங்கள் உருவாக்கும் தொழிற் கூடம், உடற்பயிற்சிக் கூடம் முதலானவை  இக்கட்டடத் தொகுதியில் உள்ளன. இன்னும் சில வாரங்களில் இது இயங்கத் தொடங்கும்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு எம். ஆர். ஐ ஸ்கேனர் வாங்குவதுக்காக கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இதற்கான தொழிநுட்பப் பெறுகைக் குழுவை சுகாதார அமைச்சு நியமித்தது. அரச நடைமுறைகளுக்கு அமைவாக சுகாதார அமைச்சு இதனை வாங்கி யாழ். போதனா வைத்தியசாலைக்கு வழங்க உள்ளது.

சுகாதார அமைச்சு எம்.ஆர். ஐ ஸ்கேனர் ஐ வாங்குவதுக்காக இவ்வாண்டு நிதியும் ஒதுக்கியுள்ளது. இவ்வருட இறுதியில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர். ஐ ஸ்கேனர் கிடைத்து விடும்.  பராமரிப்புச் செலவுடன் இதன் பெறுமதி ரூபா 375 மில்லியன் ஆகும். எம்.ஆர். ஐ ஸ்கேனர்  அரச நிதியிலேயே முழுமையாக எமக்குக் கிடைக்க உள்ளது. இதற்காக நாம் எவரிடமும் நிதி சேகரிக்கவில்லை.

மேலும் இந்த ஆண்டு பாதீட்டில் அரசாங்கம் யாழ் போதனா வைத்தியசாலையின் ஒரு பிரிவாக அமையவுள்ள சிறுவர் வைத்தியசாலைக்காக ரூபா 850 மில்லியனை ஒதுக்கியுள்ளதுடன் , ஜய்க்கா கட்டடத் தொகுதியின் ஆய்வுகூட 4 ஆவது தள விரிவாக்கத்துக்காகவும் நிதியினை ஒதுக்கியுள்ளது.

அதேவேளை யாழ். போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாளர்களின் நிதிப்பங்களிப்பில்  ஒரு சி.ரி. ஸ்கேனர்  அடுத்த மாதம் பெறப்பட இருக்கிறது.

மேற்குறிப்பிட்ட நன்கொடையில் கிடைக்கின்ற சி.ரி. ஸ்கேனர், அரசினால் கொள்வனவு செய்யப்பட்டு கிடைக்க உள்ள எம். ஆர். ஐ ஸ்கேனர்  ஆகிய இரு விடயங்கள் குறித்தும் மாறுபட்ட கருத்துக்கள் சமூகவலைத் தளங்களில், ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.

கடந்த ஆறு மாதத்துக்கு முன்னர் பி. ரஞ்சன் (ஐக்கிய இராச்சியம்) அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த போது யாழ். போதனா வைத்தியசாலைக்கு சி.ரி. ஸ்கானரின் அவசர தேவைப்பாடு குறித்து கேட்டு அறிந்து கொண்டார். தற்போது வைத்தியசாலையில் பாவனையில் இருக்கின்ற சி.ரி. ஸ்கேனர்  9 வருடங்கள் பழைமை வாய்ந்தது. அத்துடன் அடிக்கடி பழுதடைந்து அதன் செயற்பாடு தடைப்படுகின்றமையால் நோயாளிகள் பல அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது.

யாழ். போதனா வைத்தியசாலையைப் பொறுத்தவரை 2 சி.ரி. ஸ்கேனர்கள் இருப்பது மிகவும் அவசியமானதாகும். ஆகவே இன்னொன்றை அரச நிதியினூடாகப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம். அரச நிதியில் கோரப்பட்டுள்ள சி.ரி. ஸ்கேனர் எமக்குத் தாமதமாகவே கிடைக்கும்.

ஆகவே நன்கொடையாளர்களின் உதவியில் சி.ரி. ஸ்கேனர் ஒன்றை விரைவாகப் பொருத்தும் முயற்சியில் வைத்தியசாலை நிருவாகம் ஈடுபட்டு வருகின்றது.   ரஞ்சன் அவர்கள் 46 மில்லியன் ரூபா நிதியுதவியை நன்கொடையாக வழங்கி இந்தக் கைங்கரியத்தை ஆரம்பித்து வைத்தார். அத்தோடு பல்வேறு அமைப்புக்களை, ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா சுவிற்சர்லாந்து, இலங்கை முதலான நாடுகளில் உள்ள நன்கொடையாளர்களை இணைப்பதிலும் ரஞ்சன் பிரதான பங்கை வகித்து வருகின்றார்.

அதேவேளை இவ்விடயம் தொடர்பில் பல மாதங்களுக்கு முன்னர் சுவிற்சர்லாந்தில் வசிக்கும் எஸ்.கதிர்காமநாதன் (எஸ்.கே.நாதன்) அவர்களைத் தொடர்பு கொண்டபோது நிதியுதவி செய்வதாகக் கூறியிருந்தமை எமக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அண்மையில் (கடந்த வாரம்) கதிர்காமநாதன் அவர்கள் வைத்தியசாலைக்கு வருகை தந்து சி.ரி. ஸ்கேனர் ஐக் கொள்வனவு செய்வதுக்காக ரூபா 20 மில்லியனை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய இராச்சியத்தில் இயங்கிவரும் அபயம் தொண்டு நிறுவனமும் சி.ரி. ஸ்கேனர் கொள்வனவு செய்வதுக்கு நிதிப்பங்களிப்பைச் செய்ததுடன்  ஆரம்பம் முதலே ரஞ்சன் அவர்களுடன் இணைந்து ஐக்கிய இராச்சியத்தில் உள்ள நன்கொடையாளர்களை ஊக்குவித்து அனுசரணையும் வழங்கி வருகின்றது.  நன்கொடையாளர்களிடம் இருந்து கிடைக்கின்ற  நிதியானது யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தின் (Jaffna General Hospital Development Association) வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்படுகின்றது.

விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார அமைச்சின் ஒப்புதலோடு தரமான (160 ஸ்லைஸ்) சி.ரி. ஸ்கேனர் ஐ ஜப்பானில் இருந்து தருவிப்பதுக்காக ரூபா 50 மில்லியன் நிதி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் முற்பணமாக வழங்கப்பட்டது.

வரும் செப்ரெம்பர் மாதமளவில் நவீன சி.ரி. ஸ்கேனர் இயந்திரம் எமது வைத்தியசாலையை வந்தடையும். புதிய சி.ரி. ஸ்கேனர் கிடைத்ததும் அதன் சேவைகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படும். இந்த நற்காரியத்துக்குப் பங்களித்த தனிநபர்கள், அமைப்புக்களின் பூரண விவரங்கள் ஆரம்ப வைபவத்தின் போது வெளியிடப்படும் என்பதையும் தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

இந்த நவீன சி.ரி. ஸ்கேனர் இயந்திரம் 112.5 மில்லியன் ரூபா பெறுமதியானதாகும். தற்போதுவரை சுமார் 110 மில்லியன் ரூபாய்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில்,  அச்சு ஊடகங்களில் எம்மைத் தொடர்பு கொள்ளாது வெளிவரும் செய்திகள் குறித்து பொதுமக்களை விழிப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். சி.ரி. ஸ்கேனர் ஐக் கொள்வனவு செய்வதுக்கு நிதிப்பங்களிப்போ அன்றி அனுசரணையோ செய்யாதவர்கள் சமூக ஊடகங்களில் பிரசாரப்படுத்துவததையும் காணக் கூடியதாக உள்ளது.

உண்மைக்குப் புறம்பான, குழப்பகரமான செய்திகளை வெளியிடுவதை குறித்த தனிநபர்களும் ஊடகங்களும் நிறுத்திக் கொள்வது இவ்வாறான நற்காரியத்தைச் விரைவாகச் செய்வதுக்கு வழிவகை செய்யும்.

வைத்தியசாலையில் இன்னும் பல அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக தனியான ஒரு மகப்பேற்று விடுதி இல்லாதது மிகவும் கவலைக்குரியதாகும். பழைய மகப்பேற்று விடுதி அபாயநிலையில் காணப்பட்டதால் அது அகற்றப்பட்டு மகப்பேற்று விடுதிக்குரிய நிலம் பல வருடங்களாக வெறுமையாக உள்ளது.

இந்த வேளையில் நவீன சி.ரி. ஸ்கேனர் இயந்திரம் வைத்தியசாலைக்குக் கிடைப்பதுக்குக் காரணமான பிரதான நன்கொடையாளர்களான பி. ரஞ்சன் (ஐக்கிய இராச்சியம்), எஸ். கதிர்காமநாதன் ஆகியோருக்கும் ஏனைய நன்கொடையாளர்களுக்கும், மற்றும் அமைப்புக்களுக்கும் வைத்தியசாலையின் சார்பிலும் வட பகுதி மக்களின் சார்பிலும் நன்றியைத் தெரிவிப்பதோடு ஐக்கியராச்சியத்தில் இயங்கும் அபயம் நிறுவனத்துக்கும், யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.