யாழ்.பல்கலைக்கழத்தின் வெற்றிடங்களுக்கு வெளி மாகாணத்தவர்களை நியமிக்க முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாது – டக்ளஸ்

வட மாகாணத்தில் நிலவுகின்ற அரச நிறுவனங்களின் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்யும்போது யாழ்.பல்கலைக்கழத்தின் வெற்றிடங்களுக்கு வெளி மாகாணத்தவர்களை நியமிக்க முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாது, வட மாகாணத்தில் உள்ளவர்களுக்கே முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பின டக்ளஸ் தேவானந்தார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று டக்ளஸ் தேவானந்தா 27/2 நிலையியல் கட்டளையின் கீழ் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் வடக்கை சேர்ந்த பலரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் எழுப்பிய கேள்வியின் போதே குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடாத ஏனைய பணியாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதில் பக்கச் சார்புகளும், முறைகேடுகளும் காணப்படுவதாகவும், இத்தகைய நிலைமைகள் அரசியல் தலையீடுகளாக கணிக்கப் பெறுவதாகவும் பணியாளர்களது சங்கமானது குற்றச்சாட்டினை முன்வைத்து, போராட்டமொன்றையும் நடத்தி வருகின்றது.

வடக்கு மாகாணத்தில் வேலைவாய்பற்று பல ஆயிரக் கணக்கானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அங்கே நிலவுகின்ற அனைத்து அரச நிறுவனங்களின் வெற்றிடங்களுக்கும் ஆட்சேர்ப்புச் செய்கின்ற போது, வடக்கு மாகாணத்தில் உள்ளவர்களுக்கே முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.