யாழ் நூலக எரிப்பு ஈழத் தமிழினத்தின் மீதான அறிவழிப்பு – தீபச்செல்வன

ஈழத் தமிழ் இனம், அறிவாலும் ஆற்றலாலும் உலகறியப்பட்ட இனம். இதுவே ஈழத் தமிழ் மக்களின் உரிமை பறிப்புக்கும், அவர்களை இரண்டாம் தரப் பிரசைகளாக அடிமை கொள்ள வேண்டும் என்ற பேரினவாத ஆதிக்கத்திற்கும் காரணமாகும். இலங்கை இன ஒடுக்குமுறை வரலாற்றில், 1983 யூலைப் படுகொலை மிகப் பெரும் முன் ஈழ இன அழிப்பாக கருதப்படுகின்றது. அதைப்போலவே, 1981 ஆம் ஆண்டு யாழ் நூலக அழிப்பும் ஈழத் தமிழ் இனத்தின் அறிவு மீதான மாபெரும் இன அழிப்பு.

யாழ் நூலகம் ஆசியாவிலேயே புகழ்பெற்ற நூலகம். அங்கு உலகின் அரிய புத்தகங்கள், ஓலைச்சுவடிகள், சாஸ்திரங்கள் என பலவகைப்பட்ட பொக்கிசங்கள் இருந்தன. ஈழத்தின் பழம்பெரும் நூல்கள், தமிழின் கிடைத்தற்கரிய நூல்களை எல்லாம் கொண்டிருந்தது யாழ் நூலகம். சிறையில் சிக்கிய சிங்கள தலைவர்களை மீட்பற்கு பிரித்தானியா சென்ற ஈழத் தமிழ் தலைவர்கள், அறிவினால்தான் பிரித்தானிய அரசின் செல்வாக்குரியவர்களாக இருந்தனர்.

பிரித்தானிய இலங்கையில் அதிகம் அரச தொழிலில் இருந்தவர்களும் ஈழத் தமிழ் மக்களே. முதல் கட்டமாக தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டு, அவர்களின் வேலைகள் பறிக்கப்பட்டன. அத்துடன் இன மேலாதிக்க வெறி முடிந்துவிடவில்லை. அதன் பிறகு கல்வி தரப்படுத்தல் சட்டம். எல்லாவற்றையும் விஞ்சும் கொடூரமாக யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. உலகில் பள்ளிக்கூடங்களையும் நூலகங்களையும் அழிக்கக்கூடியவர்கள் மிகவும் கொடூரமானவர்களாயிருப்பர். அவர்களிடம் சனநாயகம் இருப்பதில்லை. அவர்கள் மனித இனத்திற்கு எதிரான விலங்குகள்.

அத்தகைய கொடூரச் செயல்தான் யாழ் நூலக எரிப்பு. 1981ஆம் ஆண்டு யூன் 1ஆம் நாள். அதாவது மே 31 அன்று நள்ளிரவு யாழ் நூலகம்மீது தீயிடப்பட்டது. மே 1ஆம் திகதி வரையில் யாழ் நூலகம் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய தலைவர், ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசே இந்த பயங்கரவாதத்தை நிகழ்த்தியது. அன்று ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் நேரடியாக இவ் இன அறிவழிப்பில் களமிறங்கினர் என்பதற்கும் சிங்கள தலைவர்களே சாட்சி.

பிரித்தானியருடன் இத் தீவின் சுதந்திரத்திற்காக போராடிய இனத்தின் உரிமைகளை மறுத்து, அவர்களை ஒடுக்கியபோது, அவர்கள் தமது உரிமைகளை கோரி சனநாயகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதற்கு பதிலாக சிங்கள அரசு, ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது. அவர்களின் சொத்துக்களை அழித்தது. இங்கே மாபெரும் அறிவுச் சொத்து 97 ஆயிரம் புத்தகங்களை அழித்தது. ஈழத் தமிழ் மனிதர்களுடன் மாத்திரம் இன வன்முறை செய்யப்படவில்லை. ஈழ நூலகங்களில் உள்ள புத்தகங்களுடனும் இன வன்முறைகள் புரியப்பட்டன.

யாழ் நூலக எரிப்பு ஈழத் தமிழ் மக்களில் நெஞ்சங்களில் ஆறாத வடுவாக பதிந்தது. மனிதர்கள் வெட்கி தலைகுனிகின்ற செயல் இதுவாகும். இன்றளவிலும் இலங்கை அரசு நிகழ்த்திய மாபெரும் குற்றமாக இது காணப்படுகின்றது. ஈழத் தமிழ் மக்களை மாத்திரமின்றி, உலக மக்களையே இது பாதித்த நிகழ்வு. புத்தகங்களுடன் இன வன்முறை செய்பவர்கள், மனிதர்களை என்ன செய்வார்கள் என்ற புரிதலை ஏற்படுத்தியது. சிங்களப் பேரினவாதிகள், தமிழர் நிலத்தில் உள்ள மரங்கள் முதல் பறவைகள் வரை அழிப்பதில் குறியாய் இருப்பவர்கள்.

யாழ் நூலக எரிப்பு என்பது, ஈழத் தமிழ் அறிவுச் சொத்தழிப்பாகவும், பண்பாட்டு அழிப்பாகவும் நிகழ்த்தப்பட்டது. ஈழத் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டதுடன் இவ் விரண்டு அழிப்பிலும் சிங்கள அரசு திட்டமிட்டு கவனம் செலுத்தியது. பிற்காலத்தில், தமிழீழ மண்மீது திட்டமிட்ட அழிப்புப் போரை தொடங்கியபோது, கிராமம் கிராமமாக நூலகங்களும் புத்தகங்களும் அழிக்கப்பட்டன. ஈழத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை வரை எத்தனையோ நூலகங்களில் அரிய அறிவுப் பொக்கிசங்கள் இருந்தன.

அவை எல்லாம் அழிக்கப்பட்டிருக்கின்றன. போர் நடவடிக்கைகளின் போது, வீடுகளில் இருந்த புத்தகங்கள் சிங்கள இராணுவத்தால் தீயிடப்பட்டுள்ளன. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரையில் முன்னெடுக்கப்பட்ட இன அழிப்புப் போரில் நாம் எத்தனையோ அரிய புத்தகங்களை இழந்துவிட்டோம். அவ்வளவும் இன அழிப்பு செய்யப்பட்டன. போராட்ட காலத்தில் வன்னியில் எழுதப்பட்ட அத்தனை படைப்புக்களும் உருவாக்கப்பட்ட ஆவணங்களும் அழிக்கப்பட்டன. எத்தனையோ அரிய பத்திரிகைகளும், வெளியீடுகளும் வன்னியில் சேகரிக்கப்பட்டன. அவை யாவற்றின்மீதும் தீயை வைத்தது சிங்களம்.

யாழ் நூலகத்தின் சுவர்கள் மாத்திரம் சிங்களப் படைகளால் எரியூட்டப்படவில்லை. எத்தனையோ நூலகச் சுவர்கள் எரியூட்டப்பட்டன. எத்தனையோ கலாசார மரபுரிமை கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஒரு இனத்தின் அடையாளத்தை அழிப்பதால், ஒரு இனத்தின் கல்வியை அழிப்பதால், ஒரு இனத்தின் பண்பாட்டு மரபுரிமையை அழிப்பதால், அவர்களை அழித்து விடலாம் என்பது ஆக்கிரமிப்பாளர்களின் இன அழிப்பாளர்களின் கணிப்பு. அதையே சிங்களமும் செய்தது.

2009 போர் முடிவுக்கு வந்த பின்னர், யாழ் நூலகத்திற்கு சுற்றுலா வந்த சிங்களப் பிரயாணிகள் நூலகத்தின் அலமாரிகளில் அடுக்கியிருந்த புத்தகங்களை இழுத்தெறிந்து வீசி தமது வெறுப்பை வெளிப்படுத்திய நிகழ்வு, ஊடகங்களில் வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கிட்டத்தப்பட்ட 28 வருடங்களின் முன்னர் எமது நூலகத்தில் தீயை வைத்ததைப்போலவே இன்றும் தீயை வைக்கும் மனநிலையில் இன்னமும் வரும் பேரினவாதிகளை என்னவென்பது? இப்படியான மனநிலை இன்னமும் இருக்கிறது என்பது நமக்கு பல புரிதலை தர வேண்டும்.

அண்மையில், நான் எழுதிய நடுகல் நாவலை, எடுத்துச் சென்ற சகோதரி ஒருவர், இராணுவத்தின் ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும், அதற்கு பெரும் விளக்கம் கொடுக்க நேரிட்டதாக சொன்னார். இப்போதும், எமது புத்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இப்போதும் எமது புத்தகங்கள் கண்காணிக்கப்படுகின்றன. இந்தியாவிலிருந்து ஈழம் வரும் புத்தகங்கள் எல்லாம் விசாரணைகளின் பின்னரே கையளிக்கப்படுகின்றன. தமிழர் பூமி புத்தகம் இலங்கை வந்தபோது, அதன் அட்டைப்படம் குறித்த விசாரணைக்குச் சென்றிருந்தேன்.

எமது மண்ணின் தலைமுறைகள், எமது மண்ணின் மனிதர்கள் எமது புத்தகங்களையும் எமக்கு தேவையான புத்தகங்களையும் படிக்க கூடாது என்பதில் இராணுவமும் அரசும் தெளிவாக இருக்கிறது. இலங்கை அரசும், சிங்களப் பேரினவாதிகளும் சொல்லித் தரும் கதைகளையும் வரலாற்றையும் படிக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். அல்லது அவர்களின் ஞானஸ்தானம் பெற்ற தமிழ் புலி எதிர்ப்பு படைப்பாளிகளின் நூல்களை படிக்கலாம். அன்று யாழ் நூலக எரிப்பு எமது போராட்டத்தை வலுப்படுத்தியது. புத்தகங்களைப் பெருக்கியது. நாம் சாம்பலாகிவிடாமல், புதிய பக்கங்கள் எழுதப்படுகின்றன. புதிய புத்தகங்கள் எழுதப்படுகின்றன. புதிய நூலகங்கள் உருவாக்கப்படுகின்றன. ஏனெனில், அறிவாலும் போராடி இவ் உலகை வெல்ல வேண்டும் என்ற தலைவர் பிரபாகரனின் சிந்தனை விதைக்கப்பட்ட மண் இது.