ஆசன ஒதுக்கீடு: இணக்கமின்றி முடிந்த கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் வடமாகாண ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக கூட்டப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவின் கூட்டம் இணக்கப்பாடுகள் இன்றி முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டம் யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றபோது அங்கு தேர்தலில் வேட்பாளர் ஆசனம் தொடர்பாகப் பூர்வாங்கப் பேச்சுக்கள் நடந்தன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஏழு எம்.பிக்களைத் தெரிவு செய்வதற்காக பத்து வேட்பாளர்களைக் கொண்ட பட்டியல் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

இம்முறை யாழ்.மாவட்டத்தில் தங்களுக்கு தலா இரண்டு இடங்கள் தரப்படவேண்டும் என்று நேற்றைய கூட்டத்தில் ரெலோவும், புளொட்டும் வலியுறுத்தின என அறியவந்தது. இம்முறை கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல.எவ். இல்லாமையால், கடந்த தடவை தந்த ஓர் இடத்துக்கு மேலதிகமாக இரண்டு இடங்கள் தங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பது புளொட்டின் நிலைப்பாடாக இருக்கின்றது,

ஆனால் புளொட், ரெலோ, இரண்டு கட்சிகளுக்கும் சேர்த்து யாழ்.மாட்டத்தில் நான்கு இடங்களைத் தரமுடியாது, ஆக மூன்று இடங்களையே ஒதுக்க முடியும். அதை நீங்கள் உங்களுக்குள் பங்குபோட்டுக்கொள்ளுங்கள் என்பது இலங்கைத் தமிழரசுக் கட்சித் தரப்பின் பதிலாக இருந்ததாக அறியமுடிந்தது.

தற்போதைய தமிழரசு சார்பில் யாழ்.மாவட்டத்தில் நான்கு எம். பிக்கள் உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து மேலும் மூன்று இடங்கள் தங்களுக்குத் தேவைப்படுகின்றன எனத் தமிழரசு வலியுறுத்துகின்றது. இருந்த போதிலும் பங்காளிக் கட்சிகள் இதனை ஏற்கத் தயாராக இல்லாததால் நேற்றைய கூட்டம் இணக்கமின்றி முடிவுக்கு வந்தது. எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பில் சம்பந்தன் தலைமையில் மீண்டும் கூடிப் பேசுவதென்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது.