யாழில் மாணவி வெட்டிக் கொலை – நேரில் பார்த்தவர்கள் வழங்கிய சாட்சி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட மாணவி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நேரில் கண்டவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் பேருவளை பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான ரோஷனி கான்சனா என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

4 வருடங்களுக்கு முன்னர் இராணுவ சிப்பாய் ஒருவருடன் திருமண பந்தத்தில் இணைந்த குறித்த பெண் பல்கலைக்கழகத்தில் 4 வருடங்களுக்கு முன்னர் இணைந்துள்ளார்.

இராணுவ சிப்பாய்க்கும், குறித்த பெண்ணுக்கும் தொடர்ந்து குடும்ப பிரச்சினை ஏற்பட்டமையினால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அவர் தனது வீட்டிற்கு வந்துவிட்டதாக உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மாணவியின் தந்தை களுத்துறை பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக செயற்பட்டுள்ளார்.

நான்கு பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் உயிரிழந்த மாணவி மூத்த மகளாகும். அத்துடன் அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இறுதி வருட மாணவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்ல நேற்று குறித்த மாணவியை சந்திப்பதற்காக இராணுவ சிப்பாய் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கையில் இருந்த கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு கடலில் தள்ளியுள்ளார்.

அங்கிருந்து அவர் தப்பி செல்லும் போது அவரை பின் தொடர்ந்து சென்ற மக்கள் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கருத்து வெளியிடுகையில்,

“குறித்த பகுதியில் காதலர்கள் சந்தித்துக் கொள்வது சாதாரண விடயமாகும். இந்த இருவரும் அங்கிருந்ததனை நாம் அவதானித்தோம். இருவருக்கும் இடையில் ஏதோ பிரச்சினை உள்ளதென்று எங்களுக்கு புரிந்தது.

எனினும் நாங்கள் அதனை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. திடீரென இந்த பெண் கத்தும் சத்தம் கேட்டது. இளைஞன் கத்தியால் குத்திவிட்டார் என்பது எங்களுக்கு புரிந்தது. அதன் போது நாங்கள் அருகில் செல்வதற்கு முன்னர் அந்த பெண்ணை கடலுக்குள் தள்ளிவிட்டு அவர் அங்கிருந்து தப்பி சென்றார். எனினும் இதனை அவதானித்த இளைஞர்கள் அவரை பின் தொடர்ந்து சென்று பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்” என்று குறிப்பிட்டுள்ளனர்.