மைத்திரி கூறியும் யாழில் இராணுவ கெடுபிடிகள் குறையவில்லை

வடக்கில் இராணுவ கெடுபிடிகளைக் குறைக்குமாறு, இராணுவத் தளபதிக்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்ட போதிலும், அதில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், சோதனைகள் இடம்பெற்றிருந்தது.

எனினும் நாட்டின் பிற இடங்களைவிட வடக்கில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளது. பல இடங்களில் சோதனைச் சாவடிகள் போடப்பட்டிருப்பதுடன், பயணிகளின் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்படுவதுடன், பதிவு செய்யப்பட்டே அனுமதிக்கப்படுகின்றது.

இதை தமிழ் அரசியல்வாதிகள் கடுமையாக கண்டித்தனர். பாராளுமன்றிலும் சுட்டிக்காட்டியிருந்தனர்.  அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் வடக்கில் இராணுவத்தினரின் கெடுபிடிகளைக் குறைக்குமாறு சிறிலங்கா ஜனாதிபதியிடம் கோரியிருந்தார். இதனை ஏற்ற ஜனாதிபதி இராணுவத் தளபதியிடம் உத்தரவிட்டிருந்தார்.

எனினும் வடக்கில் குறிப்பாக பூநகரி, ஆனையிறவு, நாவற்குழி போன்ற இடங்களில் இராணுவத்தினர் பயணத் தடைகளை விதித்து, சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்கள் இராணுவத்தின் கெடுபிடியில் சிக்குண்டு பயணிக்கின்றமையை காணமுடிகின்றது.