மைத்திரியின் இறுதிக்கால நகர்வு – கொழும்பு துறைமுக நகரம் 99 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது

சீனா நிறுவத்தின் உதவியில் அபிவிருத்தி செய்யப்படும் கொழும்பு துறைமுக நகரத்தின் உறுதியை 99 ஆண்டு கால வாடகைக்கு சிறீலங்கா அரசு உத்தியோகபூர்வமாக நேற்று (29) சீனா நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

சிறீலங்கா அரச தலைவர் செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிறீலங்காவுக்கான சீனா தூதுவர், மற்றும் சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா ஆகியோர் உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

சிறீலங்கா நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் உறுதி அடங்கிய ஆவணத்தை சீன நிறுவனத்தின் அதிகாரிகளிடம் கையளித்தனர்.

அபிவிருத்திக்காக சீனா வழங்கிய நிதியை மீண்டும் செலுத்தும்வரை கொழும்பு துறைமுக நகரத்தின் நில உரிமையை சீனா கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அபிவிருத்தியானது, சிறீலங்காவுக்கு மிகவும் முக்கித்துவம் வாய்ந்தது, அது நீண்டகால பொருளாதார நலனைக் கொண்டது என இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் போருக்கு ஆதரவுகளை வழங்கிய நாடுகளை அனுசரித்துப் போகவேண்டிய நிலைக்கு சிறீலங்கா தள்ளப்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு பலாலி விமானநிலையம் உள்ளிட்ட வடக்கை வழங்கியுள்ள சிறீலங்கா அரசு அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் கொழும்பு துறைமுக நகரத்தையும் சீனாவுக்கு வழங்கியதன் மூலம் சிங்கள மக்களுக்கு ஒரு பாதுகாப்பான நிலைய உருவாக்க முற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.