மெய்நிகர் (VIRTUAL) பாராளுமன்றம், ஏன்? – மனோ கணேசன்

பிரித்தானிய பாராளுமன்றம் முதல் பக்கத்து குட்டி நாடான மாலைத்தீவு பாராளுமன்றம் வரை பல்வேறு உலக நாட்டு சட்டசபைகள் இன்று, கோவிட்-19 மத்தியில் மெய்நிகர் (VIRTUAL) பாராளுமன்றங்களாக கூடுகின்றன.

அதாவது, இந்நாடுகளின் எம்பீக்கள் தம் வீடுகளில் இருந்தபடி, சபாநாயகர் தலைமையில், காணொளி தொழில்நுட்பம் மூலம் கூடி பேசி விவாதிக்கின்றார்கள்.

இந்நிலையில் நம் நாட்டில், இந்த கொரோனா வைரஸ் தேசிய நெருக்கடியையே காரணமாக காட்டி, எதிரணி உறுப்பினர்களை வீடுகளில் முடக்கி வைத்து விட்டு, தாம் விரும்பியவாறு இந்த அரசு காய் நகர்த்துகிறது.

கொரோனா கட்டுப்பாடு, வாழ்வாதார நிவாரணங்கள் ஆகியவை தொடர்பில் இந்த அரசின் நடவடிக்கைகளுக்கு, ஆரம்பத்தில் நாமும் அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒத்துழைப்பு வழங்கினோம். மக்களும் இன, மத, கட்சி பேதங்கள் இல்லாமல், ஜனாதிபதியின் ஆரவார அறிவிப்புகளை வரவேற்றார்கள்.

ஆனால், இன்று கொரோனா நாளுக்கு நாள் வளர்கிறது. பரிசோதனை செய்யப்பட வேண்டிய பெருந்தொகையானோர் இன்னமும் இருக்கிறார்கள். உரிய மருத்துவ கருவிகள் இல்லை. அப்படி பரிசோதனை செய்யப்பட்டால், இன்றைய நோயாளர் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

அப்படியானால், இந்நாடு இன்னமும் பல மாதங்கள் ஊரடங்கினால் மூடப்படலாம். இன்றே வாழ்வாதார சவால்களுக்கு உள்ளாகியுள்ள அப்பாவி மக்கள், கொரோனா தவிர்ந்த ஏனைய மருத்துவ சிக்கல்களை எதிர்நோக்கும் நோயாளர்கள், நகரங்களில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்த உழைப்பாளர்கள் (MIGRANT WORKERS), எதிர்வரும் வாரங்களில் இன்னும் பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்க நேரலாம்.

ஏனெனில், பெரும் எடுப்பில் பேசப்பட்ட ஜனாதிபதியின் வாழ்வாதார நிவாரணங்கள் நாடெங்கும் மக்களை சென்று இன்னமும் அடையவில்லை. அடையும் இடங்களிலும் பாரபட்சங்கள் காட்டப்படுகின்றதாக பரவலான புகார்கள் நாள்தோறும் என்னை வந்தடைகின்றன.

இந்நாட்டு அரசாங்கத்துக்கு, இன்றைய கொரோனா சூழலில், அமெரிக்க அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, சீன அரசாங்கம் ஆகியவை பலமில்லியன் கணக்கான பெருந்தொகை டொலர்களை உதவியாக வழங்கியுள்ளன.

இவை தனியொரு கட்சிக்கோ, தனி நபர்களுக்கோ, தனி அரசியல் தலைவர்களுக்கோ வழங்கப்படுகின்ற உதவிகள் அல்ல. இவை இலங்கை நாட்டுக்கு, மக்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகள். இன்னமும் பெருந்தொகை உதவி நன்கொடைகள், இலகு கடன்கள் இப்படி வழங்கப்பட உள்ளன.

அரசியலமைப்பின்படி பாராளுமன்றத்துக்கே நாட்டின் நிதிவளம் தொடர்பில் முதன்மை அதிகாரம் உள்ளது. ஆகவே இவற்றுக்கு என்ன நடக்கின்றது? இவை கொரோனா கொடும் நோய் தடுப்புக்கும், இந்நாட்டு மக்கள் நலன் சார்ந்த நிவாரணத்துக்கும் பயன்படுத்தபடுகின்றனவா என பாராளுமன்றம் கூடி ஆராய கூடாதா?

கொரோனா தடுப்பு பற்றி, மக்களின் வாழ்வாதாரங்கள் பற்றி அடுத்த ஆகஸ்ட் மாதம்வரை தெரிவு செய்யப்பட்டு இருந்த மக்கள் பிரதிநிதிகள் ஆராய கூடாதா? ஆராய்ந்து மக்களுக்கு அறிவிக்க கூடாதா?

நான் “வீட்டில் சும்மா முடக்கியிருக்க” விரும்பும் மக்கள் பிரதிநிதியல்ல. எல்லாம் நன்றாகவே நடக்கின்றது, எல்லாமே மக்களுக்கு கிடைக்கின்றது, என ஆளுவோருக்கு ஆலவட்டம் பிடித்து, வளர்க்கும் கட்சி தலைவனும் அல்ல. ஆகவேதான் இந்த கேள்விகளை கேட்கிறேன்.