மூன்றாவது நாளாகவும் விசாரணை;சிக்கித் தவிக்கும் சுவிஸ் தூதரக பணியாளர்

கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியிடம் இன்றும் (10) வாக்குமூலம் பெறப்படவுள்ளது.இதனிடையே, சுவிஸ் அதிகாரியிடம் நேற்று இரண்டாவது நாளாக 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற அவர் மீண்டும் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதன் பின்னர் நேற்று மாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவர் இன்றைய தினமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய அதிகாரியிடம் மீண்டும் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியிடம் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று நீதிமன்றுக்கு அறிவித்தது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நேற்று மாலை 5.30 மணிக்குச் சென்ற சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் கானியா வெனிஸ்டர் பிரான்சிஸிடம், நேற்று அதிகாலை 2.30 வரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரிடம் மீண்டும் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளதாக விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில், கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்னவிற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்தது.

சாட்சியங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன, தூதரக பெண் அதிகாரிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டார்.

அவருக்கு பாலியல் வன்கொடுமை அல்லது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சட்ட வைத்திய அதிகாரிக்கு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

தூதரக பெண் அதிகாரியின் உளநல பாதிப்பு தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், விசாரணையை விரைவில் நிறைவு செய்யுமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார்.