முஸ்லிம்கள் நிதானமிழந்து கருத்துத் தெரிவிப்பது ஆபத்து – முஸ்லிம் மீடியா போரம்

முஸ்லிம் அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும் உலமாக்களும் தமது உரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் என்பவற்றின் போது, தேசிய நீரோட்டத்திலிருந்து விலகிய கருத்துக்களைத் தெரிவிப்பது குறித்து, அவதானத்துடன் செயற்படுவது சிறந்தது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆகிய அமைப்புக்களின் தலைவர் என்.எம். அமீன், சகோதா மொழி ஊடகங்களில் தொடர்ந்தேர்ச்சியாக வெளியாகும் இன ரீதியிலான கருத்துக்களைச் சுட்டிக்காட்டி இந்த வேண்டுகோளை சம்பந்தப்பட்டவர்களிடம் விடுக்குமாறு டெய்லி சிலோனிடம் கேட்டுக் கொண்டார்.

நாடு எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில் முஸ்லிம் பிரமுகர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் எல்லா ஊடகங்களிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சில ஊடகங்கள் தங்களது பாணியில் அதனை வெளியிட்டு வருவது கவலைக்குரியதாகவும் அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் மொழியில் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்கள், சில போது வேறு மொழிகளுக்கு மாற்றம் செய்யப்படும் போது தவறான கருத்தை வழங்கும் விதத்திலும் எடுத்துச் செல்லப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதனால், வார்த்தைப் பிரயோகங்களை உணர்ச்சிவசப்பட்டு கொட்டிவிடுவதிலிருந்து தவிர்ந்து, நிதானமாக தேசிய நீரோட்டத்திலிருந்து முன்வைப்பது காலத்தின் தேவையாகும் எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் மேலும் கேட்டுக் கொண்டார்.