“முள்ளிவாய்க்கால் தமிழரின் விடுதலைமுற்றம்“-தமிழர் விடுதலை நடுவம்

தமிழீழ தேசத்தின் தார்மீகத்தையும்,எம்தேசத்திற்கே உரித்தான இறையாண்மை யினையும் கட்டியங் கூறியபடி, சத்தியத்தின் வழியில் அத்தேசத்து மக்களின் முழுமையான பலத்துடனும், ஆதரவுடனும்தமிழீழ நடைமுறை அரசானது தனக்கேயுரிய தனித்துவத்தோடு 2009 ஆம் ஆண்டுவரை நிறுவப்
பட்டிருந்தது.

இந் நடைமுறை அரசானது,பூமிப்பந்திலுள்ள ஒட்டு மொத்த தமிழர்களது அபிலாசைகளின் பிரதிபலிப்பாகவும், தமிழினத்தின் மாபெரும் வரலாற்றுத் தொடர்ச்சியின் குறியீடாகவும்,அர்ப்பணிப்புக்கள் நிறைந்த விடுதலைப்பாதையில் கண்ணியமாக முள்ளிவாய்க்காலின் எல்லைக்கோடுகள்வரை பெருமையோடு நிமிர்ந்து நின்றது.

இத்தகைய பெருமைமிக்க தமிழர்களின் அரச கட்டுமானமானது, தமிழீழத் தேசியத்தின் அடையாளமாக உருவெடுத்தமையினையும்,அதற்கான மகத்தான அங்கீகாரம் மக்களினால் கிடைக்கப் பெற்றமையினையும் ஏற்றுக்கொள்ளமுடியாத அந்நிய சக்திகளும்,கண்மூடித்தனமாக சிறிலங்கா அரசை ஆதரிக்கும் பன்னாட்டுச் சமூகங்களும் சிறிலங்கா அரசோடு இணைந்து, தமிழர்களது நடை
முறை அரசை முழுமையாக அழித்து நிர்மூலமாக்க முள்ளிவாய்க்கால்வரை கைகோர்த்து நின்றன.

இதற்காக அவ் அந்நிய சக்திகள்,தமிழீழத்தின் தார்மீகத்தைத் தாங்கி நின்ற அசைக்கமுடியாத எம்மக்கள் சக்தியை இலக்குவைத்து, மாபெரும் இனவழிப்புக்குத் தயாராகி நின்றன.இத்தகையதொரு மாபெரும் சவால் நிறைந்தவேளையில்,  தமிழீழமானது தனக்கே உரித்தானமகத்துவமான தியாகங்களோடும் அர்ப்பணிப்புக்களோடும் அதனை எதிர்கொள்ளத்துணிந்து,முள்ளிவாய்க்கால்வரை
தனது விடுதலை வேட்கையினை மிக ஆழமாக விதைத்து நிற்கின்றது.

இத்தகைய தமிழர்களுக்கெதிரான பாரிய திட்டமிடப்பட்ட இனவழிப்பு யுத்த நடவடிக்கையில், மக்களுக்கான உணவு, மற்றும் மருந்துப் பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தடுத்து நிறுத்தப்பட்டு, பசி பட்டினியாலும்,காயங்களுக்கு மருந்துகளின்றியும் அம் மக்களை அடிபணியவைக்க
கங்கணங்கட்டி நின்றன. இதற்கேதுவாக, பாதுகாப்பு வலயம் என சிறிலங்கா அரசினால் பொய்யாகஅறிவிக்கப்பட்ட பிரதேசங்களில்,மக்கள் திட்டமிட்டு வருவிக்கப்பட்டு வைத்தியசாலைகள்மீதும், மக்கள் தங்குமிடங்கள் மீதும் இலங்கை அரசபடைகளால் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

தமிழ் மக்களின் மனோபலத்தைச் சிதைக்கின்ற வகையில் எத்தகைய நிலைக்கும் துணிந்துவிட்ட சிறிலங்கா அரசானது,பாரிய உயிர்க்கொலைகளையும், போர்க் குற்றங்களையும் துணிந்து அரங்கேற்றியது.

அவ்வாறான மிகநெருக்கடியான சூழ்நிலையில்,உயிர்வாழ்க்கையே முழுமையான கேள்விக்குறியாக இருந்த சந்தர்ப்பத்திலும்,விடுதலை வேண்டிய இலட்சிய மனிதர்களாக, தாங்கள் நேசித்த தேசத்தைப் பற்றிப்பிடித்த தமிழீழ மக்கள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை பசி,பட்டினியோடும்,குருதிதோய்ந்த
காயங்களோடும் மிகத்துணிவோடு எதிர்கொண்டிருந்தனர்.

அன்றைய நாட்களில், முள்ளிவாய்க்கால் மண்ணில் பட்டினியால் வாடியிருந்த எல்லோரதும் பசியைப் போக்குவதற்காக, கிடைத்த அரிசியைக் கொண்டு சமைத்த உப்புக்கஞ்சியே எம் மக்களுக்கு உணவாக இருந்தது.

பசியின் கோரத்தாண்டவத்தினால் அவ்வாறு கிடைத்த உப்புக்கஞ்சிக்காக உயிரச்சத்தினையும் பொருட்படுத்தாது,குண்டுமழைக்கு மத்தியிலும் நீண்ட வரிசையில் நின்ற குழந்தைகளும் தாய்மாரும் கூட திட்டமிட்டுத் தாக்கிக் கொல்லப்பட்டனர்.

இத்தகைய கனதியான குருதியும், கண்ணீரும் நிறைந்த வரலாற்றுத்துயர நிகழ்வை, எம் நெஞ்சங்களில் நெருப்பாக்கி நினைவுகூரும் வகையில், வருடம்தோறும் மே மாதம் 18ம் திகதி மாலை 6 மணிக்கு அனைத்துத் தமிழர்களும்,தத்தமது வசதிக்கேற்ப தனியாகவோ,கூட்டாகவோ நின்று தீபம் ஏற்றி,அகவணக்கம்செலுத்தி, முள்ளிவாய்க்காலில் எமது பசிதீர்த்து உயிர்காத்த உப்புக் கஞ்சியினை
உணர்வுபூர்வமாகப் பருகி,எம் விடுதலையுணர்வை அடுத்த சந்ததியினர்க்கும் கொண்டு சேர்ப்போம்.

இவ் வரலாற்று நடைமுறையை எமது “மரபியல் எழுச்சிக்குறியீடாக” காலந்தோறும் கடைப்பிடித்து,எம் விடுதலை வேட்கையை வரலாற்றில் நிலைத்து நிற்கும் வகையில், அதற்காக உயிர்நீத்த அத்தனை ஆன்மாக்களையும் நினைவிற்கொள்வோம்!

முள்ளிவாய்க்காலில் இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக உரத்த குரலெடுத்து,எமக்கான நீதியை வென்றெடுத்து, எம் தேசத்தை நிலைநிறுத்தும் வரையும்,அதன்பின்னரும் இதனை ஒவ்வொரு தமிழினத்தின் குடிமகனும் கடைப்பிடிக்குமாறு அனைத்து நாடுகளினதும் “தமிழர் விடுதலை நடுவம்” சார்பாக எம்மக்களை அன்புரிமையுடன் வேண்டிநிற்கின்றோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

நடுவப் பணியகம்.
தமிழர் விடுதலை நடுவம்.