முள்ளிவாய்க்காலும், சமயசார்பின்மையும், பூகோள அரசியலும் – பேராசிரியர் ஜுட் லால் ஃபெனான்டோ – தமிழில் ந மாலதி

இலங்கைதீவில் இன்று நாம் காண்பது இதற்கு முன்னெப்போதும் நடக்காத ஒன்று.இது வெளியிலிருந்து இத்தீவு முழுவதும் திணிக்கப்பட்டிருக்கிறது. பேரழிவுகளை கொண்டுவரும் பூகோள ரீதியாக சொல்லப்படும் – கிறிஸ்தவத்திற்கு எதிரான இஸ்லாம் அல்லது மேற்குலகத்திற்கு எதிரான இஸ்லாம் அல்லது ஏனையோருக்கு எதிரான இஸ்லாம் – என்ற கதையாடலோடு இத்தீவில் நிகழ்ந்தவை மிகவும் அழகாக ஒத்துப்போகிறது. இலங்கை தீவில் ஒற்றையாட்சியை உருவாக்கி வழிநடத்தி ஈழத்தமிழருக்கு எதிராக இதை பாதுகாத்த அதே  சக்திகள்தான் இப்பேரழிவு கொண்டுவரும் கதையாடலையும் உருவாக்கியது.

முள்ளிவாய்க்கால் அழிவின் பத்தாண்டு நிறைவை நினைவுகூரும் இக்காலத்தில், இத்தீவில் இப்போது நடப்பவற்றை பற்றி நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

பத்து ஆண்டுகளின் பின்னரும் ஈழத்தமிழரின் சம்மதத்தை சிங்கள அரசால் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியவில்லை.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு பின்னரும் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை பல வழிகளில் தெரிவித்த வண்ணம் போராடியே வருகிறார்கள். அபகரிக்கப்பட்ட தங்கள் நிலத்தை மீளப்பெறவும், சிங்கள ராணுவத்தை வெளியேற சொல்லியும், கடத்தப்பட்ட, சரணடைந்த தங்கள் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்று அறியவும், வடக்கு-கிழக்கை இணைக்கவும், அதாவது நீதிக்காக போராடுகிறார்கள்.

ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னர், பொது எதிரி ஒன்று உருவாகி இருப்பதால், வடக்கு-கிழக்கில் இராணுவத்தை தொடர்ந்து தரிக்கவைக்கும்படி சிறிலங்கா அரசை சில தமிழ் தலைவர்கள் கேட்கிறார்கள். ஒற்றையாட்சி சிறிலங்காவானது ஐ-அமெரிக்க, பிரித்தானிய, இந்திய வல்லரசுகளின் ஒரு தந்திரோபாயமாக ஒரு இராணுவ கருவியாக தொடர்வதற்கு “இந்த பொது எதிரி” என்ற கருத்தாக்கம் இப்போது துணை போகிறது. வேறொரு வழியில் சொல்வதானால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஊடாக ஒற்றையாட்சி வலுப்படுத்தப்பட்டிருக்கிறது.

 நான் இதை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையேயான திணிக்கப்பட்ட கொடூரமான ஒற்றுமையாக, இஸ்லாமியர்களுக்கு எதிரான புத்த சமயத்தவருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான கொடூரமான ஒற்றுமையாகவே விபரிப்பேன்.

இத்தீவிலுள்ள மக்களுக்கு இது முற்றிலும் புதிய ஒரு அனுபவம்.இத்தருணத்தில் எமது எதிர்காலத்தைப்பற்றி நாம் ஆழமாக சிந்திப்பது மிகவும் அவசியம்.

ஈழத்தமிழரின் 60 ஆண்டு கால போராட்டத்தின் பின்னர் முள்ளிவாய்காலில் 70,000 மக்கள் கொல்லப்பட்டதாக ஐநா அறிக்கைகள் சொல்கின்றன. முன்னாள் மன்னார் ஆயரின் கணிப்பின்படி 140,000 மக்கள் கணக்கில் இல்லை. இதிலிருந்து தெரிவது என்னவெனில் தமிழீழ அரசும், விடுதலைப்புலிகளின் இராணுவ கட்டுமானங்களும் முற்றாக அழிக்கப்பட்ட போது பொரும் தொகையான மக்களும் சிறிலங்கா அரசால் கொல்லப்பட்டார்கள் என்பதுவே.

இந்த இனவழிப்பில் உலகின் வல்லரசுகளின் பங்கு என்ன?

தமிழருக்கு எதிரான மாபெரும் படுகொலைகளுக்கு பிரித்தானியாவும் ஐ-அமெரிக்காவும் துணை போயிருக்கின்றன என்று டப்ளின் தீர்பாயத்தின் அறிக்கையும் பிரேமன் தீர்பாயத்தின் அறிக்கையும் தீர்ப்பு வழங்கி இருக்கின்றன. அதுமட்டுமல்ல இது ஒரு இனவழிப்பு – ஒரு தேசத்தின் அத்திவாரங்களை, அதன் மக்களை, அதன் தலைமைகளை, அத்தேசத்திற்காக போராடிய மக்களை, அவர்களின் முன்பள்ளி ஆசிரியர்களிலிருந்து அவர்களின் முதன்மை தலைவர்கள் உட்பட யாவும் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன.

இது ஏன் நடந்தது?

வரலாற்று ரீதியாக இலங்கை தீவு இராணுவத் தேவைகளுக்கு முக்கியமான ஒரு இடமாக, முதலில் பிரித்தானியாவும் பின்னர் அதனுடன் சேர்ந்து ஐ-அமெரிக்காவும் பார்த்திருக்கின்றன. இத்தீவு பலமான இராணுவத்தை கொண்ட ஒரு ஒற்றையாட்சியின் கீழ் இருந்தால் தான் இத்தீவை இந்திய பெருங்கடலில் ஒரு இராணுவ கேந்திரமாக பாவிக்கலாம்.

ஏகாதிபத்திய அரசுகள் இத்தீவிற்கு கவரப்பட்டதற்கு இதன் அழகான கடற்கரைகளோ இதன் மலையகப்பகுதிகளின் சுவாத்தியமோ, இதன் பழமையான தமிழ் சிங்கள நாகரீகங்களோ காரணமல்ல. அதற்கு உண்மையான காரணம் இந்தியாவின் எல்லையில், இந்திய பெருங்கடலின் மையத்தில், கப்பல் பாதைகள் அமைந்துள்ள இடத்தில் இத்தீவு அமைதுள்ளதே.

உண்மை என்னவென்றால், பிரித்தானிய காலனிய காலத்தில் சிங்களவர்கள் தமிழர்களைவிட உயர்ந்த இனம் என்று நம்பவைக்கப்பட்டார்கள். சிங்களவர்கள் தமிழர்களைவிட பிரித்தானியர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று நம்பவைக்கப்பட்டார்கள்.

உண்மை என்னவென்றால் பிரித்தானிய இராச்சியம் இலங்கையை ஆக்கிரமித்துகொண்டு இருந்த அதே காலத்தில், தமிழர்கள்தான் இத்தீவை ஆக்கிரமித்தவர்கள் என்று சிங்களவர்கள் நம்பவைக்கப்பட்டார்கள். இக்காரணத்தால் இத்தீவுக்கு “சுதந்திரம்” கொடுக்கப்பட முன்னரே, தமிழர்கள் இத்தீவில் ஓரங்கட்டப்பட்டார்கள். சிங்கள தலைமைகள் இத்தீவின் சுதந்திரத்திற்காக இந்திய சுதந்திர போராட்ட தலைமைகள் போல ஒருபோதும் போராடியதில்லை.

பதிலாக சிங்கள தலைமைகள் காந்தியின் குடியரசு கோரிக்கையை எதிர்த்து முடியரசு கோரிக்கையையே முன்வைத்தார்கள். அதே நேரத்தில், யாழ்ப்பாண இளையோர் காங்கிரஸ் தான் காந்தியை பின்பற்றி குடியரசு கோரிக்கையை முன்வைத்தார்கள். இதனால் இந்தியாவின் சுதந்திர போராட்ட சுயாட்சி சிந்தனை சிங்கள பகுதிகளைவிட தமிழ் பகுதிகளிலேயே மேலோங்கி இருந்தது.

தங்கள் தாயகத்தில் என்ன நடக்கிறது என்பதையும் இதனால் தங்கள் தேசிய சிந்தனைக்கும் என்ன நடக்கிறது என்பதையும்  சிங்கள் மக்களே அறியவில்லை. “சுதந்திரத்திற்கு” பின்னர் ஒற்றையாட்சி இறுக்கமாக்கபட்டுள்ளது. இதனாலேயே காந்தியின் சத்தியாகிரக வழியை பின்பற்றி 30 ஆண்டுகளாக தொடர்ந்த அகிம்சை வழி தமிழர் போராட்டம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆயதப்போராட்டமான பரிணமித்தது.

தமிழர் போராட்டத்தின் வடிவத்தையே, அவர்கள் கொடூரமானவர்கள், தற்கொலைதாரிகள், தீவிரவாதிகள் போன்ற சொல்லாடல்களால் உலக வல்லரசுகள் விமர்சித்து வந்திருக்கின்றன.

உண்மையில் போராட்ட வடிவத்தை மட்டும் இவர்கள் எதிர்க்கவில்லை. போராட்டத்தையே இவர்கள் எதிர்த்தார்கள். தாயகத்திற்கான, தேசியத்திற்கான, சுயநிர்ணய உரிமைக்கான போரட்டத்தை, அது அகிம்சை வழியிலானதாக இருந்தாலும் ஆயுத வழியிலானதாக இருந்தாலும் இவர்கள் எதிர்த்தார்கள். வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஆதரித்து தமிழ் அரசியல் தலைமைகளுக்கு தமிழர்கள் கொடுத்த ஆணைக்கே விடுதலைப்புலிகள் வடிவம் கொடுத்தார்கள் – ஒரு அரசை நிறுவினார்கள்.

நீண்டு தொடர்ந்த இனவழிப்பு செயற்பாடுகளை இந்த நடைமுறை அரசு ஓரளவு தடுத்து நிறுத்தியது. இராணுவ சாதனைகள் ஊடாக தமிழர் விடுதலை போராட்டம் சிங்கள அரசின் இனவழிப்பு நடவடிக்கைகளை நிறுத்தி அதனுடன் அரசியல் ஒப்பந்தம் செய்ய ஆயத்தமானது. ஐரோப்பிய ஒன்றியமும் இதை ஆதரித்தது. ஆனால் ஐக்கிய-அமெரிக்க, பிரித்தானிய, இந்தியா அரசுகள் ஆரம்பத்திலிருந்தே இதை எதிர்த்தன.

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் அதன் இராணுவ வெற்றிகளை கொண்டு சனநாயக அரசியல் வெளியை உருவாக்கி கொடுத்தது. அதுதான் 2002ம் ஆண்டு சமாதான பேச்சு வார்த்தைகள். இந்த சனநாயக வெளியை அழிப்பதற்குதான் தான் 70,000 மக்கள் கொல்லப்பட்டார்கள். 140,000 மக்கள் கணிப்பில் தவறவிடப்பட்டார்கள். இதன் பின்னர் தொடரும் இனவழிப்பில் சிங்கள குடியேற்றத்தாலும், புத்தமத திணிப்புகளாலும், நில அபகரிப்புக்களாலும் தமிழர் தாயத்தின் தோற்றமும் குடிப்பரம்பலும் தலைகீழாக மாற்றப்படுகிறது.

தமிழர் விடுதலை போராட்டம் ஒரு சமயம் சாராத தேசிய போராட்டம். இத்தேசிய போராட்டத்தில் சமயம் இல்லை. சமயத்தை அடிப்படையாக கொண்டு பிரித்தானியாவால் நிறுவப்பட்ட சிங்கள பௌத்த அரசை எதிர்த்தே சமயம் சாராத தமிழர் போராட்டம் உருவானது. உண்மையில் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் சமயசார்பற்ற ஒரு சிந்தனையோட்டம் அன்று இருந்தது. ஆனால் பிரித்தானியா சிங்கள பௌத்த சிந்தனை சார்ந்த தேசியத்தையே முன்னிறுத்திது. அதுவே தமிழர்களுக்கு எதிரான ஒரு மனநிலையை சிங்கள மக்களிடம் பரப்பியது.

சிங்கள பௌத்த தேசியம் சமயம் சார்ந்தது. தமிழர்களின் தேசியம் சமயம் சாராதது.

தமிழர் தலைமைகள் சமயத்திற்கு என்ன இடத்தை கொடுத்தார்கள்?

 பிரெஞ்சு கம்யூனிச அரசுகள் போல தமிழர் தலைமைகள் சமயத்திற்கு எதிரானவை அல்ல. இவர்களின் நிலைப்பாடு இந்தியாவின் சமயம்சாரா கொள்கைள் போன்றது. அதாவது பல சமயங்களையும் ஒரே தூரத்தில் வைத்து கொள்கைகளை வகுப்பது. அதே நேரம் சமயங்களில் காணப்படும் முற்போக்கு விடுதலை சிந்தனைகளை உள்வாங்குவது. தந்தை செல்வா ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர். தமிழர் சமூகம் பெரும்பான்மை இந்துக்கள் கொண்ட சமூகம். இருந்தும் கிறிஸ்தவ அரசியல் தலைவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார். ஏனெனில் தமிழர் போராட்டம் சமயம் சார்ந்தது அல்ல.

விடுதலைப்புலிகள் காலத்தில் அவர்களின் அரசியல் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் சமய முரண்பாடுகள் எதுவும் இருக்கவில்லை. போராட்டம் ஒற்றையாட்சிக்கு எதிராகவே சுழன்றது.

விடுதலைப்புலிகளின் ஒரு முக்கிய அரசியல் தலைவரான பாலகுமார் தெளிவாக இதை எழுதியிருக்கிறார். வரலாற்று ரீதியாக தமிழர்களின் பூர்விகத்தில் புத்தமதம் இருக்கிறது. ஆனால் அது, அடக்கியாழும் ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் வரும்போது, முக்கியமாக புத்தரின் சிலைகளும் தூபிகளும்,  நாம் அதை எதிர்க்கிறோம். நாம் புத்தமதத்தை எதிர்க்கவில்லை. சிங்கள அடக்குமுறை அரசின் கருவியாக அது வரும்போது அதை நாம் எதிர்க்கிறோம். இதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

சமயத்தில் உள்ள சில அடிப்படைவாத கொள்கைகளை இவ்வாறுதான் தமிழர் விடுதலை போராட்டம் தணித்து வைத்திருந்தது. அந்த காலத்தில் தமிழர் பகுதிகளில் அடிப்படைவாத சமய குழுக்கள் தோன்றவில்லை. ஐ-அமெரிக்காவினதும் இஸ்ரேயிலினதும் ஆதரவுடன் சவுதி அரேபியாவிலிருந்து கிழக்கு மாகணத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட வஹாபிசமும் அப்போது தீவிரமாக எழும்பவில்லை.

சமாதான பேச்சுவார்தை காலத்தில் விடுதலைப்புலிகளுக்கும் இஸ்லாமிய மக்களும் இடைய இருந்த உறவு எத்தகையது?

பலர் இதை மறந்து விட்டிருக்கலாம்.

சமாதான பேச்சு வார்த்தைகளின் முக்கியமான காலத்தில் விடுதலைப்புலிகளும் வரலாற்று ரீதியாக சிங்கள பெரும்பான்மை அரசால் அடக்கப்பட்ட ஏனைய அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய அரசியல் கட்சிகள் உட்பட,  ஒரு பெரும் கூட்டணியை உருவாக்கியிருந்தார்கள். அதோடு கருணா விலகிய பின் கிழக்கு மாகாணத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்ட கௌசல்யன் இஸ்லாமிய மக்களுடன் நெருக்கமாக வேலை செய்தார். இஸ்லாமிய மக்களும் அவர்களின் நிலத்தை ஆக்கிரமித்திருந்த சிறிலங்கா இராணுவத்தின் மேல் அதிகமான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்கள்.

தங்கள் விவசாய நிலங்களை இழந்துவிட்ட இஸ்லாமிய விவசாயிகளால் கௌசல்யனின் அரசியல் செயலகம் நிரம்பியிருந்தது எனக்கு நன்றாகவே தெரியும். கௌசல்யனின் இறுதி நிகழ்வுக்கு யாரெல்லாம் வந்திருந்தார்கள் என்பதை நினைவு படுத்துங்கள். இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மட்டுமல்ல. தமிழ் பேசும் இஸ்லாமியர்களும் வந்திருந்தார்கள். அதுதான் பலரையும் இணைத்த சமயம் சாராத தமிழர் தேசிய விடுதலை போராட்டம். இந்த சாதனையைதான் அழித்தொழித்தார்கள்.

நாம் 70,000 உயிர்களை மட்டும் தொலைக்கவில்லை. நாம் பெரும் நிலப்பரப்புக்களை மட்டும் இழக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக எல்லா மதங்களையும் கொண்டாடும் அதே நேரம் மத பழக்கங்கள் அடிப்படைவாதமாக மாறாமல் தடுக்கும் பல்லின மக்கள் இணைந்த தேசிய உணர்வையும் இழந்துவிட்டோம்.

2009 படுகொலைகளுக்கு பின் இந்திய அரசால் ஊக்குவிக்கப்பட்ட இந்துத்துவா சக்திகள் தமிழர் தாயகத்திற்கும் வந்துள்ளன. வஹாபி போக்குகளும் தீவிரமடைந்துள்ளன. ஐ-அமெரிக்காவிலும் இஸ்ரேயிலிலும் இயங்கும் சியோனிஸ்ட் குழுக்களும் வந்து சேர்ந்துள்ளன. சிங்கள பெளத்த தேசியமும் வெற்றி போதையில் திளைக்கிறது. இன்று இச்சமயங்கள் எல்லாம் அடிப்படைவாத பிரிவுகளாக இத்தீவில் உருவாகியுள்ளன. முள்ளிவாய்கால் படுகொலைகளுக்கு பின் சமயங்கள் இடையேயான உறவுகள் மீளமைக்கப்பட்டுள்ளன.

நாம் உயிர்களை மட்டும் கொடுக்கவில்லை. சமயம் சாராத தேசிய விடுதலை சிந்தனை கொண்ட போக்கையும் இழந்துவிட்டு நிற்கிறோம். இதன் விளைவைத்தான் இப்போது அனுபவித்துகொண்டு இருக்கிறோம். முக்கியமாக உயிர்த்த ஞாயிறு தமிழ்-சிங்கள, கத்தோலிக்க-புரோட்டஸ்டன், தெற்கு-கிழக்கு தேவாலாய தாக்குதல்களுக்கு பின்னர்.

இத்தாக்குதல்களின் விளைவுகள் என்ன?

 கம்யூனிச சோவியத் ஒன்றியத்திலும் ஆப்கானிஸ்தானிலும் அன்று நிலவிய கம்யூனிச ஆட்சியை எதிர்ப்பதற்காக, பனிப்போர் காலத்தில் ஆப்கானிஸ்தானில் முஜஹதீன் கொரில்லாக்களுக்கு ஆதரவு வழங்கி இஸ்லாமிய அடிப்படைவாத போக்குகளை முதலில் ஐ-அமெரிக்காவே ஊக்குவித்தது. அன்றைய ஆப்கானிஸ்தான் கம்யூனிச ஆட்சியின் கீழ்தான் மூன்றாம் உலக நாடுகளிலேயே அதிகமான பெண் வைத்தியர்கள் இருந்தார்கள். அங்கு பால்நிலை சமத்துவம் மேலோங்கி இருந்தது.

ஆனால், பெண் உரிமை பற்றி பேசும் பிரித்தானியாவும் ஐ-அமெரிக்காவும் முஜஹதீன் கொரில்லாக்களை சவுதி ஆரேபியாவின் வஹாபிச கொள்கைகளை தழுவுவதற்கு ஊக்குவித்தார்கள். அதன் மூலம் இந்த கொரில்லாக்கள் சோவியத் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆட்சிக்கு எதிராக ஐ-அமெரிக்க பிரித்தானிய போரில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

வஹாபிசம் எங்கிருந்து வருகிறது?

 எவ்வாறு சிங்கள பௌத்த இனவாதம் பிரித்தானியாவால் உருவாக்கப்பட்டதோ அவ்வாறே சவுதி அரேபியாவின் அரச பரம்பரையால் பின்பற்ற படும் இஸ்லாத்தின் ஒரு சிறிய பகுதியான வஹாபிசம் முதலாம் உலக யுத்தத்தின் போது ஒட்டமான் பேரராசுக்கு எதிராக பிரித்தானிய அரசால் ஊக்குவிக்கப்பட்டது. அப்போது உருவாக்கப்பட்ட சவுதி அரேபியா வஹகாபிசத்தை பின்பற்றும் தலைமைகளின் கைகளில் கொடுக்கப்பட்டது. இந்த வஹாபிசம் தான் மத்திய கிழக்கில், முக்கியமாக அரேபிய தீபகத்தில், இருந்த இஸ்லாத்தின் முற்போக்கு சிந்தனைகளை அழித்தது.

இதை இப்போது இந்தியாவில் வளரும் இந்துத்துவா அடிப்படைவாத சிந்தனைகளிலும் பார்க்கிறோம். உலகின் வல்லரசுகள் எல்லாம் இதை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்குவிக்கப்படுவதையும் பார்க்கிறோம். இது போலவே பலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேயிலும் ஒரு கடுமையான சியோனிஸ்ட் சிந்தனையோடு உருவாக்கப்பட்டிருப்பதையும் பார்க்கிறோம். அது போலவே சிங்கள பௌத்த அரசும் இலங்கை தீவில் ஒரு தந்திரோபாயமாக தமிழர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டிருப்பதை பார்க்கிறோம்.

வரலாற்றில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் இந்த வல்லரசு நாடுகளும் இன்று தம்மை சமயம் சார நாடுகளாக முன்னிறுத்தினாலும், மறுபக்கத்தில் இங்கும், முக்கியமாக ஐ-அமெரிக்காவில், அடிப்படைவாத கிறிஸ்தவ போக்குகள் வளருகின்றன. ஐ-அமெரிக்காவில் பைபிள் பெல்ட் எனப்படும் இடங்கள் ஜோர்ஜ் புஸ் ஐயும் ஏனைய போர் முனைப்பு கொண்ட சனாதிபதிகளையும் தெரிவு செய்த இடமாக உள்ளன. இவர்களின் ஏகாதிபத்திய திட்டங்களில் சமயங்கள் அடிப்படைவாத போக்கில் செல்ல ஊக்கப்படுத்தப்படுகின்றன. அது மட்டுமல்ல, சமயங்கள் ஒன்றுடன் ஒன்று மோதவிடப்படுகின்றன.

ஐ-அமெரிக்காவும் பிரித்தானியாவும் உருவாக்கிய இந்த அழிவுகளை கொண்டு வரும் பூகோள மட்ட சமய கதையாடல்களின் மேடையாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் இலங்கைதீவு மாறியிருக்கிறது. இத்தாக்குதல்களை செய்தவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் தெற்காசியாவில், முக்கியமாக இலங்கையில், பிரித்தானிய ஐ-அமெரிக்க நன்மைகளுக்காக இயங்கியிருக்கிறார்கள்.

இராணுவத்தை வெளியேற்ற தமிழர்கள் பத்து வருடங்களாக போராடிய பின்னர், இப்போது இராணுவத்தை வெளியேற்ற வேண்டாம் என்று சொல்வது போன்ற தோற்றப்பாடுகள் காணப்படுகின்றன. இதன் மூலம் சிறிலங்கா அரசை ஏற்றுக்கொள்ளும் போக்கு தோன்றுகிறது. கடந்த பத்து வருடங்களாக குற்றம் இழைத்த அரசாக கருதப்பட்ட சிறிலங்கா அரசு, இப்போ “பாதிக்கப்பட்ட” அரசாக பார்க்கப்படுகிறது. அதனால் இந்த பாதிக்கப்பட்ட அரசு மற்றயவர்களுடன் போரிடுவதற்கு அதற்கு மேலும் பலம் தேவைப்படும் – இந்த வாதமே இத்தாக்குதலின் ஊடாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

இப்பூகோள வடிவமைப்பில் சீனாவின் பங்கு என்ன?

 முள்ளிவாய்கால் அழிவுக்கு பின் சிறிலங்கா அரசு சீனாவுடம் மேலும்  மேலும் நெருக்கமான உறவை பேணியது. ஐ-அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஐநா ஊடாக சிறிலங்காவுக்கு எச்சரிக்கைகள் விடுக்க ஆரம்பித்தன. தமிழர்களுக்கு நீதி வழங்கும் நோக்கத்துடன் இது செய்யப்படவில்லை.

ஐநா மனித உரிமை கவுன்சில் தீர்மானங்கள் சிறிலங்கா அரசுக்கு “சீனாவுக்கு நெருக்கமாக போகாதே” என்ற எச்சரிக்கையை கொடுத்தது. அதே நேரம் தமிழர்களுக்கு “மேற்குலகிற்கு நெருக்கமாக வாருங்கள், நீங்கள் வேண்டும் நீதியை நாம் கொடுக்கிறோம்” என்ற செய்தியையும் கொடுத்தது. இத்தீர்மானங்கள் ஒற்றையாட்சியை ஒருபோதும் எதிர்க்கவில்லை. பதிலாக இத்தீர்மானங்கள் முள்ளிவாய்கால் அழிவை, தமிழ் இனத்தின் அழிவை, தனிநபர் மனித உரிமை மீறல்கள் என்ற வட்டத்திற்குள் அடக்கிவிட்டது. தமிழர்களுக்கு நீதிமன்றம் ஊடாக நீதி என்ற பொய்யான ஒரு நம்பிக்கையை கொடுத்து, அரசியல் நீதி பற்றி பேச வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

இதே சக்திகள்தான் 2015 ஆட்சி மாற்றத்தையும் கொண்டு வந்தது.  அதற்கு என்ன நடந்தது?

மேலும் சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. இவையும் நிறைவேற்றப்படவில்லை. இந்த வல்லரசுகளை நம்பாமல் தாமே போரிட வேண்டும் என்ற தெளிவுக்கு களத்தில் நிற்கும் தமிழ் மக்கள் வர தலைப்படுகிறார்கள். இவர்கள்தான் முள்ளிவாய்கால் பத்து ஆண்டுகள் நிறைவை நினைவுகூர ஆயத்தமானார்கள்.  அழிவுகள் நடந்த இடத்தில் மட்டுமல்லாமல், உலகெங்கும் நினைவுகூர ஆயத்தமானார்கள். இக்கட்டத்தில்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்தன. பல உயிர்களை இழந்தோம்.

இங்கு இழக்கப்பட்ட உயிர்களும், சிறிலங்காவின் இராணுவ வெற்றி காவுகொண்ட உயிர்களும் இப்போது ஒற்றையாட்சியை பலப்படுத்துவதற்கும், பூகோள மட்டத்தில் சிறிலங்கா ஏகாதிபத்திய அரசுகளின் இராணுவ தேவைகளுக்கான ஒரு இடமாகுவதற்கும் உதவுகிறது. பூகோள மட்டத்தில் இராணுவ தளமாக மாறும் சிறிலங்கா இந்திய பெருங்கடலில் சீனாவை அடக்குவதற்கான வல்லரசுகளின் தளமாகி மீண்டும் ஒரு போருக்குள் தள்ளப்படும்.

2002ம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைகளின் போது மட்டுமே இத்தீவு உண்மையான சுதந்திரத்தை எட்டியது. இருதரப்புகளும் பிரித்தானியாவால் உருவாக்கப்பட்ட வரலாற்று மற்றும் அரசியல் விடயங்களை பேசுவதற்கு இணக்கம் கண்டன. தமிழர்களின் கூட்டு எதிர்ப்பினால் இந்த இணக்கம் தோன்றியது.

தமிழர்களின் போராட்டத்தினால் சிங்களவர்களும் சுதந்திரத்தை எட்டும் சாத்தியம் இருந்தது. இது வெளியிலிருந்து திணிக்கப்பட்டது அல்ல. சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே உருவான சமநிலையால் இந்த இணக்கம் தோன்றியது. அதுவே இத்தீவின் அரச வடிவத்தை மாற்றும், தமிழர்களையும் ஒரு தனித்துவமான தேசியமாக ஏற்கும் அரசியல் பேச்சு வார்த்தையாக மாற்றப்பட்டது. இது இரு நாடுகளாகவோ அல்லது இரு தேசங்கள் இணைந்த ஒரு நாடாகவோ இருக்கலாம் என்பது முக்கியமல்ல. இப்பேச்சுவார்த்தை, வல்லரசுகள் இத்தீவை தங்கள் இராணுவ தேவைகளுக்காக  கையாளும் போக்கை தடுத்திருக்கும்.

இந்திய பெருங்கடலை ஒரு சமாதான பிரதேசமாக வருங்காலத்தில் பிரகடனப்படுத்த வேண்டும் என்று டோக்கியோவில் இடம்பெற்ற கடைசி பேச்சுவார்த்தைக்கு பின் ஒரு நேர்காணலில் அன்ரன் பாலசிங்கம் சொல்லியிருக்கிறார். உலகம் தம்மிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் என்பதையும் அவர் தெளிவாக அப்போது சொன்னார்.

முப்பது ஆண்டுகளாக போரிட்ட சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் இப்போது கைகுலுக்கி பேச்சுவார்த்தைகள் ஊடாக ஒரு சமாதானத்தையும் சனநாயத தீர்வையும் தேடினார்கள். அதே காலத்தில் உலகம் ஈராக் பற்றிய கொள்கையில் இரண்டு பிரிவாக பிளந்து நின்றது. பிரித்தானியாவும் ஐ-அமெரிக்காவும் ஈராக் மீது படையெடுக்கும் திட்டத்தை பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் தலைமையில் ஐரோப்பா எதிர்தது. இந்தக் கட்டத்தில் தான் இலங்கை தீவின் சமாதான பேச்சு வார்த்தைகள் பிரித்தானியாவாலும் ஐ-அமெரிக்காவாலும் குலைக்கப்பட்டன. ஏனெனில் ஈராக் மீதான படையெடுப்பிற்கு தெற்காசியாவில் இன்னுமொரு பலமான தளம் தேவைப்பட்டது. அது தான் சிறிலங்கா.

தமிழர்கள் இதற்கான விலையை கொடுத்தார்கள். விலையை கொடுத்த பின்னரும் அவர்கள் தொடர்ந்து ஒரு பல்லின தேசிய முற்போக்கு அரசை உருவாக்க போராடினார்கள். இப்போதோ ஒரு பூகோள மட்ட சமய போர் இங்கு திணிக்கப்பட்டுள்ளது.

ஏகாதிபத்திய சக்திகளையும் சிங்கள பௌத்த தேசியத்தையும், இந்துத்துவா சக்திகளையும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் கிறிஸ்தவ அடிப்படை வாதத்தையும் எதிர்ப்பதற்கு இத்தீவிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமை, முக்கியமாக தமிழ் இஸ்லாமிய ஒற்றுமை மிகவும் முக்கியம். அதற்காக சிறிலங்கா அரசு முன்வைக்கும் கருத்தை நாம் எதிர்க்க வேண்டும்.

சமயம் சார்ந்த பல்வேறு சக்திகள் முன்வைப்பவற்றை நாம் எதிர்க்க வேண்டும். ஈழத்தமிழரின் சமயம் சாராத பல் மத தேசியத்தை இஸ்லாமியர்களுடன் நாம் முன்னெடுத்து செல்வது மிகவும் முக்கியம். இதனூடாகவே சிறிலங்கா அரசையும், இத்தீவை அடக்குவதற்கான கருவியாக சிறிலங்கா அரசை கையாளும் வெளிசக்திகளையும், அதனூடாக இந்திய கடல் ஒரு போர்களமாக மாற்றப்படுவதையும் நாம் எதிர்க்க வேண்டும்.

நன்றி – தமிழ்நெற் (https://tamilnet.com/art.html?catid=79&artid=39454)

பேராசிரியர் ஜுட் லால் ஃபெனான்டோJude Lal Fernando Speaker முள்ளிவாய்க்காலும், சமயசார்பின்மையும், பூகோள அரசியலும் – பேராசிரியர் ஜுட் லால் ஃபெனான்டோ – தமிழில் ந மாலதி

 

சிங்கள சமூகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜுட் லால் ஃபெனான்டோ தனது இளமைக் காலத்தில் தனது சொந்த இடமான நீர்கொழும்பில் கருப்பு ஜுலாய் கொடுமைகளை நேரில் பார்த்தார். மனச்சாட்சியின் உறுத்தலால் உந்தப்பட்டு தமிழையும் கற்று தொடர்ந்து தமிழருக்கு எதிரான போரை வெளிப்படையாக எதிர்த்தும் வந்தார். இலங்கை மீனவர் சங்கத்தின் நாடுதழுவிய ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது சிறிலங்கா நேவி வடகிழக்கு தமிழ் முஸ்லீம் மீனவர்கள் கடலுக்கு போவதை தடை செய்ததற்கு எதிராக குரல் கொடுத்தார். கத்தோலிக்க மதத்தை சேர்ந்த இவர், தேவாலய தொடர்புகள் ஊடாக, 1987-2004 காலப்பகுதியில், போர் தீவிரமாக நடந்த காலத்திலும், விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு அடிக்கடி சென்றார். சிறிலங்கா அரசின் பொருளாதார தடைகளுக்கும் தமிழருக்கு எதிரான போருக்கும் எதிராக எழுதியும் வந்தார். மனிதாபிமான உதவிகளுடன் தெற்கில் இருந்து ஒரு குழுவை தமிழ் இஸ்லாமிய அகதி முகாம்களுக்கு கூட்டிச் சென்றார். 1995இல், ஈழத்தமிழரின் தேசியம், தாயகம், சுயநிர்ணயத்தை ஏற்கும் அரசியல் நிலைப்பாட்டை பகிரங்கமாக எடுத்தார். அதே நேரம் ஹிரு எனப்படும் சிங்கள முற்போக்கு அரசியல் குழுவுடனும் இயங்கினார். இராணுவ தீர்வை எதிர்த்து, 2002 சமாதான பேச்சு வார்த்தையையும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு எட்டுவதையும் ஆதரித்தார். இறுதிப்போர் நடக்கும் போது, போருக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காக ஜெர்மனியின் பிரேமன் நகரிலுள்ள மனித உரிமை அமைப்புடன் (International Human Rights Organization-Bremen) இணைந்து வேலை செய்தார். சிறிலங்கா வான்படையின் 2007 செஞ்சோலை படுகொலையின் பின் போரை எதிர்ப்பதற்காக “சிறிலங்காவில் சமாதானத்திற்காக அயர்லாந்து முன்னணி” (Irish Forum for Peace in Sri Lanka) என்ற அமைப்பை உருவாக்கினார். முள்ளிவாய்கால் அழிவின் பின்னர், சிறிலங்காவில் சமாதானத்திற்கான அயர்லாந்து முன்னணி அமைப்பும் ஜெர்மனியின் பிரேமன் நகரில் இயங்கும் மனித உரிமை அமைப்பும் ஒழுங்கு செய்த  சிறிலங்காவிற்கான நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் டப்ளின் (2010) பிரேமன் (2013) அமர்வுகளின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டார். தீர்ப்பாயத்தின் இவ்விரு அமர்வுகளும் சிறிலங்கா இனவழிப்பு குற்றம் இழைத்திருக்கிறது என்றும் பிரித்தானியாவும் ஐ-அமெரிக்காவும் இனவழிப்புக்கு துணைபோயிருக்கின்றன எனவும் தீர்ப்புகள் வழங்கின. பேராசிரியர் ஜுட் லால் ஃபெனான்டோ கடந்த 15 வருடங்களாக நாடு செல்ல முடியாததால் அயர்லாந்தில் வாழ்கிறார். அங்கு டப்ளின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி புரிகிறார். சண்டைக்கு பின்னரான நீதிக்கான மையம் (Centre for Post-Conflict Justice) என்ற அமைப்பின் இயக்குனராகவும் இருக்கிறார். ஈழத்தமிழருக்கான சர்வதேச கூட்டொருமையை கட்டியெழுப்புதில் தீவிரமாக இயங்கி வருகிறார்.