முல்லை மாவட்டத்தில் பசியில் வாடும் மாணவர்களின் சோகக் குரல் – கோ.ரூபகாந்

‘ரீச்சர் இன்றைக்கு நான் சாப்பிடல. வீட்டை சமைக்க ஒன்றும் இல்லை. அதனால் அப்படியே வந்து விட்டேன்..!’

யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையில் கூட வன்னியின் அவல நிலை இன்றும் தொடர்கிறது. அதிலும் யுத்தகாலத்தை விட மிகவும் மோசமாக வடக்கின் சில பகுதிகள் தற்போதும் இருக்கின்றது. குறிப்பாக வடக்கில் மீள்குடியேற்றம், வீட்டுத் திட்டம்,தொழில் வாய்ப்பு,அடிப்படை வசதிகள் என பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துவரும் மக்கள் இன்றும் இருக்கிறார்கள்.

இத்தகைய பாதிப்புக்களை வெகுவாக எதிர் நோக்கியுள்ள இறுதிப் போரின் சாட்சியமாகவுள்ள மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டமே. இங்கு நாளாந்தம் ஒரு வயிறு சோற்றுக்காக போராடும் நிலையில் பல குடும்பங்கள் இன்றும் வாழ்கிறார்கள். அதற்கு சான்றாக முல்லைத்தீவு மாவட்டத்தின் சிலபாடசாலைகளில் இடம் பெறும் காலை ஓன்று கூடல் பதிவுகள் சாட்சியங்களாகின்றன.

கடல் வளமும், வயல் வளமும், தென்னை- பனை வளமும் கொண்ட முல்லைத்தீவு மாவட்ட மக்கள் யுத்தம் இடம் பெற்ற காலத்தில் கூட கடற்படையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கரையோர மீன்பிடியில் ஈடுபட்டு வாழ்வை வளமாக நடத்தியவர்கள். அங்குள்ள விவசாய குடும்பங்கள் கூட உரப்பாவனை தடை,கிருமிநாசினி தடை என அரசின் வன்னிக்கான பொருளாதார கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் விவசாயம் செய்து தமது சீவியத்தை மேற் கொண்டவர்கள். ஆனால் யுத்தம் முடிவடைந்து ஆண்டுகள் பல கடந்து அபிவிருத்தி என சொல்லுகின்ற வேளையில் அந்த மாவட்டத்தில் ஒருவயிறு சோற்றை பெற முடியாத நிலை சில வீடுகளில் ஏற்பட்டுள்ளது.

IMG 1387 முல்லை மாவட்டத்தில் பசியில் வாடும் மாணவர்களின் சோகக் குரல் - கோ.ரூபகாந்முல்லைத்தீவின் கொக்கிளாய்,தண்ணீருற்றுää செம்மலை, அளம்பில், வலைஞர்மடம்,தேவிபுரம், நெத்தலியாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளில் தினமும் காலைப் பிரார்த்தனையின் போது 4 தொடக்கம் 5 மாணவ,மாணவிகள் மயக்கமடைந்து விழுகிறார்கள்.

அவர்களை தூக்கிச் சென்று மேசை ஒன்றில் அமர்த்தி தண்ணீர் தெளித்து காற்று விசுக்கும் போது மயக்கம் தெளிந்து அந்த மாணவர்கள் சோர்வுடன் எழும்புகிறார்கள். அவர்களிடம் மயக்கத்திற்கான காரணத்தை வினவும் போது ஒவ்வொரு குடும்பத்தின் பின்னும் உள்ள அந்தசோகம் நிறைந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின்றது.

‘ரீச்சர் இன்றைக்கு நான் சாப்பிடல. வீட்டை சமைக்க ஒன்றும் இல்லை. அதனால் அப்படியே வந்து விட்டேன்”

என அந்த மாணவர்கள் கூறுகின்ற பதில்கள் அந்த ஆசிரியர்களையே ஒரு கணம் கண் கலங்க வைத்துள்ளது. ஒரு காலைப் பொழுது மட்டுமல்ல சிலமாணவர்கள் முதல் நாள் இரவு கூட சாப்பிடாமல் இருந்து விட்டும் பாடசாலை செல்கிறார்கள். அவ்வாறு செல்கிறது அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கான போராட்டம்.

IMG 1355 2 முல்லை மாவட்டத்தில் பசியில் வாடும் மாணவர்களின் சோகக் குரல் - கோ.ரூபகாந்ஆசிரியர்கள் பாடசாலைகளில் தம்மால் முடிந்ததை அந்த மாணவர்களுக்கு வாங்கிக் கொடுத்து விட்டு வகுப்புறைக்குச் அழைத்துச் செல்லும் சம்பவங்கள் கூட நடந்து வருகின்றது. அப்படியான மோசமான நிலையில் முல்லைத்தீவின் சிலபகுதிகள் பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாளாந்த குடும்ப சீவியத்தை மேற் கொள்ள முடியாத நிலையில் இங்கு பல குடும்பங்கள் வாழ்கின்ற போது அரசாங்கம் கூறும் அபிவிருத்தி எங்கு செல்கிறது…? அரசாங்கத்தின் வாழ்வாதார உதவிகள் யாருக்கு வழங்கப்படுகிறது..? எனபல வினாக்கள் இங்கு எழவே செய்கின்றது. வீதிகள் போடுவதும்,கட்டடங்கள் கட்டுவதும் தான் அபிவிருத்தி என்றால் மக்கள் அற்ற ஒருமாயானத்தையே நாம் காண வேண்டிவரும்.

இப் பகுதியில் வாழும் குடும்பங்கள் பல இன்று ஒரு நாள் சீவியத்திற்கு கூட கடற் தொழிலை செய்ய முடியாத நிலையில் உள்ளது. காரணம் இந்திய மீனவர்களின் ஊடுருவல், தென் பகுதி மீனவர்களின் வருகை என நவீன இயந்திர படகுகளின் துணையுடன் முல்லைத்தீவுக்குள் பிரவேசித்து அங்குள்ள மீன்வளத்தை சூறையாடி விட்டுச் செல்கின்றனர். இதனால் இப்பகுதி மீனவர்கள் மீள்வளத்தை பெற முடியாது தவிர்கின்றனர். மீள்குடியேறி மெல்ல மெல்ல தமது வாழ்வை கட்டியெழுப்பும் இவர்கள் போதிய மீன் படாமையால் வருமானம் இன்றி சீவியத்தை போக்க முடியாது அல்லல் படுகிறார்கள்.

IMG 1347 முல்லை மாவட்டத்தில் பசியில் வாடும் மாணவர்களின் சோகக் குரல் - கோ.ரூபகாந்சில பகுதிகளில் சீவல் தொழில் செய்யும் மக்களும் வாழ்கின்றார்கள். தற்போது மதுபானசாலைகளின் வருகை காரணமாக கள்ளுவாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்பது ஒருபுறமிருக்க,அதைவிடமிகவும் முக்கியமான பிரச்சனை போரின் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல ஆயிரக்கணக்கான தென்னைää பனை மரங்கள் அழிக்கப்பட்டு விட்டது.

இதனால் சீவல் தொழில் செய்யும் மக்கள் பலரும் தமது பரப்பரைத் தொழிலை இழந்து வருமானத்தைப் பெற முடியாது போராடும் நிலையில் இருக்கிறார்கள். போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டுகளின் நச்சுப் பதார்தங்கள் கூட அப்பகுதியில் விவசாய நடவடிக்கையின் விளைச்சலைக் கட்டுப்படுத்தியே வருகிறது. இதனால் விவசாயத்தில் கூட போதிய விளைச்சல் இன்றி மக்கள் இன்றும் பல்வேறு வாழ்வாதார சிக்கல்களை எதிர்நோக்கியே வருகிறார்கள்.

இது தவிர,போரின் கோரத் தாண்டவத்தால் பெற்றோரை இழந்து பிறரின் அரவணைப்பில் வளரும் மாணவர்கள், குடும்பத் தலைவனை இழந்துவாழும் பெண் தலைமைத்துவ குடும்பங்களில் உள்ள மாணவர்கள் ஆகியோரின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது.

ஆண்கள் இருந்தும் தொழில் செய்ய முடியாத நிலை ஒரு புறம் இருக்க,பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொழில் இன்றியே வாழும் பரிதாப நிலை தொடர்கிறது. அவர்களுக்கான வாழ்வாதார கட்டமைப்புக்கள் எவையும் இதுவரை ஒழுக்காக அரசாங்கமும் சரி, மாகாணசபையும் சரி செய்யவில்லை. இதனால் நாளாந்த வயிற்றுப் பசியைக் கூட இந்தக் குடும்பங்கள் போக்க முடியாது திணறுகின்றது. வறுமைக்கு மத்தியிலும் படித்து சாதித்து விட வேண்டும் என நினைக்கும் மாணவர்கள் கடும் பசியுடன் பாடசாலை செல்கிறார்கள்.

‘பசி வந்தால் பத்தும் பறந்திடும்” என்பார்கள். அதுபோலவே மாணவர்கள் பசிக்கு மத்தியில் சென்று காலைப் பிரார்த்தனையில் பங்கேற்கின்ற போது பலமாணவர்கள் மயங்குகிறார்கள்.

தொடரும் இந்த அவல நிலைக்கு முடிவுதான் என்ன..? இந்த மாணவர்கள்ää குடும்பங்களின் வாழ்வில் மீண்டும் விருத்தியை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது…? எனபல விடை தெரியாத வினாக்களுடன் இருக்கும் முல்லைத்தீவுக்கு விடிவுதான் எப்போது…?