முல்லைத்தீவில் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிரான பொலிசாரின் வழக்கு தள்ளுபடி

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள பிரதேச சபைக்கு சொந்தமான குழாய் கிணற்றிலிருந்து இராணுவத்தினர் நாளாந்தம் பல லட்சம் லீற்றர் நீரை இராணுவத்தினர் எடுத்துச் செல்கின்றனர். இதனால் அயலிலுள்ள கிணற்றிலுள்ள நீர் மாசடைவது மற்றும் குடிநீரில் மாற்றங்கள் ஏற்படுவது தொடர்பாக மக்கள் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தவராசா அமலனிடம் மக்கள் முறையிட்டனர்.

இதனையடுத்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக குறித்த பகுதியில் அமைதிக்கு பங்கம் விளைவிக்க முற்பட்டதாக தெரிவித்து பிரதேச சபை உறுப்பினர் தவராசா அமலன் மீது முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிசார் திட்டமிட்ட வகையில் வழக்கை பதிவு செய்து முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

31.07 முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ். லொனின்குமார் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகளான கணேஸ்வரன், பிரபல சட்டத்தரணி கங்காதரன் உட்பட பலரும் ஆஜராகியிருந்தனர்.

இந்த சட்டத்தரணிகள், இது மக்களுடைய குறைபாடுகள் தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட விடயமே தவிர இதில் எந்தவிதமான அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளும் இல்லை என்பதை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனால் நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

இது குறித்து கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தவராசா அமலன் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறான திட்டமிட்ட இராணுவம் பொலிசாரின் அடக்குமுறை செயற்பாடுகள் எதிர்வரும் காலங்களிலும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் தாங்கள் ஈடுபடும் போது ஏற்படுத்தக் கூடாது என்ற விடயத்தை தெரிவித்தார்.