முல்லைத்தீவில் படையினருக்கான தனிமைப்படுத்தல் மையங்கள்-மக்கள் எதிர்ப்பு

விடுமுறைக்கு சென்று வருகின்ற இராணுவத்தினரை தனிமைப் படுத்துவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மாதிரி கிராமத்தில் அமைந்திருக்கின்ற பாடசாலை வளாகத்தில் ஒரு முகாமும் அதேபோன்று பிலவுக்குடியிருப்பு பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்களுடைய காணிகளில் இருக்கின்ற பொது கட்டடத்தில் இன்னொரு முகாமும் தெரிவுசெய்து விடுமுறையில் சென்ற இராணுவத்தினர் அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுமுறையில் சென்று வருகின்ற இராணுவத்தினரை 14 நாட்கள் தனிமை படுத்துகின்ற நடவடிக்கை நேற்று முந்தினம் (05-04-2020) முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக மாதிரி கிராமத்தைப் பொறுத்த அளவில் மிக நெருக்கமாக மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் அந்த இடத்தில் இவ்வாறாக நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கலாம் அல்லது ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் விடுமுறையில் சென்று வருகின்ற இராணுவத்தினரை தனிமைப்படுத்த அந்த முகாமை அந்த பகுதியில் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் நேற்று முந்தினம் (05-04-2020) இராணுவத்தினர் கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மக்கள் குறித்த நடவடிக்கை மிகவும் அவசியமானது எமது மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் தொற்று ஏற்படவில்லை இருப்பினும் எவ்வளவே இராணுவ முகாம்கள் உள்ளன அதனைவிட கேப்பாபுலவு விமானப்படை முகாமில் காட்டு பகுதியில் அண்மையில் இந்தியாவில் இருந்து வந்த 203 பேர் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று(06-04-2020) விடுவிக்கப்பட்டனர் அவ்வாறான இடங்கள் இருக்கும் போது ஏன் மக்கள் செறிந்துவாழும் பகுதியில் இவற்றை அமைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியதோடு குறித்த செயலுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.