முத்தையா சகாதேவன் உயிரிழப்பு ; இலங்கை அரசே காரணம் என குற்றச்சாட்டு – பிபிசி

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து, 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சனை இன்றும் தொடர்ந்து கொண்டே வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் இன்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

சிலர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், பலர் மீது இன்றும் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரான கொழும்பைச் சேர்ந்த முத்தையா சகாதேவன் சுகயீனமுற்ற நிலையில், கடந்த 22ஆம் தேதி சிறைச்சாலையிலேயே உயிரிழந்திருந்தார்.

சிறுநீரக பிரச்சனை காரணமாக கடந்த 20 தினங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே முத்தையா சகாதேவன் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்

இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், கொழும்பிலுள்ள அவரது வீட்டில் வைத்து 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த கொலையை செய்ததாக அப்போதைய அரசாங்கம் குற்றஞ்சுமத்தியிருந்தது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் முத்தையா சகாதேவன், பாதுகாப்பு பிரிவினரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2005ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

லக்ஷ்மன் கதிர்காமரின் வீட்டிற்கு அயல் வீட்டில் பணியாற்றிய முத்தையா சகாதேவன், தான் பணிபுரிந்து வீட்டிலுள்ள மரமொன்றின் கிளையை வெட்டி, துப்பாக்கி சூட்டை நடத்துவதற்கு துப்பாக்கித்தாரிக்கு உதவிகளை வழங்கியதாகவே குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட முத்தையா சகாதேவன் மீது 2008ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும், அந்த வழக்கு விசாரணைகள் கடந்த 14 வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே தனது தந்தை உயிரிழந்ததாக அவரது மகள் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

எந்தவித குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படாத நிலையில், முத்தையா சகாதேன் சிறைச்சாலை சீருடையின்றி, சாதாரண உடைகளை அணிந்த வண்ணமே இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனது தந்தையை விடுதலை செய்துக் கொள்வதற்கு அரசாங்க தரப்பினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி உரிய முறையில் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டார்.