முகமாலைப் பகுதி அகழ்வில் சோதியா படை அணியின் இலக்கத் தகடு மீட்பு

முகமாலைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற அகழ்வுப் பணியின் போது விடுதலைப் புலிகளின் மகளிர் படையணியான சோதியா படையணிக்குரிய இலக்கத்தகடும், ஆயுதங்களும் மீட்கப்பட்டன.

கடந்த 22 ஆம் திகதி மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடி அகற்றும் பணியின்போது மனித எச்சங்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் சீருடை, துப்பாக்கி என்பன கண்டுபிடிக்கப்பட்டன.

இதனை அடுத்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அகழும் பணிகள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணபவராஜா நேற்று முன்னிலையில் ஆரம்பமாகின. இதன்போது, சோதியா படையணிக்குரிய இலக்கத்தகடான ஞா.0164 என்ற இலக்கத்தகடு மீட்கப்பட்டது.

அத்துடன், ரி-81 துப்பாக்கி- 1, ரி-56 துப்பாக்கி- 3, ரி-56 மகசின்- 8, ரி-56 துப்பாக்கிக்குரிய ரவைகள் 75, விடுதலைப்புலிகளின் சீருடை என்பன மீட்கப்பட்டன. இவற்றுடன் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண் உறுப்பினர் ஒருவருடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது