மியான்மார் இராணுவம் போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது: அனைத்துலக மன்னிப்புச் சபை

அண்மையில் மியான்மார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையின் போது படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

றோகின்யா பகுதியில் 2017 ஆம் ஆண்டு முஸ்லீம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது மனித உரிமை மீறல்களின் ஈடுபட்ட படை அணியே இந்த ஆண்டும் மீண்டும் றகீன் பகுதியில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இடம்பெற்ற தாக்குதல்களில் பல பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.

படையினர் நீதிக்குப் புறம்பான படுகொலைகள், எழுந்தமானமான கைதுகள், துன்புறுத்தல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் நாள் காவல் நிலையம் ஒன்றை அரகன் இராணுவம் என்ற கெரில்லா அமைப்பு தாக்கி அழித்திருந்தது. இந்த தாக்குதலில் 13 காவல்துறையினர் கொல்லப்பட்டிருந்தனர்.

மிகவும் தரம்வாய்ந்த பயிற்சி பெற்ற கெரில்லா படையினரைக் கொண்ட இந்த அமைப்பு ரகீன் பகுதியில் சுயாட்சி கோரி போராடி வருகின்றது. ஆனால் இந்த தாக்குதலின் பின்னர் அந்த பகுதியில் தொடர்ச்சியாக கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த கெரில்லா அமைப்பை மியான்மார் அரசு பயங்கரவாதிகள் என்றே அழைக்கின்றது. அங்கு இடம்பெறும் தாக்குதல்களினால் 30,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மனிதாபிமான உதவிகளையும் படையினர் தடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

81 பேரின் நேர்காணல்கள், புகைப்பட ஆதாரங்கள் மற்றும் செய்மதிப் புகைப்படங்களின் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களில் இருந்து மியான்மார் படையினரின் மேற்கு பகுதி கட்டளைப்பீடத்தைச் சேர்ந்த 22 மற்றும் 55 ஆவது இலகு காலாட்படையினரே இந்த தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

இந்த படை அணிகளே 2017 ஆம் ஆண்டும் பெருமளவான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள். அதன்போது 70,000 முஸ்லீம் மக்கள் பங்களாதேஸ் இற்கு இடம்பெயர்ந்திருந்தனர். இது ஒரு இன அழிப்பு எனவும் படை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அப்போது ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருந்தது.

ஆனால் அது இடம்பெற்று இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் அதே படை அணிகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவதாக அனைத்துலக மன்னிப்புச்சபையின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய பணிப்பாளர் நிக்கொலஸ் பெக்கலின் தெரிவித்துள்ளார் என எம்.எஸ்.என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“யாரும் எங்களைப் பாதுகாக்க முடியாது” என்ற தலைப்பில் மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் அண்மையில் இடம்பெற்ற 7 தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டும் 29 பேர் காயமடைந்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

myanmar1 மியான்மார் இராணுவம் போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது: அனைத்துலக மன்னிப்புச் சபைகடந்த ஏப்பிரல் மாதம் மியன்மாரின் உலங்குவானூர்தி நடத்திய தாக்குதலில் மூங்கில்களை வெட்டிக்கொண்டிருந்த ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்துலக பேர்க்குற்றவியல் நீதிமன்றத்தின் தலையீட்டை கோருவதுடன், ஆயுத மற்றும் பயணத் தடைகளை கொண்டுவர ஐ.நா முன்வர வேண்டும் எனவும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.