மியான்மாரில் சிறுவர் பாடசாலை மீது எறிகணை வீச்சு – சிறுவர்கள் காயம்

மியான்மாரில் உள்ள றக்கீன் பகுதியில் உள்ள பாடசாலை மீது கடந்த வியாழக்கிமை  மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சில் 19 சிறுவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச படையினருக்கும் சுயாட்சி கோரி போராடி வரும் ஆயுதக் குழுவினருக்குமிடையில் இடம் பெற்ற மோதல்களின் போதே சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் இடம் பெற்று வரும் மோதல்களால் பல பத்தாயிரம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். 2017 ஆம் ஆண்டு இடம் பெற்ற மோதல்களினால் 730,000 முஸ்லீம் மக்கள் றொகின்யா பகுதியில் இருந்து இடம் பெயர்ந்துள்ளனர்.

அரகன் எனப்படும் ஆயுதக் குழுவினரே சுயாட்சி கோரிக்கையை முன்வைத்து ஆயுதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். பாடசாலை மீதான எறிகணைத் தாக்குதலை ஆயுதக் குழுவினரே மேற்கொண்டனர் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஆனால் தம்மிடம் அவ்வாறான பீரங்கிகள் இல்லை என ஆயுதக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை காலை பாடசாலை மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததாக அந்த பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் றொய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இரு தரப்பினரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என மியான்மாருக்கான பிரித்தானிய தூதுவர் தெரிவித்துள்ளார். இந்த மோதல்களில் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இரு தரப்பினரும் பொது மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.