மாயமான ராடர்கள் விபரம் அறியாது திணறும் சிறிலங்கா அரசு

2014ஆம் ஆண்டு திருத்த வேலைகளுக்காக சீனாவிற்கு அனுப்பப்பட்ட ராடர் றிசீவர் மற்றும் அன்ரெனா ஸ்கானர் ஆகியன தொலைந்து போயுள்ளதாக, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களிலிருந்து அறியமுடிகின்றது.

நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவிற்கு சிறிலங்கா விமானப்படையின் சட்டப் பணிப்பாளர் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைந்து போன கருவிகளின் பெறுமதி 98மில்லியன் ரூபா என்றும் இவை F – 7 போர் விமானத்தில் பொருத்தப்பட்டிருந்தவை என்றும் கூறியுள்ள விமானப்படை சட்டப் பணிப்பாளர், இவை  ஏதாவதொரு தீவிரவாதக் குழுவின் கையில் சிக்கினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும், அத்துடன் சிறிலங்கா விமானப்படையினருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு எழுப்பிய கேள்வியை அடுத்தே சிறிலங்கா விமானப்படை இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

குற்ற விசாரணைத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு, உள்ளுர் சரக்கு அனுப்புநரான எம்.எஸ் கெயார் லொஜிஸ்டிக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், அந்தக் கருவிகள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. நிறுவன இணையத்தளத்துடன் தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. அதற்கான தொலைபேசியும் இயங்கவில்லை. இந்த நிறுவனத்தின் ஊடாகவே பழுதடைந்த ராடர், றிசீவர் மற்றும் அன்ரெனா சீனாவிற்கு அனுப்பப்பட்டன.

இந்தக் கருவிகளின் பெறுமதி 536,000 டொலர் ஆகும். இவற்றை சீனாவிற்கு அனுப்புவதற்கும் சிறிலங்கா விமானப்படை மில்லியன் கணக்கான ரூபாக்களை செலவு செய்துள்ளது.

உள்ளுர் சரக்கு அனுப்புநர் இந்தக் கருவிகள் அடங்கிய பொதியை 2014 ஏப்ரல் மாதம் எயார் ஏசியா சரக்குப் பிரிவில் கையளித்துள்ளார். இப்பொதி கோலாலம்éர் ஊடாக சீனாவிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் இந்தப் பொதி சீனாவிற்கு சென்றடையவில்லை. இது தொடர்பாக விசாரித்த போது சரக்கு அனுப்புநர் சரியான பதிலை தரவில்லை.

கருவிகள் காணாமல் போய் ஒரு ஆண்டு கழிந்த நிலையில் 2015 ஜுன் மாதம், என்ன நடவடிக்கை எடுக்கலாம் என விமானப்படையின் சட்டப் பணிப்பாளர், சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டிருந்தார்.  இந்தப் பொதியை கண்டுபிடிக்க கோலாலம்éர் தூதரகத்தின் உதவியை நாடியிருந்தது. ஆனால் அவர்களாலும் இதை கண்டுபிடிக்க முடியவில்லை.

கோலாலம்éரிற்கும், சீனாவிற்கும் இந்தக் கருவிகனை அனுப்ப விமானப் போக்குவரத்து முன்பதிவை ஏற்படுத்தியிருந்தாலும், விமானத்தில் அந்தப் பொதி ஏற்றப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

விமானப்படை நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, இழப்பீட்டை எடுக்கத் தவறிய அதிகாரியிடமிருந்து 493,438.38 ரூபா (காணாமல் போன பொருட்களின் மொத்த மதிப்பில் ஐந்து சதவீதம்) வசூலிக்க விமானப்படை தளபதி பரிந்துரைத்துள்ளார். மீதமுள்ள 98,194,092.87 ரூபாவை எம்.எஸ்.கெயார் லொஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்தும் கோர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, இந்த நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் வைக்கவும், வேறு எந்த அரசு நிறுவனங்களும் இதனுடன் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கு தடை விதித்தும், நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.