மானுடத்தின் எசமான்கள் (பாகம்–05)-தமிழில் ந.மாலதி

மேலே குறிப்பிட்ட தலைப்பில் பேராசிரியர் நோம் சொம்ஸ்கி எழுதிய கட்டுரையில் இன்றைய உலக அரசியல் பற்றி ஒரு அறிமுகம் தருகிறார். இதை ஐந்து பிரிவுகளாக வெளியிட்டு வருகிறோம்.  1) மேற்குலக அதிகாரத்திற்குள்ள அழுத்தங்கள் 2) இன்றைய கிழக்குஆசியா சவால்கள் 3) இன்றைய கிழக்குஐரோப்பிய சவால்கள் 4) இன்றைய இஸ்லாமியஉலக சவால்கள், 5) இரண்டாவது சக்தி

இது இறுதி பாகம். இதில் மக்கள் போராட்டத்தின் சக்தியை பேராசிரியர் விளக்குகிறார். போராட்டங்களால் எதுவித பலனும் இல்லை என்று நினைப்பவர்களுக்கு இது பாடமாக அமையும்.

இரண்டாம் சக்தி

கடந்த ஒரு சந்ததியாக தொடர்ந்த நவதாராளவாத திட்டங்கள், செல்வத்தையும் அதிகாரத்தையும் மிகச்சிலரின் கைகளில் கொடுத்து சனநாயகம் முறையாக செயற்படுவதை தடுத்திருக்கிறது. அதேநேரம் இந்நவதாராளவாத திட்டங்களுக்கு பலமான எதிர்ப்புகளும் தோன்றியிருக்கின்றன. முக்கியமாக லத்தீன் அமெரிக்காவில் தோன்றியிருக்கிறது. உலக அதிகார மையங்களிலும் எதிர்ப்புகள் தோன்றி இருக்கின்றன.

இரண்டாம் உலக போருக்கு பின்னரான நம்பிக்கை தரும் ஒரு மாற்றமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றம் இருந்தது. ஆனால் இதுவும் பொருளாதார பின்னடைவின் போது போடப்பட்ட கடுமையான சிக்கன திட்டங்களால் நிலைகுலைந்து போனது. இச்சிக்கன திட்டங்களை சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார நிபுணர்களும் கண்டித்திருக்கிறார்கள். அரசியல்-பொருளாதார முடிவுகள் பிரசல்ஸ்சில் இருக்கும் மையத்திற்கு விடப்பட்டதால், சனநாயகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

முடிவுகள் எடுக்கும் அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தேசிய அரசியல்வாதிகளிடம் இல்லாமல் போய்விட்டது. சந்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைப்புக்களும் கம்பனிகளுமே முடிவு செய்பவர்களாக உள்ளார்கள். இது நவதாராளவாத கொள்கைகளுக்கு அமைவாகவே நடக்கிறது. இதானால் அதிருப்தியடைந்த மக்கள் மையநீரோட்ட கட்சிகளிலிருந்து விலகி, இடதுசாரி கட்சிகளுக்கும் வலதுசாரி கட்சிகளுக்கும் மாறுகிறார்கள்.

இதே காரணங்களுக்காக இதுபோலவே ஐ-அமெரிக்காவிலும் நடைபெறுகிறது. ஐ-அமெரிக்காவில் இது நடைபெறுவது ஐ-அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐ-அமெரிக்காவின் உலகளாவிய அதிகாரத்தால் உலகத்தில் எங்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.2 2 மானுடத்தின் எசமான்கள் (பாகம்–05)-தமிழில் ந.மாலதி

“வன்முறை அரசியல்” என்ற தனது நூலில் வில்லியம் போக், “ஐ-அமெரிக்க விடுதலை போராட்டத்திலிருந்து” தற்கால ஆப்கான் மற்றும் இராக்கி போராட்டம் வரை பரிசீலிக்கிறார்.

ஐ-அமெரிக்க விடுதலை போராட்டத்தின் தலைவராகவும் பின்னர் அதன் முதல் சனாதிபதியாகவும் இருந்த வாஷிங்டன் போராட்டத்தின் போது உடனிருந்து போராடிய போராளிகளை வெறுத்தார். போராளிகளை புறம்தள்ளி வைப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார்.

இதனால் அதுவரை போராளிகளால் – இன்று இவர்களை நாம் பயங்கரவாதிகள் என்கிறோம் – பல வெற்றிகளை கண்ட போராட்டம், பல கட்டங்களில் தோல்வியை தழுவும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. உண்மையிலேயே இது தோல்வியில் முடிந்திருக்கும். பிரான்ஸ் தலையிட்டுதான் புரட்சியை காப்பாற்றியது.

இம்மாதிரியான போராட்டங்களில் ஒரு பொதுத்தன்மையை வில்லியம் போக் அவதானிக்கிறார். இப்போராட்டங்கள் வெற்றிபெற்ற பின்னர், அதற்கிருந்த பரந்துபட்ட மக்கள் ஆதரவு கரைந்து போகும். போராட்ட தலைவர்களாக இருந்தவர்கள், கொரில்லா முறையிலும் “பயங்கரவாதத்தாலும்” போரை வென்ற போராளிகளை, “கீழ்மட்டத்தவர்கள் அழுக்கர்கள்” என்று புறம்தள்ளுவார்கள். ஏனெனில் இவர்கள் வர்க்க நலன்களுக்கு சவாலாக இருப்பார்கள் என்ற பயம்.

காலம் காலமாக, மேல்மட்டத்தவர்களின் “கீழ்மட்டத்திலுள்ளவர்கள்” பற்றிய வெறுப்பு வெவ்வேறு வடிவங்களை எடுத்திருக்கிறது. அண்மைக் காலங்களில் இந்த வெறுப்பானது, நிலைமையை ஏற்றுக்கொள்ளும் சனநாயக மிதவாதிகளாக இவர்களை இருக்குமாறு கேட்கும் ஒரு வடிவத்தை எடுத்திருக்கிறது.

சில சமயங்களில் அரசுகள் மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்கும். இது பெரிய அரசியல் மையங்களில் ஆத்திரத்தை உண்டாக்கும். 2003 இல் இடம்பெற்ற ஒன்றை இதற்கு சிறந்த உதாரணமாக சொல்லலாம்.

இராக் நாட்டை முற்றுகையிடும் நடவடிக்கையில் துருக்கியும் இணைய வேண்டும் என்று ஐ-அமெரிக்க புஸ் அரசு கேட்டது. 95 வீதமான துருக்கி மக்கள் இதை எதிர்த்தார்கள். துருக்கி அரசு இம்முறை மக்களின் கருத்துக்கு அடிபணிந்த போது ஐ-அமெரிக்க அரசு ஆத்திரமடைந்தது. துருக்கி அரசு பொறுப்பாக நடக்கவில்லை என்று திட்டியது. மக்களின் எதிர்ப்புகளை கணக்கிலெடுக்காத புஸ் ஆட்சி “சனநாயத்தை பரப்புகிறது” என்றெல்லாம் புகழ்ந்தார்கள்.

துருக்கி மக்கள் மட்டுமல்ல உலகளாவிய எதிர்ப்பும் பலமாகவே இருந்தது. சர்வதேச கருத்து கணிப்புகளின்படி பிரித்தானிய-ஐ-அமெரிக்க இராக்கின் மீதான முற்றுகைக்கு உலகத்தில் எங்குமே 10 வீதத்திற்கும் அதிகமான ஆதரவு இருக்கவில்லை. உலகிலேயே முதன்முறையாக ஒரு ஏகாதிபத்திய அரசின் நடவடிக்கைக்கு அது ஆரம்பிக்க முன்னரே கடுமையான எதிர்ப்பும் போராட்டங்களும் கிளம்பின. நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் ஒரு ஊடகவியலாளர்,  இன்றும் உலகில் இரண்டு சக்திகள் உண்டு. ஒன்று ஐ-அமெரிக்கா மற்றது உலக மக்கள் கருத்து என்று எழுதினார்.20marantiwar 1 மானுடத்தின் எசமான்கள் (பாகம்–05)-தமிழில் ந.மாலதி

ஐ-அமெரிக்காவில் போர்களுக்கு எதிரான போராட்டங்கள் பல தசாப்தங்களுக்கு முன்னரே, வியட்நாம் போரின் போதே தோன்றிவிட்டது. 1967 இல் போருக்கு எதிரான போராட்டங்கள் ஒரு சக்தியாக திரண்ட காலத்தில் வரலாற்றாசிரியர் பெர்னார்ட் ஃபோல் “வியட்நாம் என்ற ஒரு வரலாற்று கலாச்சாரமே முற்றாக அழிக்கப்பட போகிறது. அதன் கிராமப்புறங்கள் மிகப்பெரும் இராணுவ யந்திரத்தின் கீழ் நசுக்கப்படுகிறது” என்று எச்சரித்தார்.

அப்போருக்கு எதிரான போராட்டத்தின் சக்தியை ஐ-அமெரிக்காவால் புறந்தள்ள முடியவில்லை. இதுபோல றொனால்ட் ரேகன் மத்திய-அமெரிக்காவில் போர் நடத்தும் திட்டத்துடன் ஆட்சிக்குக்கு வந்த போதும் போராட்டத்தின் சக்திளை இவரால் புறந்தள்ள முடியவில்லை. இருந்தும் போரின் உக்கிரம் மோசமானதாகவே இருந்தது. மத்திய-அமெரிக்கா அதிலிருந்து இன்னும் மீளவில்லை. வியட்நாம் போருக்கு எதிரான “இரண்டாம் சக்தியின்” போராட்டம் காலம் பிந்தியே ஆரம்பித்ததால் விடயட்நாமில் போரின் தாக்கம் பலமடங்கு மோசமாக இருந்தது.

இராக் போருக்கு எதிரான பலமான மக்கள் போராட்டங்களால் இதை தடுக்க முடியவில்லையே என்று பலர் இன்று வாதிடுவார்கள். இந்த வாதம் தவறு என்றே எனக்கு படுகிறது. இப்போரின் கொடூரங்கள் மோசமாவையே. ஆனால் இதையும்விட இது மோசமாக இருந்திருக்கும். 40 ஆண்டுகளுக்கு முன்னர் போருக்கு எதிரான போராட்டங்கள் இல்லாத காலத்தில் ஐ-அமெரிக்க சனாதிபதிகள் எடுத்த போர் நடவடிக்கைகளை இராக் போரின் போது இருந்த போராட்டங்களின் காரணத்தால் பிற்கால ஐ-அமெரிக்க சனாதிபதிகளால் எடுக்க முடியவில்லை என்பதே உண்மை.

                                            முற்றும்

 ஈழத்தமிழரும் இரண்டாம் சக்தியும்

மானுடத்தின் எசமான்கள் என்ற தொடரில் பேராசிரியர் நோம் சொம்ஸ்கி எழுதிய உலக அரசியல் அறிமுகத்தின் தமிழாக்கத்தை பார்த்தோம். அதன் இறுதி பாகத்தில் உலகின் இரண்டாம் சக்தியாக (Second Superpower) மக்களின் கருத்தையும் போராட்டங்களையும் போராசியர் விபரிக்கிறார். அவர் மக்கள் போராட்டங்களின் வெற்றியாக குறிப்பாக லத்தீன் அமெரிக்க போராட்டங்களையும் உலக அதிகார மையங்களில் இடம்பெறம் போராட்டங்களையும் காட்டுகிறார்.

லத்தீன் அமெரிக்காவில் ஐ-அமெரிக்க தலையீடுகளின் வரலாறு 200 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. அதுமட்டுமல்ல, உலகிலேயே முதன்முதலில் குடியரசுகளாக விடுதலைபெற்ற நாடுகளாக லத்தீன் அமெரிக்க நாடுகள் உள்ளன.

1825ம் ஆண்டில் லத்தீன் அமெரிக்க நாடுகள் எல்லாம் சுதந்திரம் பெற்று விட்டன. ஏனெனில் லத்தீன் அமெரிக்காவை அடிமைப்படுத்திய நாடுகளான போத்துக்கல்லும் இஸ்பெயினும் இக்காலத்திலேயே தமது உலகளாவிய பலத்தை இழந்துவிட்டன.

பிரித்தானிய காலனிய நாடுகள் மேலும் நூறு ஆண்டுகள் பொறுக்க வேண்டி இருந்தது. இரண்டாம் உலக போரின் அழிவுகளே பிரித்தானிய காலனிகளுக்கு சுதந்திரம் பெறும் வாய்ப்புகளை கொடுத்தது. இவ்விரண்டும், அதாவது தொடர்ச்சியாக அண்மை நாடான ஐ-அமெரிக்கவின் கொடூரமான தலையீடும், ஏனைய காலனிய நாடுகளை விட நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சுதந்திரமடைந்ததும், லத்தீன் அமெரிக்க போராட்டங்களின் வலிமைக்கான சில காரணங்கள்.

இக்காலத்தில் லத்தீன் அமெரிக்க மக்களின் விழிப்புணர்வை கூர்மைபடுத்தும் எழுத்துக்களையும் செயற்பாடுகளையும் பல லத்தீன் அமெரிக்க புத்திசீவிகளும் எழுத்தாளர்களும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். இவர்களில் மிகவும் பிரபலமானவர் போலோ ஃபிராரி. இவரை போன்றவர்களின் முயற்சிகளும் லத்தீன் அமெரிக்க போராட்டங்களை கூர்மையடைய செய்திருக்கின்றன.

எமது தமிழீழ போராட்டங்களும் இம்மாதிரியான ஒரு நீண்ட வரலாற்றுப் பாதையை எடுக்கும். ஈழத்தமிழர்களிடம் பூகோள அரசியல் விழிப்புணர்வும், அதோடு ஒட்டிய எமது ஆயுத போராட்டத்தின் நியாயமும் சமூகநீதியும், அதற்கான எழுத்துக்களும், தமிழீழ போராட்டத்தை உலகளாவிய போராட்டங்களுடன் இணைப்பதும் எமது வரலாற்று பாதையில் நடக்க வேண்டியவை.

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–04)-தமிழில் ந.மாலதி

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–03) தமிழில்- ந.மாலதி

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–02) தமிழில்- ந.மாலதி

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–01) தமிழில் ந.மாலதி