மனித உரிமை மீறல்களை மேற்கொண்டவர்களுக்கு உயர் பதவிகள் – அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம்

பயங்ககரவாதத் தடுப்புச்சட்டத்திற்கு பதிலாக வேறு ஒரு சட்டமூலத்தை கொண்டுவருவது என்ற தனது வாக்குறுதியை சிறீலங்கா நிறைவேற்ற வேண்டும் என அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதன் தென்னாசியாப் பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளதாவது:

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு பதிலாக பரிந்துரை செய்யப்பட்ட சட்டமூலத்தை கைவிடப்போவதாக சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா தெரிவித்துள்ளார்.

அந்த சட்டமூலம் ஐக்கிய நாடுகள் சபையினதும், ஐரோப்பிய ஒன்றியத்தினதும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது.

அதுமட்டுமல்லாது, மனித உரிமை செயற்பாடுகளைப் பாதிக்கும் நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டு வருகின்றார். போரின் போது பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு அதிகளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர் பாதுகாபபுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறான பலர் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை மற்றும் பொது அமைப்புக்களும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுமக்கள் புலனாய்வுத்துறையின் அதிகாரியாக படையில் உள்ளவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பதவி விலகவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை மைத்திரிபால சிறீசேன அரசு 2015 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டிருந்தது. ஆனால் அதனை கைவிட தற்போதைய அரசு தீர்மானித்துள்ளது.

முன்னைய அரசின் செயற்பாடுகளுக்கு அமைவாகவே ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவுக்கான ஜி.எஸ்.பி வரிச்சலுகையை மீண்டும் வழங்கியிருந்தது. ஆனால் அது வழங்கப்பட்டதற்கான நிபந்தனைகள் தற்போது மீறப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.