மணல்வாகன வழித்தட அனுமதி நீக்கத்தால் வடக்கின் சுற்றுச்சூழலுக்குப் பேராபத்து – பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை

மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்குரிய வழித்தட அனுமதியைப் புதிய அரசாங்கம் நீக்கியுள்ளதால் வடக்கில் மணற்கொள்ளை பெரும் வேகம் எடுத்துள்ளது.

இவ்வாறு கட்டுப்பாடற்ற முறையில் மணல்வளம் சுரண்டப்படுவதால் விரைவில் மணல்வளத்துக்குப் பற்றாக்குறைவு ஏற்படவுள்ளதோடு, வடக்கின் சுற்றுச்சூழலுக்கும் பேராபத்து நிகழவுள்ளது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அவசியமாக இருந்த வழித்தட அனுமதியை அரசாங்கம் அண்மையில் நீக்கியுள்ளது. இது தொடர்பாக பொ. ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,
மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்குரிய வழித்தட அனுமதியைப் புதிய அரசாங்கம் நீக்கியுள்ளதால் வடக்கில் மணற்கொள்ளை பெரும் வேகம் எடுத்துள்ளது. இவ்வாறு கட்டுப்பாடற்ற முறையில் மணல்வளம் சுரண்டப்படுவதால் விரைவில் மணல்வளத்துக்குப் பற்றாக்குறைவு ஏற்படவுள்ளதோடு, வடக்கின் சுற்றுச்சூழலுக்கும் பேராபத்து நிகழவுள்ளது.

மணல்வளம் கட்டுமானத்துக்கும் அபிவிருத்திக்குமான வளம் மாத்திரம் அல்ல் கரையோர மணற்குன்றுகள் கடல் நீர் உட்புகுவதைத் தடுக்கும் அரண்களாகப் பயன்படுவதோடு இ நிலத்தடி நீர் மட்டத்தின் அளவிலும் பாரிய செல்வாக்குச் செலுத்தி வருகின்றது.

நிலத்தின் அடியில் கடல் நீரில் மிதந்து கொண்டிருக்கும் நன்னீர் வில்லையின் தடிப்பை மணற்குன்றுகளின் உயரமே தீர்மானிக்கின்றது. மணற்குன்றுகளின் உயரம் குறையக்குறைய நிலத்தின் கீழே நன்னீர் வில்லையின் தடிப்புக் குறைந்து, அவ்விடத்தைக் கடல்நீர் ஆக்கிரமிக்கின்றது. மண்கும்பான் என்ற நன்னீர் கிராமம் இன்று குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு ஆளாகியிருப்பதன் பின்னணி இதுதான்.

இதற்கு முன்னரும் சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெற்றிருந்தாலும், அதனை ஏற்றிச் செல்வதற்கான வழித்தட அனுமதி மணற்கொள்ளையை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்தி வைத்திருந்தது. தற்போது வழித்தட அனுமதி தேவையற்றதாக்கப்பட்டு காவல்துறையின் சோதனைக் கெடுபிடிகள் இல்லை என்றதும் சட்டவிரோத மணல் அகழ்வு விஸ்வரூபம் பெற்றுள்ளது. இது மண்கும்பானில் மணல் ஏற்றிய உழவூர்திக்குத் தீ வைக்கும் அளவிற்கு கடலோரக் கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அபிவிருத்தியில் ஏற்படும் தாமதங்களையோ அல்லது வேறு காரணங்களையோ அடிப்படையாகக்கொண்டு அரசாங்கம் வழித்தட அனுமதியைத் தேவையற்றதாக்கும் முடிவை எடுத்திருக்கலாம். இம்முடிவு தென் இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு ஏற்புடையதாகவும் இருக்கலாம். ஆனால், நிலத்தடி நீரை உயிர் ஆதாரமாகக்கொண்ட வடக்கின் சுற்றுச்சூழலுக்கும், வடக்கின் நிலைத்த அபிவிருத்திற்கும் இம்முடிவு எவ்வகையிலும் பொருத்தம் அற்றதாகும்.

நடைமுறையில் இருக்கும் மணல் அகழ்வுக்கான அனுமதியினால் மட்டும் மணற்கொள்ளையையோ, அதன் காரணமாக ஏற்ப்படவுள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைகளையோ ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. இதனைக் கருத்திற் கொண்டு, பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் வழித்தட அனுமதி நீக்கத்தினால் வடக்குக்கு ஏற்படவுள்ள பாதிப்புகளை அரசுக்கு எடுத்து சொல்லி மீளவும் அதனை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு உடனடியாக ஆவன செய்யவேண்டும் – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.