மக்களின் உரிமைகள் தொடர்பில் ஆராய ஐ.நா சிறப்பு தூதுவர் சிறிலங்கா வருகை

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் கில்மென்ற் நைலெற்சொசி வோல் நாளை 18 ஆம் நாளில் இருந்து 26 ஆம் நாள் வரையிலும் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக றொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்காவில் மக்கள் அமைதியாகவும் உரிமைகளுடனும் வாழ்கிறார்களா என்பது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஐ.நா சிறப்புத் தூதுவர் 9 நாள் பயணமாக சிறீலங்கா வருகின்றார்.

அவர் கொழும்பு, வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு பயணங்களை மேற்கொள்வதுடன், அரசாங்க, ஊடகத்துறை, பொது அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

புனித ஞாயிறு தாக்குதலின் பின்னர் இடம்பெறும் எனது பயணம் சிறீலங்காவில் வாழும் மக்களின் சுதந்திரத்தை மேலும் உறுதிப்படுத்தும் என ஐ.நா தூதுவர் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் மற்றும் அவசரகாலச்சட்டம் என்பன எவ்வாறு மக்களின் சுதந்திரத்தை பாதித்துள்ளது என்பது தொடர்பில் அவர் ஆய்வுகளை மேற்கொள்வதுடன், எதிர்வரும் வருடம் ஜுன் மாதம் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 44 ஆவது கூட்டத்தொடரில் அவர் தனது அறிக்கையையும் சமர்ப்பிக்கவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.