மகிந்த – மோடி சந்திப்பில் பேசப்பட்டவை

நான்கு நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா சென்றுள்ள சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று(08) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து உரையாடினார்.

இந்தியா சென்றுள்ள சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, இன்று இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராஜபக்ஸ பின்னர் அங்கிருந்து ஹைதரபாத் இல்லத்திற்கு சென்று அங்கு பிரதமர் மோடியை சந்தித்தார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பிரதமர் மோடி, “இந்தியாவும் இலங்கையும் அண்டை நாடுகள். மற்றும் நெருங்கிய நண்பர்கள். நாம் பொதுவான பல பிணைப்புகளை பகிர்ந்து கொள்கிறோம். நமது பிராந்தியத்தில் பயங்கரவாதம் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு இரு நாடுகளுமே தகுந்த பதிலடியை கொடுத்துள்ளோம். இனியும் பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்போம்.

இன்றைய பேச்சுவார்த்தையில் இலங்கை உடனான கூட்டு பொருளாதார திட்டங்கள் குறித்தும், வர்த்தக முதலீட்டு உறவை மேம்படுத்துவது குறித்தும் விவாதித்தோம். இருநாட்டு மக்களுக்கும் இடையேயான நேரடி தொடர்புகளை அதிகரிக்கவும், சுற்றுலாவை ஊக்குவிக்கவும் நாங்கள் விவாதித்தோம்” எனத் தெரிவித்தார்.

மேலும் தமிழர்களுக்கு சமஉரிமையும், நீதியும் கிடைக்க உறுதி செய்யுமாறு இந்தியா வந்துள்ள ராஜபக்ஸவை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.